Pages

Monday, October 12, 2020

எஸ்பிபி ❤️ பாடகன் சங்கதி பாகம் 9 மா மரத்தின் கீழே இருந்து அழுத எஸ்பிபியும் அவரைத் தன் மகனாக ஆக்கிக் கொண்ட இசையமைப்பாளரும்


“மா மரத்தின் கீழே இருந்து
அழுது கொண்டிருந்தேன்
அதற்குச் சிறிது நேரம் முன்பு தான்
நான் பாடல் பதிவுக்காக வந்திருந்த
அந்த ஒலிப்பதிவுக் கூடத்தில்,
இசையமைப்பாளர் சத்யம்
‘திறமை எதுவுமில்லாமல் பாட வந்துடுறாங்க’
என்று என்னைக் கண்டபடி திட்டி விட்டார்”

இப்படியாகத் தன் நினைவுகளை விரித்து முன்னர் ஹிந்து ஆங்கில நாளேட்டுக்குச் சொல்லியியிருக்கிறார் எஸ்பிபி.
அந்தச் சம்பவத்தை அவர் மேலும் விபரிக்கிறார்.

எஸ்பிபி பாட வந்து ஓராண்டு கழிந்து தெலுங்கில் முதன் முறை அப்போது பிரபலமாக இருந்த இசையமைப்பாளர் சத்யம் அவர்களிடம் “பல மனசுலு” படத்துக்காக எல்.ஆர்.ஈஸ்வரியுடன் பாட்டுப் பாடும் வாய்ப்புக் கிடைக்கிறது.

அப்போது ஏற்கனவே புகழ் பூத்த பாடகியாக விளங்கிய எல்.ஆர்.ஈஸ்வரிக்கு ஈடு கொடுத்து சத்யம் அவர்களது எதிர்பார்ப்புக்கேற்ப என்னால் பாட முடியாததால் தான் அவர் எரிச்சல்அடைந்து திட்டினார்.


அந்த அவமானத்தில் நான் அந்த கோல்டன் ஸ்டூடியோ இசைக்கூடத்துக்கு வெளியே இருந்த மாமரத்தின் கீழே உட்கார்ந்து அழுதேன். படத்தின் தயாரிப்பு நிர்வாகிகளாக இருந்த பூர்ண சந்திரராவ், Y.V.ராவ் ஆகியோர் (இவர்கள் பின்னாளில் பெரும் தயாரிப்பாளர்கள்) என்னை ஆறுதல்படுத்தி சத்யம் அவர்களிடம்
மீண்டும் அழைத்துப் போனார்கள்.

“இசைக்குழுவின் முன்னால்
இந்த இளம் பையனை அவமானப்படுத்தாதீர்கள்”

என்று அவர்கள் வேண்டவும்,

“நீங்க கண்டவரையும் பாட
அழைச்சிட்டு வருவீங்க
நான் எப்படி இவனை வச்சுப்
பாடல் ஒலிப்பதிவு செய்வது?”

என்று மீண்டும் திட்டியவாறே எனக்கு இன்னொரு சந்தர்ப்பம் கொடுத்தார் இசையமைப்பாளர் சத்யம். இதுதான் அவரோடு என் முதல் சந்திப்பு என்கிறார் எஸ்பிபி.

“இசையமைப்பாளர் சத்யம் அவர்களுக்குப் பிள்ளைப் பாக்கியம் இல்லை. அவர் என்னை தெலுங்கில் “கொடுக்கு” (மகன்) என்றே அழைப்பார்.

“என் மகன் எனக்கு வேணும்
அவன் தான் என் குரல்”

என்று இசையமைப்பாளர் சத்யம் அவர்கள் சொல்லும் அளவுக்கு நான் அவ்விதம் ஆகிப்போனேன், அவர் பாடல்களில் நான் இருக்கணும் என்று எதிர்பார்ப்பார் என்றார் எஸ்பிபி.

இந்தச் சம்பவத்தைப் படித்த போது
“அவமானங்கள் இன்றி
வெகுமானங்கள் இல்லை”
என்ற வாசகமே நினைவில் வந்தது.

ஆரம்பத்தில் இவ்விதம் எவ்வளவு அவமானங்களைத் தாண்டி எஸ்பிபி தன்னைப் புடம்போட்டு இன்று ஒரு மாபெரும் கலைஞனாக வியாபித்து நிற்கிறார் பாருங்கள்.

சத்யம் இசையில்
“ye divilo virisina parijathamo”
https://youtu.be/k9uaEwK_CcI

தன் திரையுலக வாழ்வின் திருப்பமாக அமைந்தது என்கிறார் எஸ்பிபி.

தனக்கு இந்துஸ்தானி இசையைக் கற்பித்ததிலும், பாடல்களை மெருகேற்றுப் பாட வைத்ததிலும் சத்யம் அவர்கள் பெரும் பங்காற்றியிருக்கிறார் என்கிறார்.

இசையமைப்பாளர் சத்யம் தெலுங்கு, கன்னடத்தின் மிகப் பெரிய இசையமைப்பாளராகக் கோலோச்சியவர்.
தமிழில் முடிசூடா மன்னன், ராமன் பரசுராமன் ஆகிய படங்களுக்கும் இசை கொடுத்தவர்.

இவற்றில் முடிசூடா மன்னன் படத்தில் வந்த

“ஓ....காதல் போதை கண்ணில் ஏறக்
காயும் வெண்ணிலா”
https://youtu.be/wnqedwsfwyI

ஆகா எவ்வளவு அற்புதமான எஸ்பிபி & எஸ்.ஜானகி காதல் கிறக்கம், ராஜா காலத்துக்கு முந்திய ஜாலம்.

பி.சுசீலாவுடன் “தொடங்கும் புது உறவு”
https://youtu.be/mOyIjroN7pE
அப்போதையை வானொலிப் பிரபலம்.

ராமன் பரசுராமனில் சுசீலாவுடன் எஸ்பிபி பாடிய“கல்யாண மாலை” பாடலும் இசையமைப்பாளர் சத்யத்தைத் தமிழில் நிலை நிறுத்தும்.

தமிழில் பிரேம பாசம் என்றொரு படம் சிவகுமார் & ரேவதி நடிப்பில் வெளியானது. அந்தப் படத்தின் இசை கங்கை அமரன்.
“பாசம் பிரேம பாசம்” https://youtu.be/4nFMsuIa_1Y
என்றொரு சோகப் பாட்டுடன்
“ வண்ணம் இந்த வஞ்சியின் வண்ணம்” (எஸ்பிபி & எஸ்.ஜானகி) https://youtu.be/__UMCWEIzNk என்ற பாடலும் இருக்கும்.

ஆனால் “வண்ணம் இந்தவஞ்சியின் வண்ணம்” பாடலின் மூலம்
“Banna nanna ulavina banna”
https://youtu.be/NQr05AKuFug
என்ற கன்னடப் பாடலாகும்.

கன்னடத்தில் விஷ்ணுவர்த்தன், சுஹாசினி நடிப்பில் வெளிவந்த பந்தனா என்ற திரைப்படத்தில் எம்.ரங்கராவ் என்ற இசையமைப்பாளர் இசையில் வெளிவந்த பாடலாகும். இந்தப் படம் சிறந்த பிராந்திர மொழித் திரைப்படமாகத் தேசிய விருது கண்டதும் குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளர் ரங்காராவின் நேரடித் தமிழ்ப் படமான “குடும்பம் ஒரு கோயில்” குறித்து முன்னர் எஸ்பிபி & சிவாஜி கணேசன் கூட்டு குறித்த பகிர்வில்சொல்லியிருக்கிறேன்.

மலரே என்னென்ன கோலம்
எதனால் என் மீது கோபம்”
எண்பதுகளின் காதலர் கீதமாய்ப் புகழ் பூத்த பாடல் “ஆட்டோ ராஜா” படத்தில் இடம்பெற்றது.
ஆனால் அந்தப் பாடலின் மூலமெட்டும் இசையும் சங்கர் - கணேஷோ அல்லது இளையராஜாவோ அல்ல, ராஜன் - நாகேந்திரா என்ற இரட்டை இசையமைப்பாளர்கள் தான் பாடலின் ஆக்க கர்த்தாக்கள். “ஆட்டோ ராஜா” படம் தமிழுக்கு வருவதற்கு முன்பே கன்னடத்தில் தயாரான போது அந்தப் படத்தின் மூல இசையை ராஜன் - நாகேந்திரா இரட்டையர்கள்வழங்கியிருந்தார்கள்.

கன்னட ஆட்டோ ராஜாவில் இடம்பெற்ற “மலரே என்னென்ன கோலம்” பாடலின் மூலவடிவம் இதுதான்.
https://youtu.be/HZYBpj5RtAE
அதே போல் “கன்னி வண்ணம் ரோஜாப்பூ” https://youtu.be/IWPPfGNm9Qo
அந்தக் காலஇலங்கை வானொலியின் பிரபல பாடலது. இதுவும் ராஜன் - நாகேந்திராவின் மூல இசை.

யார் இந்த ராஜன் - நாகேந்திரா என்று இளையவர்கள் ஐயம் எழுப்பக் கூடும். இவர்கள் உடன் பிறந்த சகோதரர்கள், கன்னடத்தில் கொடி கட்டிப் பறந்த இசையமைப்பாளர்கள். கன்னடம் மட்டுமன்றி தெலுங்கு, தமிழ், சிங்களம் உள்ளிட்ட ஏராளம் பிராந்திய மொழிகளில் 375 படங்கள் வரை செய்திருக்கிறார்கள்.
காலவோட்டத்தில் பிரிந்து விட்டார்கள்.

தமிழில் ராஜன் - நாகேந்திரா இரட்டையர் இசையமைத்த படங்களில் “எல்லோரும் வாழவேண்டும்”, “வீட்டுக்கு வீடு வாசல்படி” போன்ற படங்களோடு கமல்ஹாசன் நடித்த “இருநிலவுகள்” திரைப்படமும் குறிப்பிடத்தக்கது.


“Sommokadidi Sokokadidhi” என்ற சிங்கிதம் சீனிவாசராவின் தெலுங்குப் படமே தமிழில்இரு நிலவுகள் ஆனது.

“தொட வரவோ தொந்தரவோ” (எஸ்பிபி & எஸ்.ஜானகி)
https://youtu.be/qvDEkyI82eI

“ஆனந்தம் அது என்னடா” (எஸ்பிபி தனித்து)
https://youtu.be/CNSXlPlRkdw

ஆகிய பாடல்கள் ராஜன் - நாகேந்திரா இசைக் கூட்டில் இலங்கை வானொலி யுகத்தில்கோலோச்சியதை மறக்க முடியுமா?
ஒரு சமயம் eTV தெலுங்கு வழி “சிரிமல்லி நீவே விரிஜல்லுதாவே" பாட்டை முதன் முறைகேட்டு ஆஹா என்னவொரு அதி மதுரப் பாட்டு இது என்று கொண்டாடினேன். அதுஎஸ்பிபி மேடையில் பாடிய இந்தப் பாட்டு
https://youtu.be/vk71SBN7o3Q
அதன் மூலப் பாட்டு இது https://youtu.be/rw99Be_Wia8 அப்போது நண்பர் Alex Pandian வந்து இந்தத் தெலுங்குப் பாட்டின் நதி மூலமான கன்னடப் பாடல்
https://youtu.be/R58a5Ht4-Ok
ஐப் பகிர்ந்து கொண்டார்.

இப்படியாக ராஜன் - நாகேந்திரா கூட்டணியின் பாடல்களைத் தேடித் தேடிக் கேட்டால் இன்னொரு அற்புதச் சுரங்கம் கிட்டும்.

இளைய சகோதரர் நாகேந்திரா கடந்த 2000 ஆம் ஆண்டு காலமாகி விட, மூத்தவர் ராஜன் நேற்று அக்டோபர் 11 ஆம் திகதி இவ்வுலகை விட்டுப் பிரிந்து விட்டார்.

இவ்விதம் மற்றைய மொழி இசையமைப்பாளர்களைக் கொண்டாடும் போதும் அங்கேஎஸ்பிபி இருப்பது தான் தனிச் சிறப்பு.

கானா பிரபா

#SPB #பாடும்_நிலா

0 comments: