Pages

Monday, October 5, 2020

எஸ்பிபி பாடகன் சங்கதி பாகம் 5 - பல்லவிக்கும் முதல் பாட்டு சரணுக்கும் முதல் பாட்டு பாடிய எஸ்பிபி1998 ஆம் வருஷம் நான் அப்போது மெல்பனில் படித்துக்கொண்டிருந்தேன். முதன்முறையாக சரண் இசை நிகழ்ச்சி ஒன்றுக்காக வருகிறார். வானொலிப்பேட்டி ஒன்றில் அறிவிப்பாளர் சரணைப் பார்த்து " நீங்க பாடிய முதல் பாட்டு பற்றி சொல்லுங்களேன்" என்று கேட்டபோது தனக்கு முதல் பாட்டு கிடைத்த சுவையான அனுபவத்தைப் பகிர்ந்தார் ஆனால்  அந்தப் பாடலை மட்டும் மறந்தே போய்விட்டார், மெட்டை மட்டும் முணுமுணுக்கிறார். அப்போது வானொலி நேயராக மட்டும் இருந்த நான், தொலைபேசியில் அழைத்துப் பாடல் பற்றிய விபரத்தைச் சொல்கிறேன். அடுத்த நாள்  மெல்பர்ன் இசைக்கச்சேரி மேடையில் "பிரபா தான் என் முதல்பாட்டை ஞாபகம் வெச்சிருந்து சொன்னார் அவருக்கு என்னோட நன்றி" என மறக்காமல் நன்றி பாராட்டினார் :-)

சரணுக்கு முதல் பாட்டு எப்படிக் கிடைத்தது என்று அவர் அப்போது சொன்னது இதுதான்.

1997 ஆம் வருஷம், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய நேரம் அது. ஒரு நாள் எஸ்.பி.பி பாடல் பதிவுக்காக இளையராஜாவின் ஒலிப்பதிவு கூடம் செல்ல வேண்டும் ஆனால் ஆஸ்தான கார்ச்சாரதி வரவில்லை. எஸ்.பி.பி.சரணே காரை ஓட்ட பிரசாத் ஸ்டூடியோ செல்கிறார்கள்.

அங்கே எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்காகக் காத்திருந்த இளையராஜா, நீண்ட நாட்களுக்குப் பின் சரணைக் கண்டதும் குசலம் விசாரிக்கிறார். திடீரென வந்த யோசனையில் 

"இந்தப்பாடலில் பாலுவுடன் நானும் பாடுறேன், 

நீயும் சேர்ந்து நம்ம கூடப் பாடிடு" 

என்று ராஜா, எஸ்.பி.பி.சரணை அழைக்கிறார். கரும்பு தின்னக் கூலியா? சரணும் மகிழ்வோடு தன் தந்தை மற்றும் ராஜாவுடன் சேர்ந்து தன் முதற்பாடலான 

"உனக்கொருத்தி பொறந்திருக்கா" 

https://www.youtube.com/watch?v=lLAeI8THtPk

என்ற பாடலை புண்ணியவதி திரைப்படத்துக்காக, காமகோடியன் பாடல் வரிகளைப் பாடுகின்றார். 

"மின்னாம மின்னுறா மீனாட்சி அம்மனா" 

என எஸ்.பி.பி சரண் பாட, 

"சபாஷ்" என்பார் ராஜா, அவரை வாழ்த்துமாற்போலப் பாடலில். 

இதுதான் எஸ்.பி.பி.சரண் பாடகராக வந்த கதை. எழுபதுகளில் இருந்த எஸ்பிபி குரல் போல ஒரு அப்பாவித்தனமான, பிஞ்சுக்குரல் சரணுடையது. இந்தப் பாடலில் இரண்டு ஆளுமைகளோடு அவருக்குப் பாடக் கிடைத்ததெல்லாம், அதுவும் எந்த வித முன்னேற்பாடுமின்றிக் கிடைத்தது பெரிய வரம்.

இவர் பின்னாளில் ஏதோவொரு வகையில் பாடகராக வந்திருக்க முடியும் என்றாலும் இந்த மாதிரி சுளையான திடீர் வாய்ப்பு கிட்டியிருக்குமா தெரியவில்லை. புண்ணியவதி படத்தில் மேலும் அற்புதமான பாடல்கள் இருந்தாலும், துரதிஷ்டவசமாக இதன் தயாரிப்பாளர் கொலையால் படம் வெளிவராமலேயே முடங்கிப்போனது.

"காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால் 

சின்ன தகரம் கூட தங்கம் தானே"

எஸ்பிபி அவர்களின் மறைவின் போது நடிகர்கள் மொழி கடந்து தமக்காக எஸ்பிபி பாடிய முத்தாய்ப்பான பாடல் ஒன்றோடும் அஞ்சலி செலுத்தியிருந்தார்கள். அப்படி பிரபுதேவா தனது அஞ்சலியில் பகிர்ந்த பாட்டு இது. காதலன் படத்தில் வந்த இந்தப் பாடலுக்கு இரண்டு விசேஷங்கள் உண்டு. 

அதில் ஒன்று, தானே நடித்துத் தனக்காகக் குரல் கொடுக்கும் எஸ்பிபி. இதற்கு முன்னர் சிகரம், பாட்டுப் பாடவா உள்ளிட்ட படங்களிலும் இதே தோரணையில் இருந்தாலும் இங்கே ஒரு அப்பா ஸ்தானத்தில் இருந்து பாடுவார்.

இன்னொன்று எஸ்பிபி மகள் பல்லவிக்கு முகவரி கொடுத்த முதல் பாட்டு இது. தொடர்ந்து இதே ஆண்டு "செவ்வானம் சின்னப் பெண் சூடும் மல்லிகை ஆகாதோ" பாடலை பவித்ரா படத்திலும் மனோவுடன் கூடப் பாடுவார். எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் சகோதரி எஸ்.பி சைலஜாவிற்கு இளையராஜாவால் ஆரம்பத்திலிருந்து பாடும் வாய்ப்புகள் அதிகம் கிட்டியது போல, எஸ்.பி.பி மகள் பல்லவிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாய்த்திருக்கிறார். காதலிக்கும் பெண்ணின் கைகள் (காதலன்) படப்பாட்டில் தந்தையுடன் சேர்ந்து பாட வாய்ப்புக்கிட்டியது இவருக்கு. ஜீன்ஸ் படத்தில் உன்னிகிருஷ்ணனுடன் "ஹைர ஹைர ஐரோப்பா" வரிசையில் பவித்ராவில் இந்தப் பாட்டு. ஏ.ஆர்.ரஹ்மான் அதிகம் முன்னுறுத்தியும் தொடர்ந்தும் நிறையப் பாடவில்லை இவர். 

எஸ்.பி.பல்லவியை திரையிசையில் தனித்துவமான பாடகி என்றெல்லாம் உயர்த்த முடியவில்லை என்றாலும், அப்பாவித்தனம் ஒட்டிய அந்தக்குரலில் ஏனோ ஈர்ப்பு இருக்கிறது. குறிப்பாக "செவ்வானம் சின்னப்பெண் சூடும்" பாடல் அவருக்குக் கிடைத்த அருமையான வாய்ப்பு. மனோவை முந்திக் கொண்டு இவர் பாடும் போது கொடுக்கும் நுணுக்கமான சங்கதிகளைக் கவனித்தால் நீங்களும் என் கட்சியில் சேர்ந்துகொள்வீர்கள். இதற்காகவே இவர் இன்னும் பாடியிருக்கலாமே என்ற பொய்க் கோபமும் எனக்குண்டு.

"காதலிக்கும் பெண்ணின் கைகள்" பாடலில் கூட "உனக்கொருத்தி பொறந்திருக்கா" பாடல் போலவே இடையில் இருந்து தான்பல்லவியின் குரல் ஒலிக்கும். இது இன்னொரு நுணுக்கமான சங்கதி.
இன்னொன்று "காதலிக்கும் பெண்ணின் கைகள்" பாடலில் எஸ்பிபியும், பல்லவியும் சேர்ந்து கொடுக்கும் அந்த ஹம்மிங் ஆஹா ஆஹா தேனமுது அல்லவோ? இந்தப் பாடலில் கூட சரண் உதித் நாராணயணனுக்குப் பதில் பாடியிருந்தால் இன்னும் புதுமை கிட்டிருக்கும்.

சரணுக்குக் கிடைத்த "உனக்கொருத்தி பொறந்திருக்கா" பாடலும் சரி எஸ்பி பல்லவிக்குக் கிடைத்த "காதலிக்கும் பெண்ணின் கைகள்" பாடலும் சரி. காதலிக்காகக் குழுவாகப் பாடும் கோஷ்டி கானமாக எதேச்சையாக அமைந்ததும், இளையராஜா & ஏ.ஆர்.ரஹ்மான் என்று இரு பெரும் ஆளுமைகள் வழியாக அந்த வாய்ப்புக் கிட்டியதெல்லாம் திரையிசையின் அபூர்வம் எனலாம்.

"மழை தருமோ என் மேகம்
மயங்குதம்மா எண்ணங்கள்
தோகைக்குத் தூதுவன் யாரோ
தோள் தொட்ட தென்றலடி 
தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன
பொன் வண்டே.....?"

https://www.youtube.com/watch?v=10w5cjfhn6Q

மறக்க முடியுமா இந்தப் பாடலை? 

"மனிதரில் இத்தனை நிறங்களா" படத்துக்காக ஷியாம் அவர்களின் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாட, அவரின் சகோதரி எஸ்.பி.சைலஜாவின் ஹம்மிங் ஒலிக்கும். தான் பாடகியாக அறிமுகமானது இந்தப் பாடலில் தான் என்றும், அது எதேச்சையாக அமைந்த காரியம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார் எஸ்பி.சைலஜா.

ஆக எஸ்பி.சைலஜா, எஸ்பி.பல்லவி, எஸ்பி சரண் ஆகியோருக்கு பிள்ளையார் சுழிப் பாடல்கள் எஸ்பிபியோடு அமைந்தது ஒரு புதுமை.

"எங்க அப்பா ரொம்பக் குறும்புக்காரர்
1979 ஆம் ஆண்டில் அவர் யூ எஸ் இல் இசை நிகழ்ச்சிக்குப் போன போது குடும்பத்தில் இருந்து நாங்க யாரும் அந்தப் பயணத்தில் இல்லை. யூ எஸ் போய் விட்டு வந்த அப்பாவின் சூட்கேசில் என்ன வாங்கிக் கொண்டு வந்திருக்கிறார் என்று அம்மா பார்க்க, அதற்குள் wine glasses மட்டும் இருந்தன.

"என்ன இது" என்று அம்மா வி நோதமாகப் பார்த்துக் கொண்டே கேட்க

"இது அவ்வளவு சீக்கிரம் உடையாத glasses" 
என்று அப்பாவித்தனமாக எஸ்பிபி சொல்லவும் வீடே போர்க்களமானது என்று சரண் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். 
பக்கத்தில் இருந்த பல்லவியும் இதைக் கேட்டு ஆமோதித்தவாறே விழுந்து விழுந்து சிரித்தார்.

எஸ்பிபி அஞ்சலியில் பாடகர் பிறைசூடன் உட்படப் பலரும் சரணை 
"இனி விளையாட்டுத்தனத்தை மூட்டை கட்டவும்"
என்று சொன்ன போது நிறைவுரை செய்ய வந்த சரண்
"எங்க அப்பா தான் இறக்கும் வரை விளையாட்டுத்தனமாகவே, ஜாலியாக இருந்தவர் அதையே நமக்கும் சொல்லிக் கொடுத்தார்" என்று நெகிழ வைத்தார்.

"உங்க வாழ்க்கையில் பின்னோக்கிப் போய்ப் பார்த்து 
ஏதாவது ஒன்றை மாத்தணும்னா எதை மாற்றுவீங்க?
ஏன்னா சரண் கூடச் சொல்லியிருந்தார் காலை ஆறு மணி கால்ஷீட்டெல்லாம் இருந்ததில்லை ஆனா அப்பாவுக்காக அது வந்துச்சு, அவர் எங்களோட இருந்த நேரம் வெகு குறைவு என்று"

இப்படி ஒரு கேள்வியை ஒரு பேட்டியில் எதிர் கொண்ட போது எஸ்பிபி சொன்னார்

"நான் என்னோட கடந்த காலத்தை மாற்ற விரும்பல
அது கடினமானதும், அழகிய தருணங்களாலும் ஆனவை
விட்டுக் கொடுப்புகளும், இழந்தவைகளும் அதிகம் இருந்தாலும்
அந்த வாழ்க்கை இனிமையானது இப்போது கிடைக்கும் கேக் ஐச் சுவைப்பது அவ்வளவு சாதாரணமானது அல்ல"

என்று நேர் சிந்தனையோடு சொன்னார்.
கூடவே இன்னொன்றையும் சொன்னார்

"நான் என்னுடைய பேரப் பிள்ளையின் ஆரம்பக் கல்வி graduation day க்கு 
என்னோட எல்லா நிகழ்ச்சிகளையும் ரத்துச் செய்து விட்டு, புது சூட் எல்லாம் எடுத்து குடும்பத்தோடு போனேன். அதைப் பார்த்து என் மருமகன் கூடக் கண் கலங்கினார்.
"எங்களோட பல்கலைக்கழகப் பட்டமளிப்புக்குக் கூட நீங்க வந்ததில்லை" என்று என் பிள்ளைகள் குறைப்பட்டார்கள்.

"ஆனா நான் என் பிள்ளைகளோடு இருந்ததை விட, அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்ததை விட என் பேரப் பிள்ளைகளோடு நிறைய நேரம் செலவு பண்றேன், இதுதான் வாழ்க்கை என்றார் அந்தப் பேட்டியில்
எஸ்பிபி.

எவ்வளவு அழகான பார்வை இது, சமூகத்துக்காகத் தன் சுக, துக்கங்களைச் சமரசம் செய்தாலும் அதை நோகாமல் எடுத்துக் கொள்ளும் பண்பு, அதுதான் எஸ்பிபி.

மேலதிக தகவல் நண்பர்
Saravanan Natarajan
சொல்லியிருக்கிறார் குழந்தைப் பாடகராய் சரண் & பல்லவி எங்களாலும் முடியும் படத்தில் பாடியிருக்கின்றனர். அதே படத்தில் நடித்தும் உள்ளனர்.
“ஓ நெஞ்சே நீ தான்” பாடலிலும் கூட்டுக் குரலாக இருந்துள்ளனர். மிக்க நன்றி அரிய தகவலுக்கு.

#பாடும்_நிலா #SPB

0 comments: