Pages

Friday, October 2, 2020

எஸ்பிபி ❤️பாடகன் சங்கதி பாகம் 4 - எஸ்பிபி ஒரு உயிரான அழகோவியம்"என் வானம் நீதானா......
அதில் நிலவும் நீதானா.....

மனதில் தேங்கியிருக்கும் காதல் பெருஞ் சுமையை அப்படியே வார்த்தை வளரத்து ஏக்கப் பெருங்குரலெடுத்துப் பாடும் அந்த எஸ்.பி.பியின் குரலைக் கேட்குந் தோறும் தொண்ணூறுகளில் காதலாகிக் கசிந்த இள வட்டங்களின் மனக் கிணறுக்குள் போட்ட கல்லாய் அமைந்து நினைவுச் சுழலைக் கிளப்பும். அவ்வளவுக்கு உருக்கம் தோய்ந்த குரலும் இசையுமாய் அமைந்த பாட்டு அது.

தேவா, வித்யாசாகர் என்று முன்னணி கலக்கிக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் சிற்பி, பாலபாரதி, செளந்தர்யன் என்று புதிய புறப்பாடு தமிழ்த் திரையிசையில் ஊடுருவிய போது மெல்ல வந்த புதியவர்களில் ஒருவர் இசையமைப்பாளர் ஓவியன்.

அப்போது வந்த "தினந்தோறும்" படம் அதன் பாடல்களுக்காக மட்டுமன்றி அந்தப் படஇயக்குநர் நாகராஜ் படத்தை எடுத்துக் கொடுத்த விதத்துக்காகவும் கொண்டாடப்பட்டது.

"என் வானம் நீதானா அதில் நிலவும் நீதானா"
https://youtu.be/SumD2IS7ABY

சோகப் பாடலா, சந்தோஷ மெட்டா என்ற கலவையில் ஏக்கம் தரும் பாட்டின் அடிநாதத்தை எஸ்பிபி கொண்டு வருவார். 
அதில் ஒரு சாஸ்திரிய சங்கீத ஜதியை ஓவியன் இடையில் கொடுக்கும் போது “என் வானம் நீதானா” பத்தோடு பதினொன்றாக அன்றித் தனித்து நின்று ஜாலம் செய்யும்.  முரளி நடித்த படம் என்பதால் எழும் பொது ஒற்றுமை அல்ல, ஏனோ இந்தப் பாடலைக் கேட்கும் போது “இதயமே இதயமே உன் மெளனம் என்னைக் கொல்லுதே இதயமே....” என்று இசைஞானி பாடும் நிலா கூட்டணிப் பாட்டை நினைவுபடுத்தி விடும் இது. இசைக் கோப்பிலும், மெட்டிலும் இரண்டுமே தனித்துவம் கொண்டவையாக இருந்தால் கூட, அது கூட இதற்குப் பெருமை தானே?

இந்தப் பாடலை அப்போது மெல்ல மொட்டு விட்ட தமிழ்ப் பண்பலை வானொலிகள் வாரியணைத்துக் கொண்டன. அந்தப் பாடலை எழுதி இசையமைத்தவர் ஓவியன்.
தினந்தோறும் படத்தில் ஒரேயொரு தனிப்பாடலாக எஸ்பிபி அவர்களுக்கு இந்தப் பாடல் கிடைத்தது. அந்தப் படத்தில் மீதியெல்லாம் உன்னிகிருஷ்ணன் போன்றோருக்கே கிட்டின.

இசையமைப்பாளர் ஓவியன் ஆயிரத்துக்கு மேற்பட்ட மெட்டுகளைக் கட்டி இசையமைப்பாளராக வர வேண்டும் என்ற கனவில் இருந்தவர், இயக்குநர் பாரதிராஜா அவரின் திறமையை மெச்சி ஆர்மோனியப் பெட்டி ஒன்றை வழங்கிக் கெளரவித்திருக்கிறாராம்.
ஆனால் ஓவியன் இன்று நம்மோடு இல்லை. 11 வருடங்களுக்கு முன் திடீர் இதய நோய்கண்டு இறந்து விட்டார்.
இந்தத் தகவலை அவரின் நண்பர் சரசுராம் தன் வலைத்தளத்தில் பகிர்ந்திருக்கிறார்.

அல்பாயுசில் இறந்த ஓவியன் என்ற அந்தக் கலைஞனை எஸ்பிபியின் “ என் வானம்நீதானா” உயிர்ப்பித்து வைத்திருக்கிறது.
இன்று 22 வருடங்கள் கழிந்த நிலையில் அந்தப் படத்தின் முகவரியே இந்தப் பாடல் தான் என்று சொல்லுமளவுக்கு அந்தப் படத்தில் ஓவியன் என்ற அறிமுக இசையமைப்பாளராக, அவர் இன்று இல்லாத சூழலிலும் அவர் பேர் சொல்லி நிற்கின்றது.

அழகோவியம் உயிரானது
புவி மீதிலே நடமாடுது
கவி ஆயிரம் மனம் பாடுது
புதுக் காவியம் அரங்கேறுது
https://youtu.be/Al5MDgZqfIE

ஒரு பாட்டை வைத்து இன்னொரு படத்தை விளம்பரப்படுத்த முடியுமா? 
அதுதான் நடந்தது.
அதுவும் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த “ரோஜா மலரே” படத்தில் ஆதித்யன் இசைத்து எஸ்பிபி பாடிய அந்தப் பாட்டை எழுதியவர் அந்தப் படத்தின் இயக்கியவர் TM.ஜெயமுருகன்.

அவர் 12 ஆண்டுகள் கழித்து இன்னொரு படம் எடுக்கப் போன போது
“அழகோவியம் உயிரானது” பாடல் கொடுத்த நிறுவனத்தின் இன்னொரு தயாரிப்பு என்றே விளம்பரப்படுத்தினார் அந்த அளவுக்கு 90களில் மிகப் பரவலான ஜனரஞ்சக அந்தஸ்த்தோடு மிளிர்ந்த பாட்டு இது. ஒரு கொசுறுத் தகவல் ரோஜா மலரே படத்திலும் நாயகன் ஒரு பாடகன். இம்மாதிரி நாயகனைப் பாடகனாக வைத்து வெளிவந்த படங்களில் இளையராஜா நீங்கலாக, வேறு இசையமைப்பாளர் இசையில் எஸ்பிபி கொடுத்த பாடல்களை வைத்தே ஒரு நீண்ட தொகுப்புப் போடலாம்.

முன் சொன்ன “என் வானம் நீதானா” பாடலுக்கும் “அழகோவியம் உயிரானது” பாடலுக்கும்ஓராண்டு இடைவெளி. முன்னதில் காதலின் ஏக்கமும், பின்னதில் அதையே அனுபவித்து ரசிக்கும் பாங்கிலும் எவ்வளவு அற்புதமான வேறுபாட்டைக் காட்டி நிற்கிறார் பாருங்கள்.

“அழகோவியம்” பாடலின் முழுமையான வெற்றியில் எஸ்பிபியின் பங்கு எவ்வளவு தூரம் இருக்கிறது என்பதை அந்தப் பாடலைக் கேட்கும் போதே உய்த்துணர்வீர்கள்.

எஸ்பிபியின் ஒரேயொரு பாட்டு இன்னொரு படத்தின் தொடக்க விளம்பரமாக 12 ஆண்டுகளுக்குப் பயன்படப் போகிறது என்று நினைத்திருப்பாரா?

அந்த இசையோடு படிக்கட்டில் நடக்குமாற்போலச் சிரிப்புத் துள்ளல், சாக்ஸபோனுடன்வேறு படுத்த முடியாத முடியாத பிணைப்போடு

என் கவியானவள் கண்ணில் வந்து கலையானவள்
என் கனவானவள் நினைவில் வந்து இனிதானவள்
இசையானவள் சுவையானவள்

Lovely Lisa ஏஹேஹே.....Monalisa... ❤️


இசையமைப்பாளர் ஆதித்யன் அறிமுகமான “அமரன்” படத்தில் சந்தடியில்லாமல் இன்னொரு அறிமுக இசையமைப்பாளர் இசைத்த இரண்டு பாடல்கள் படத்தில் இருக்கும். அவை பற்றிய குறிப்பு படத்தின் எழுத்தோட்டத்தில் இடம் பெற்றிருந்தாலும், இசைத்தட்டுகளில் அந்த இசையமைப்பாளர் பெயர் இல்லாமல் ஆதித்யன் பெயர் மட்டும் கொண்டு ஓரவஞ்சனை செய்யப்பட்டிருக்கும்.

அந்த அறிமுக இசையமைப்பாளர் தான் விஸ்வகுரு, அவர் அமரன் படத்துக்காக இசையமைத்த இரண்டு பாடல்களில் ஒன்று நாயகன் கார்த்திக் பாடும் “முஸ்தபாமுஸ்தபா”.

இன்னொன்று, பாடும் நிலா பாலுவும், கானக்கந்தர்வன் ஜேசுதாசும் தனித்தும் வேறுபடுத்தியிம் கொடுத்த
“சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே...”

ஜேசுதாஸ் பாடும் பாங்கில் அசரீரியான தோற்றப்பாட்டோடு பயணிக்கும் இதுவோ
எஸ்பிபி பாடும் போது அடிபட்டவனின் விரக்தியின் வெளிப்பாடாகவும், தேற்றி எழுந்துநின்று போராட வைக்கும் தன்னம்பிக்கை கீதமாக மிளிரும்.
https://youtu.be/y2JnqFYqpAw

இதே படத்தில் ஆதித்யனும் தன் பங்குக்கு எஸ்பியிக்கு நியாயம் செய்த பாட்டு
“வசந்தமே அருகில் வா....
https://youtu.be/onHVDxEqEBE

“வெண்பனி வீசிடும் மேகங்களே
சிந்திடும் மோகன ராகங்களே
உலா வரும் நிலா தொடும்
காதல் ராஜ வீதியில்
கானம் பாடி ஊர்வலம்
வசந்தமே அருகில் வா....”

இந்தப் பாடலைக் கேட்கும் போது நீருக்கடியில் புதைந்த கண்ணாடிப் பாதையில் நடந்துபோகுமாற் போல ஒரு விநோத உணர்வு பிறகும். இசையும், அதனோடு கலந்த எஸ்பியின் நோகாத சங்கதிகளும் தான் அந்த மாதிரியானதொரு விநோத வெளிப்பாட்டை நிகழ்த்தும்.
அமரன் படத்தின் எஸ்பிபி பாடிய பாடல்கள் நாயகனின் வாயசைப்பில் அடங்காத காட்சியோட்டத்தில் பின்னப்பட்டிருக்கும், நாயகனின் துன்பியல் அதிகாரமாகப் பயணிக்கும் ஓசை அது.

நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும், ஒவ்வொரு இசையமைப்பாளரின் பாணியும் ஒவ்வொரு தினுசாக இருக்கும். அந்தந்த இசைக் கலவைக்கு ஈடு கட்டி எப்படிப் பாம்புச்சட்டை போலத் தன்னை உருமாற்றுகிறார் இந்தப் பாடும் நிலா என்றஆச்சரியத்துக்கு விடை காண முடிவதில்லை.

இருப்பதும் இறப்பதும்
அந்த இயற்கையோட கையிலே!
நான் மறைஞ்ச பின்னும் நிலைப்பது
என் உயிரெழுதும் கதையிலே!!
இந்தப் பாடலையும் தனக்கெனவே எழுதி வைத்துப் போய் விட்டார் நம் எஸ்பிபி

அமரன் என்றால் நித்தியமானவன் என்று பொருள்படும்,
எஸ்பிபி ஒரு அமரன்.

கானா பிரபா
#பாடும்_நிலா #SPB

0 comments: