Pages

Thursday, October 8, 2020

எஸ்பிபி ❤️பாடகன் சங்கதி பாகம் 8 பன்னிரெண்டு வயசு இசையமைப்பாளருக்குப் பாடிய எஸ்பி


“உடலும் இந்த உயிரும்
உனக்கே அர்ப்பணம்
உலகம் நம்மை எழுதும்
கவிதை சாசனம்”

https://youtu.be/yv0FaFw8B3c

மறக்க முடியுமா இந்தப் பாட்டை.


இளைய தளபதி விஜய் நாயகனாக அறிமுகமாக அமைந்த “நாளைய தீர்ப்பு” படம் அவரதுதந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்க வந்தது.
இங்கேயும் நாயகன் விஜய்க்கான குரலாக எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களது இந்தப்பாடல் அன்று தொட்டு இன்று வரை பண்பலை வானொலிகளின் பிரியத்துக்குரிய பாட்டாகிவிட்டது.

“உடலும் இந்த உயிரும்” பாடல் சோக மெட்டிலும் எஸ்பிபி குரலில் உண்டு

https://youtu.be/AItiypcDf34

தனது 12 வது வயதில் இசையமைப்பாளராகிச் சாதனை படைத்தவர் M..M.ஶ்ரீலேகா. தாசரி நாராயண ராவ் இன் "நன்னாகாரு" படத்துக்கு அவர் இசையமைத்த போது அவருக்கு வயசு 12.
"எஸ்பிபி அவர்களை நான் பாட அழைத்த போது அவருக்கு இசையமைப்பாளர் என்று வந்து விட்டால் எம்.எஸ்.வியும் ஒன்று 12 வயதுச் சிறுமியும் ஒன்று தான்"
என்று தான் உணர முடிந்தது என்று தன் அஞ்சலிக் குறிப்பில் பதிவாக்கியிருக்கிறார் இந்த எம்.எம்.ஶ்ரீலேகா.

இவர் பாகுபலி புகழ் இயக்குநர் ராஜமெளலி மற்றும் M..M.கீரவாணி (மரகதமணி) ஆகியோரின் சகோதரி முறையானவர்.

அவர் தமிழுக்கு வந்தார் மணி மேகலை என்ற பெயரில். இந்த மணிமேகலை தான் "நாளைய தீர்ப்பு" படத்தின் இசையமைப்பு.

இங்கே இன்னொரு இசையமைப்பாளரும் வந்தார். ஆனால் இசையமைக்க அல்ல. பாடலாசிரியராக.

அவர் தான் பின்னாளில் இதே எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய “பெரியண்ணா” படத்தின்இசையமைப்பாளர் பரணி.

எஸ்.ஏ.சந்திரசேகரிடம் வாய்ப்புக் கேட்கப் போன பரணி இட்டுக் கட்டிய பாடலை ரசித்து அவரைத் தன் மனைவி ஷோபாவிடமும் மகிழ்ச்சியோடு அறிமுகப்படுத்தியவர் “நாளையதீர்ப்பு” படத்தில் பாட்டெழுத வைத்தார். அந்தப் பாடல் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் ஒலிக்கும்

“ஆயிரம் எரிமலை மாணவர் விழிகளில் எரியும்”

https://youtu.be/xJtmq0sgaSY

பின்னர் பெரியண்ணா படத்தின் வழியாக ஏழு வருடங்களுக்குப் பின் இசையமைப்பாளராக அறிமுகமான பரணி நடிகர் விஜய் குரலில் மூன்று பாடல்களையும் பாட வைத்தார்.

"ஏ தன்னேனே தாமரைப் பூவு
மாமா தள்ளாடும் தண்ணியிலே"

https://youtu.be/zzXidXN1lYU

பெரியண்ணா படத்தில் இடம்பெற்ற துள்ளிசைப் பாடல்களில் இருந்து விலகி அற்புதமான தெம்மாங்குப் பாடலாக எஸ்பிபி & சித்ரா குரல்களில் அந்தப் பாடல் வெகு பிரபலம்.

ஒரு பாடலாசிரியராகவும் எஸ்பிபி பாடலுடன் அறிமுகம், ஒரு இசையமைப்பாளராக அறிமுகமான போதும் எஸ்பிபியைப் பாட வைக்க ஒரு வாய்ப்பு என்று இரட்டை அதிஷ்டம்பரணிக்கு.

இசையமைப்பாளர் பரணி தொடர்ந்து “பார்வை ஒன்றே போதுமே” படத்தின் சூப்பர் ஹிட்பாடல்களோடு திரையிசைப் பிரியர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்ந்த அளவுக்குத் தொடர்ந்து நிற்க முடியவில்லை. ஆனாலும் ஒரு பெரிய வெற்றிப் படத்தில் முத்திரை பதித்தும் காட்டினார். அது சக்தி சிதம்பரம் இயக்கிய “சார்லி சாப்ளின்”

அந்தப் படத்தில் ஹரிஷ் ராகவேந்திராவோடு கூட்டணி போட்டு எஸ்பிபி

“அவ கண்ணப் பார்த்தா
ஐயோ அம்மா”

https://youtu.be/1DWLjw_MFSg

பாடலில் தன் கல கல உரையாடலோடு களிப்பூட்டிக் கலக்குவார்.

“அந்திப்பூவே நீ வந்ததால்
நெஞ்சில் ஏதோ ஆனதே”

https://youtu.be/f5Hyjt4COZ0

அந்தக் காலத்து ஆல் இந்தியா ரேடியோ ஞாயிறு நேயர் விருப்பம் பிரியராக இருந்தால் இந்தப் பாட்டை நீங்கள் கடக்காமல் போயிருக்க முடியாது.

“பூவே உன்னை நேசித்தேன்” திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஏகாந்தனுக்கு முகவரி எழுதி வைத்தது எஸ்பிபி குரல். இந்தப் பாடல் எல்லாம் ஒரு அறிமுக இசையமைப்பாளருக்கு எஸ்பிபி குரல் எவ்வளவு தூரம் இன்றியமையாதது என்பதைச்சான்று பகிரும்.

ஒரு புது இசையமைப்பாளரை அந்நியம் ஆக்காமல் அந்நியோன்யம் ஆக்கி விடும் எஸ்பிபிகுரல்.

இசையமைப்பாளர் ஏகாந்தன் இசையில் “அம்மா பொண்ணு” படத்தில் “எந்தன் காதல்நாயகி” பாடலை மின்மினியோடு எஸ்பிபி பாடியிருக்கிறார்

https://youtu.be/WaRPyKeQW08

அத்தோடு

“சித்திரப் பூவிழிக் கண்ணா
செந்தமிழ்ப் பாட்டொன்று சொல்லவா”

https://youtu.be/z4nSc9xGus4

பாடலை இதுவரை கேட்காதவர்கள் உடனே கேட்டு விட்டு வாருங்கள். எஸ்பிபிக்கே எழுதி வைத்த இதமான ராகம்.

“சுதியோட ஒண்ணா சேருடா
தக தள்ளி தாளம்
சுகமான ராகம் பாடுடா”

https://youtu.be/JFim27Kbmqk

என்றொரு துள்ளிசை அந்தக் கால ரெக்கார்டிங் பார்களில் முழங்கித் தள்ளியது நினைவுக்கு வருகிறது.

எஸ்பிபியை எவ்வளவு அழகாகப் பல்வேறு பரிமாணங்களில் பயன்படுத்த முடியுமோ அவ்வளவுக்கு நியாயம் செய்திருப்பார் "அம்மா பொண்ணு" படத்தில் இசையமைப்பாளர் ஏகாந்தன். தொடந்து “குரோதம்” புகழ் பிரேமின் வீரமணி படத்துக்கும் இசையமைத்த ஏகாந்தன் இளையராஜா, ரஹ்மான் அலை கூட இல்லை தேவா போன்றோரின் அலையால் அடித்துச் செல்லப்பட்டார்.

இந்த மாதிரி இசையமைப்பாளர்களின் அடையாளத்தை இன்றுகாட்டி நிற்பது எஸ்பிபி அவர்களுக்காகப் பாடிக் கொடுத்தவை.


கானா பிரபா

படங்கள் நன்றி : எம்.எம்.ஶ்ரீலேகா இணையம்

0 comments: