Pages

Wednesday, October 7, 2020

எஸ்பிபி ❤️பாடகன் சங்கதி பாகம் 7 எஸ்பிபியை வேண்டிய பாடலும் எஸ்பிபி குரல் மாதிரி வர வேண்டாம் என்ற பாட்டும்காதல்.....காதல் காதல்

கடிதம....வரைந்தேன் உனக்கு 

வந்ததா வந்ததா....வசந்தம் தந்ததா

அசரிரீ போலப் பின் தொடரும் அந்தக் காதலன் குரலை எஸ்பிபி குரலோடு பொருத்திப் பார்க்க முடிகிறதா? அப்படியென்றால் நீங்கள் இசையமைப்பாளர் செளந்தர்யன் மனசுக்கு நெருக்கமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்,

ஆமாம், அந்தப் பாடல் முதலில் எஸ்பிபியை வைத்து தான் தன்னுடைய முதல் பாடலாக இசையமைக்கத் தீர்மானித்தாராம் சேரன் பாண்டியனின் அறிமுகமான செளந்தர்யன்.

ஆனால் எஸ்பிபி வெளியூரில் இருந்ததால் ஒலிப்பதிவு தாமதப்படவே லாப்சன் ராஜ்குமார் & செர்ணலதா குரலில் அந்தப் பாடல் பதிவாகி வெளியாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாம்.

சரி இப்போது போய் அந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள், அந்தக் குரலை எஸ்பிபி ஆகக் கற்பனை செய்து பாருங்கள். என்னதான் ஏறகனவே சூப்பர் ஹிட்டடித்த அந்தப் பாடல் எஸ்பிபி ஐப் பொருத்திப் பார்க்கும் போது “என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன்” ஆக இன்னும் உயர்ந்து நிற்கும்.

ஆனாலும் விட்டாரா செளந்தர்யன். சேரன் பாண்டியனில் இன்னொரு பாட்டை எஸ்பிபி இற்காகவே எழுதி வைத்து விட்டார். அது தான்

 “வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே

  என் வானம் நீ தான் நிலவே வெண்ணிலவே…

https://youtu.be/y-PfZVnR-Tc

ஒரு தேர்ந்த ஆட்டக்காரர் ஆனந்த்பாபுவிற்கு காதல் சோகத்திலும் ஒரு வேக இசையைப் போட்டு “வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே”.

இந்தப் பாடலை அந்தக் காலத்து ரெக்கார்டிங் பார்களில் கேட்ட போது ஒலி அதிர்வில் ஸ்பீக்கர்களே துள்ளியதை ரசித்திருக்கிறோம். எஸ்.பி.பி தன் பங்குக்கு காதல் சோகத்தைக் குரலின் வழியே உணர்வைக் கடத்துவார். 

“வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே”

அடிகளில் ஒரு ஏக்கம்

“என் வானம் நீ தான் நிலவே வெண்ணிலவே”

உடைந்து போய்க் குறுகிப் போய் விடுவார்

இப்படியாகப் பாடலின் வேக இசையோடு தன் உணர்வின் பரிமாணங்களைக் காட்டுவார்.

“எட்டு மடிப்புச் சேலை….

 இடுப்பில் சுத்தப்பட்ட ஒரு சோலை

பட்டம் கொடுத்தது எனக்கு

இன்னும் பாதியில் நிக்குதே வழக்கு”


https://youtu.be/aGxJeJssNE8

கொழும்பு நகரின் பரபரப்பான வாழ்க்கைத் தளத்தில் அதிகாலையில் இருந்து இருள் கவியும் வரை வேலை செய்து ஓய்ந்த நாட் கூலிக்க்காரர் இந்தப் மாதிரியான பாடல்களை உரக்க ஒலிக்க விட்டுத் தம் களைப்பைக் களையும் நடுச்சாமங்களை வாடிக்கையாகக் கண்டு கேட்டதுண்டு.

முதல் சீதனம் படத்தில் இந்தப் பாடல் ஒலிப்பதிவு செய்ததும் எஸ்பிபி செளந்தர்யனிடம் வந்து ஒற்றை வயலின் வாசித்த ஆள் யாரென்று கேட்டுப் பாராட்டி விட்டு இன்னொன்று சொன்னாராம்.

“எனக்குக் கொடுக்கும் பாடல்களை இந்த மாதிரி ஏழு சுதியில் கம்போஸ் பண்ணாதீங்க” 

என்று. இதைக் குறிப்பிட்ட செளந்தர்யன் எஸ்பிபி நினைத்திருந்தால் பாடல் ஒலிப்பதிவுக்கி முன்பே தடை போட்டிருக்க முடியும். ஆனால் இசையமைப்பாளர் மனம் கோணக் கூடாது என்று பாடல் ஒலிப்பதிவு முடிந்த பின்பே அதைச் சுட்டிக் காட்டிய அரிய பண்பைச் சிலாகித்து நெகிழ்ந்தார் ஒரு பேட்டியில்.


செளந்தர்யனின் பேர் சொன்ன படங்களில் முதல் சீதனம் படத்துக்குத் தனியிடம் உண்டு. தொண்ணூறுகளின் காதல் சோகப் பாடல்களில் “எட்டு மடிப்புச் சேலை” பாடல் தவறாது இடம் பெறும். எஸ்.பி.பியின் உருக்கமான குரலும் செளந்தர்ய இசையும் வெகு அற்புதம்.

கிராமத்துப் பேருந்துகளின் மாறாத பெயிண்ட் போல ஒட்டியிருக்கும் பாடல்களில் ஒன்றாக

“ஓ நெஞ்சமே உயிரே தஞ்சமே” 

https://youtu.be/Iyf976axywM  பாடலும் ஒட்டிக் கொண்டு முதல் சீனத்தை மறவாது வைத்திருக்கிறது.

முதல் சீதனம் படத்தில் “பட்டு வண்ண சேலை தான்” பாடலையும் எஸ்பிபி பாடியிருக்கிறார். முந்திய இரண்டுக்கும் வேறுபட்ட துள்ளிசை அது.

நடிகர் ராமராஜன் நாயகனாக அரிதாரம் பூசத் தொடங்கியதிலிருந்து இசைஞானி இளையராஜா மட்டுமன்றி கங்கை அமரன், தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார், சிற்பி என்று பிற இசையமைப்பாளர் இசையிலும் நடித்துள்ளார். இவர்கள் எல்லோரும் ராமராஜனுக்குக் கொடுத்த பாடல்கள் சிறப்பாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் செளந்தர்யனும் தேர்வானது ஆச்சரியமானதொரு அதிஷ்டத்தையும் அவருக்குக் கொடுத்தது. ஏனெனில் கோபுர தீபம் படத்தின் பாடல்கள் அனைத்துமே வெளிவந்த காலத்தில் கேட்டு ரசிக்கப்பட்டன. அத்தோடு சுகன்யாவோடு ஜோடி சேர்ந்ததோடு இயக்கத்தையும் கவனித்துக்  ராமராஜனுக்கு ஒரு கவனிப்பைக் கொடுத்தது இப்படம். அப்போது சரிந்து போய்க் கொண்டிருந்த ராமராஜன் மார்க்கெட்டுக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்த படம் “கோபுர தீபம்” எனலாம்.


“உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்

உன்னையும் என்னையும் பிரிச்ச உலகமில்லையே”

https://youtu.be/88YaaTdxONI

எஸ்.பி.பி & அனுராதா ஶ்ரீராம் பாடிய இந்தப் பாடல் கோபுர தீபத்தில் உச்சம் எனலாம். 

இதே படத்தில்

“கங்கை காயும் காய்ந்து போக மாட்டேன்” 

https://youtu.be/M3L9Zk_p15Q


சோகப் பாடலை எஸ்.பி.பி பாட, ஹம்மிங் ஆக ஸ்வர்ணலதா பயன்பட்டிருப்பது புதுமை.

இசையமைப்பாளர் செளந்தர்யன் & கே.எஸ்ரவிகுமார் இணைந்த 

“புத்தம் புதுப் பயணம்” படத்தில் எஸ்.பி.பி, மலேசியா வாசுதேவன் அணி செய்த பாட்டு 

“ஏ பெண்ணே” என்று விடாமல் எஸ்பியியோடு தன் பயணத்தைத் தொடர்ந்தார்.

கோபுர தீபம் கொடுத்த வெற்றியால் ராமராஜன் செளந்தர்யனோடு இணைந்த படம் “சீறி வரும் காளை” இதில் “ரே ரே ரெட்டைக் கிளி” என்ற சோகப் பாடலை எஸ்பிபிக்குச் சேருமாறு பார்த்துக் கொண்டார். பொன் மானைத் தேடி படத்தில் செளந்தர்யன் கூட்டணியில் எஸ்பிபிக்கு இரண்டு பாடல்கள்.

“மத்தாளம் கொட்டுதடி மனசு

  இது மல்லியப்பூ மணக்குற வயசு”


https://youtu.be/qXdd_YrDXQA


சிந்து நதிப் பூ படத்தில் இடம் பெற்ற எஸ்பிபி & ஸ்வர்ணலதா பாடிய தெம்மாங்குப் பாடலை மறந்து விட முடியுமா?

இந்தப் பாடலில் உங்க குரல் மாதிரி இருக்கக் கூடாது என்று செளந்தர்யன் வேண்டுகோள் வைத்தாராம். 

“அப்ப நான் எதுக்கு” என்று கிண்டலடித்து விட்டு செளந்தர்யன் மற்றைய இசைப்பணிகளில் கவனத்தைத் திருப்பும் சமயம் ஒன்றரை மணி நேரத்தில் பாடலைப் பாடிக் கொடுத்து விட்டுக் கிளம்பி விட்டாராம் எஸ்பிபி. கூடவே அந்தப் பாடலின் ஆரம்பத்தில் ஒலிக்கும் அழைப்புக் குரல் கூட செளந்தர்யனின் வேண்டுகோளில் எஸ்பிபியே படத்தின் கதாபாத்திரமாக அச்சொட்டாகப் பாடிக் கொடுத்ததாம்.


இசையமைப்பாளர் செளந்தர்யன் தானே பாடலாசிரியராகவும் முதல் படத்தில் அறிமுகமான வகையில் இன்னொரு தனித்துவமும் அவருக்குண்டு. எஸ்பிபி கூட "வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே" பாடல் யார் எழுதினாங்க என்று கேட்டாரா?


"கன்னித் தமிழோ

கம்பன் கவியோ....."


https://www.youtube.com/watch?v=h1g7KbSSB6M


சூப்பர் குட்ஸ் பாசறையில் அறிமுகமான இன்னொரு இசையமைப்பாளர் மனோரஞ்சன் இசையில் எஸ்பிபி பாடிய பாடல் "அபிராமி திரைப்படத்துக்காக இடம் பெற்றது. ஆனால் துரதிஷ்டம் அருமையான பாடல்களைக் கொடுத்தும் மனோரஞ்சன் என்ற அந்த இசையமைப்பாளரை விக்கிப்பீடியா ஈறாக மறைத்து இசை தேவா என்றே குறிப்பிடுகின்றன.


இது போல இன்னொரு இசையமைப்பாளர் வருகிறார் அவர் இசையமைப்பாளராக அன்றி பாடலாசிரியராகவே அறிமுகமாகி ஏழு வருடங்களுக்கும் பின்னால் தான் இசையமைப்பாளராகும் வாய்ப்புக் கிட்டியது. அவர் யார் என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம்.


கானா பிரபா


நன்றி இங்கே அலங்கரிக்கும் ஒளிப்படத்தை எடுத்தவர் நண்பர் Siva Ruban Sivalingam கனடாவில் எஸ்பிபி இசை நிகழ்வின் பிரத்தியோகப் படப்பிடிப்பாளர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.0 comments: