Pages

Thursday, October 1, 2020

எஸ்பிபி ❤️️ பாடகன் சங்கதி பாகம் 3 ❤️️ சிவாஜிக்காக ❤️️

 

சிவாஜியோடு கம்பீரம் போம்....
எஸ்பிபியோடு கம்பீரம் போம்...
முன்னவரின் நடிப்பும், குரலுமாகக் கம்பீரத்தின் அடையாளம் பேச,
பின்னவர் பாடல்களுக்குக் கொடுக்கும் சங்கதியும், மிடுக்கான வெளிப்பாடுமாக அதையே பேசும்.
இன்றைய சூழலில் இவர்களைத் தாண்டி இன்னொருவரை அடையாளப்படுத்த முடியவில்லை. இருவருக்கும் இன்னோர் பொருத்தம் அது லகர, ழகரப் பிரயோகங்களில்காட்டும் கறார்த்தனம்.
எம்ஜிஆர் - சிவாஜி
கமல் - ரஜினி
விஜய் - அஜித்
என்று திரையுலகின் மூன்று சகாப்தமும் கண்ட எங்கள் எஸ்பிபி தனது 25 வது வயதில் 43 வயது சிவாஜிக்குக் குரல் கொடுக்கிறார் முதன் முதலில்.
22 வயது அஜித்துக்கு (அமராவதி) எஸ்பிபி முதன் முதலில் குரல் கொடுத்த போது 43 வயது.
தலைமுறை இடைவெளி காணா ஒரேயொரு பாடகர் தமிழ் திரையுலக வரலாற்றில் ஒரேயொருவராக எஸ்பிபி விளங்கி நிற்கிறார்.
தமிழ் வானொலிகளில் சில அபத்தங்கள் நடக்கும். பாலியல் விடுதியில் பாடும் “நான்சிரித்தால் தீபாவளி” பாடலில் தீபாவளி இருப்பதால் தீபாவளி தோறும் அந்தப் பாடலைப்போட்டுப் போட்டுத் தேய்ப்பார்கள்.
அது போலவே தந்தையர் தினத்துக்கு அவ்வளவாகப் பாடல்கள் அகப்படுவதில்லை ஆகவே
“அன்புள்ள அப்பா” (சங்கர் - கணேஷ் இசை) படத்தில் வரும்
“அன்புள்ள அப்பா உங்கள் காதல் கதையைக் கேட்டால் தப்பா”
பாடலை ஒலிபரப்புவார்கள்.
இது வானொலிகளில் எழுதப்படாத சட்டம். இந்தப் பாடலில் தந்தை சிவாஜிகணேசனுக்கு எஸ்பிபியும், மகள்
நதியாவுக்கு எஸ்பிபியின் தங்கை சைலஜாவும் குரல் கொடுத்திருப்பார்கள்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு TM செளந்தரராஜனுக்குப் பின் நியாயம் செய்த குரல் என்றால் அது மலேசியா வாசுதேவனுடையது தான் என்றாலும்
இந்த அன்புள்ள அப்பா பாட்டில் சிவாஜி ஆகவே ஆகி விடுவார் எஸ்பிபி.
“என்னோடு பாடுங்கள்
நல் வாழ்த்துப் பாடல்கள்”
கே.ஆர் விஜயா தயாரித்த “நான் வாழ வைப்பேன்” படத்தில் இந்தப் பாடலை எஸ்பிபி குரலில் தான் கேட்டிருக்கிறோம்.
ஆனால் அந்தப் பாட்டு TM செளந்தரராஜன் அவர்களை வைத்து முன்னர் இதுவாக https://www.youtube.com/watch?v=x6vUK31d6AY ஒலிப்பதிவு செய்யப்பட்டது பலரும் அறியா உண்மை.
இதே படத்தில் இன்னொரு அட்டகாசமான பாட்டு
“திருத்தேரில் வரும் சிலையோ”
இங்கே பி.சுசீலா & எஸ்பிபி ஜோடி.
TMS இற்கு மாற்று SPB அல்ல என்பது காலம் அறிந்த உண்மை. கால மாற்றத்தில் புதிய தலைமுறையை உள்ளிழுக்கும் உத்தியாக எஸ்பிபி முந்திய தலைமுறையின் முகப் பூச்சாக இருந்திருக்க நேர்ந்தது.
“காலம் மாறலாம் நம் காதல் மாறுமா”
சிவாஜி கணேசன் & எஸ்பிபி குரலில் எனக்கு மிகவும் பிடித்த பாட்டென்றால் வாழ்க்கை படத்தில் வரும் இந்தப் பாட்டுத் தான். இதே படத்தில் எஸ்பியின் “அன்பிருக்கும் உள்ளங்களே” பாட்டும் அருமையாக இருக்கும்.
எஸ்பிபிக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் கொடுத்த பாடல்கள் பன்முகம் கொண்டவை.
சிவாஜி நடித்த அருணோதயம் படத்திலும் எஸ்பிபி பாடியிருக்கிறார் ஆனால் அவர் குரல் கொடுத்ததோ முத்துராமனுக்கு “எங்க வீட்டுத் தங்கத் தேரில்” பாட்டு.
குலமா குணமா படத்தில் ஜெய்சங்கருக்கு எஸ்பிபி குரல், சிவாஜிக்கு TMS பாட “உலகில்இரண்டு கிளிகள்” https://youtu.be/wkqLdxfHaPE
அதே ஆண்டில் சுமதி என் சுந்தரி படத்தில் பாலமுரளி கிருஷ்ணாவுக்குப் போக வேண்டியபாட்டு எஸ்பிபிக்குப் போகிறது. அதுவே சிவாஜிக்கு இவர் பாடிய முதல் பாட்டு
“பொட்டு வைத்த முகமோ
கட்டி வைத்த குழலோ”
என்று மங்கலகரமான தொடக்கம்.
மீண்டும் “மூன்று தெய்வங்கள்” படத்தில் முத்துராமனுக்கு எஸ்பிபி குரல் போக, சிவாஜிக்கு செளந்தரராஜன் குரல் கொடுத்த அந்த ஆண் இருகுரல் இசைப் பாட்டு “நடப்பது சுகமா”.
இவ்வாறு சிவாஜி படங்களில் இரண்டாம் நாயகர்கள் முத்துராமன், சிவகுமாருக்கே அந்தக் காலத்தில் எஸ்பிபி குரல் சேர்கிறது.
இங்கே ஆச்சரியமான ஒரு நிகழ்வு “பொட்டு வைத்த முகமோ” பாடலில் எஸ்பிபியோடு ஜோடி கட்டிய B.வசந்தாவுடனேயே ஓராண்டு கடந்து சிவாஜிக்குப் பாடும் வாய்ப்பு வருகிறது
“ராஜா” படத்தின் “இரண்டில் ஒன்று”
வழியாக
எஸ்பிபி & சுசீலா ஜோடி “கெளரவம்” படத்துக்காக முதன்முதலாக சிவாஜிக்குப் பாட்டு என்ற கணக்கில்
“யமுனா நதி எங்கே”
பாட்டு வழி கலக்கிறார்கள்.
“எத்தனை அழகு கொட்டிக் கொடக்குது” (சிவகாமியின் செல்வன்)
பாட்டு எஸ்பிபிக்கு இன்னொரு உயர் பதவி கிட்டுகிறது. அது சிவாஜியின் குரலாகவே ஆரம்பம் பேசும்.
பாட்டும் பரதமும் படத்தில் எஸ்பிபி ஆக சிவாஜி நளினம் காட்ட வேண்டிய இன்னோர் அந்தத்தில் விடும் பாட்டு வருகிறது “My Song is for you” ஆக
உனக்காக நான் படத்தில் TMS, K.J.ஜேசுதாஸ் ஆகியோரோடு பங்கு போட்டு எஸ்பிபிக்கும் பாடல் கிடைக்கிறது. “காதல் சுகம் கொள்வேனோ”
அடுத்த தலைமுறை நாயகனாக கமல் வருகிறார். சிவாஜியோடு இரண்டாம் நாயகனாகநடித்த "சத்யம்" படத்திலும் (கல்யாணக் கோவிலில் தெய்வீக), "நாம் பிறந்த மண்" இலும்(ஆசை போவது)
“படகு படகு ஆசைப் படகு
போவோமா பொன்னுலகம்”
உத்தமன் படத்தில் ஒரு ஹிட் பாட்டுக் கொடுக்கிறார் சிவாஜிக்கு எஸ்பிபி.
இளையராஜா “தீபம்” வழியாக சிவாஜியோடு இணைந்த போதும் அந்தப் படத்தில்ஜேசுதாஸ் & செளந்தரராஜன் குரல்கள் மட்டுமே.
எஸ்பிபிக்கு சிவாஜி கணேசன் கூட்டில் காட்டில் ஒரு வேட்டை என்றால் அது
“நாலு பக்கம் வேடருண்டு”
இந்த அண்ணன் ஒரு கோயில் படத்தில் “அண்ணன் ஒரு கோவில் என்றால்
தங்கை ஒரு தீபமன்றோ” என்ற அட்டகாஷ் பாட்டு எஸ்பிபி குரலில் ஜெய்கணேஷ்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
சிவாஜியின் ஜஸ்டிஸ் கோபி நாத் படத்தில் இரண்டாம் நாயகன் ரஜினிக்கு “நமது காதல் எங்கும் என்றும் காணாதது” என்ற எஸ்பிபி பாடல் போய்ச் சேருகிறது.
சிவாஜி கணேசனின் நடிப்புலகப் பயணத்தில் ஆகக் கூடிய வசூல் சாதனை புரிந்ததிரிசூலம் படத்தில் மீண்டும் TMS, ஜேசுதாஸ், எஸ்பிபி. ஆனால் இங்கோ ஒன்றல்லஇரண்டல்ல முத்தான மூன்று பாடல்கள் மெல்லிசை மன்னர் இசையில் சிவாஜிக்காகப் பாடுகிறார் எஸ்பிபி.
“பூப் போலே உன் புன்னகையைக்
கண்டேனம்மா”
கவரிமான் படத்தில் இருந்து இளையராஜாவுக்கு எஸ்பிபி குரல் சிவாஜிக்கும் பொருந்தும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.
“எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்”
பட்டாக்கத்தி பைரவன் வந்து 41 ஆண்டுகள். நம்ப முடிகிறதா இந்த நவீனம் தொலைக்காதஇசையைக் கேட்கையில்?
படத்தில் மொத்தம் 4 பாட்டுகள் எஸ்பிபிக்கு
“யாரோ நீயும் நானும் யாரோ” பாடலோடு சேர்த்து இரண்டு பாடல்கள் சிவாஜிக்காகப் பாடி வைத்தார்.
தெலுங்கு உலகின் பிரபல இசையமைப்பாளர் சக்ரவர்த்தி இசையமைத்த சிவாஜி படமாக எமனுக்கு எமன் அமைந்தது. அதில் ஆறு பாடல்களுமே எஸ்பிபிக்கே போய்ச் சேர ஒருகூட்டுப் பாடலில் செளந்தரராஜன் குரல். அது ஒரு போட்டிப் பாடலாக எஸ்பிபியோடுபோட்டி போடும்.
சிவாஜி கணேசனுக்கு எஸ்பிபி குரலை அதிகம் பயன்படுத்திய இசையமைப்பாளர் என்ற தகுதியை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வ நாதன் எண்பதுகளில் கூட விட்டுக்கொடுக்கவில்லை.
தர்மராஜா (1), ரத்த பாசம் (3), விஸ்வரூபம் (2) , மோகனப் புன்னகை (1). சத்ய சுந்தரம் (1), அமரகாவியம் (1) லாரிடிரைவர் ராஜாக்கண்ணு (4), மாடி வீட்டு ஏழை (2), ஊருக்கு ஒரு பிள்ளை (1 ) கருடாசெளக்யமா (1 ), வசந்தத்தில் ஒரு நாள் (2) என்று இந்தக் கணக்கு கூடுகிறது.
இங்கே இன்னொரு புதுமையையும் கவனிக்க வேண்டும். சிவாஜியின் படத்தில் இரண்டாம்நிலை நாயகர்கள் என்ற கணக்கில் முத்துராமன் காலத்தில் இருந்து கமல், ரஜினி, எண்பதுகளில் கார்த்திக், பிரபு, தொண்ணூறுகளில் என் ஆசராசாவே முரளி வரை சிவாஜி படத்தில் இன்னொரு நாயகனுக்காக எஸ்பிபி என்றகணக்கிலும் சாதனை படைக்க்கிறது.
ரங்காராவ் இசையில் குடும்பம் ஒரு கோவில் https://youtu.be/eO5vl_qDM4g பாடலும்அப்போது பிரபலமாக விளங்கியது.
இந்தச் சூழலில் எண்பதுகளில் இன்னொரு மாற்றம் நிகழ்கிறது.
சிவாஜியின் மகன் பிரபு தலையெடுக்க, எஸ்பிபி குரல் பிரபுவுக்கும், சிவாஜிக்கு மலேசியாவாசுதேவன் குரலுமாக மாற்றம் நிகழ்கிறது.
இதுவும் ஒரு புதுமை அல்லவா?
இளைய குரலுக்கு எஸ்பிபி என்று இன்னும் இளமைஆகிறார்.
இப்பேர்ப்பட்ட அழகிய மாற்றத்தை ஒரு அழகான பாட்டு கங்கை அமரன் இசை கொடுக்க வம்ச விளக்கு படத்தில் வருகிறது. இங்கே பிரபுவுக்கு எஸ்பிபி, சிவாஜிக்கு மலேசியா வாசுதேவன் ஆகிறார்கள். அந்தப் பாட்டு
“மனிதன் கதை இது இதை மாற்ற விதி எது?”
சிவாஜி கணேசனுக்காக எஸ்பிபி பாடிய பட்டாசுப் பாட்டு காலாகாலத்துக்கும்துள்ளிசைக்கும்,அது மனோவுடன் கூட்டுச் சேர்ந்த
ஹேய் ராஜா ஒன்றானோம் இன்று”
ஜல்லிக்கட்டு படத்தில் மலேசியா வாசுதேவனும் “ஏரியில் ஒரு ஓடம்” பாடலைசிவாஜிக்காகக் கொடுத்திருக்கிறார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் பொறுத்த வரை தேவர் மகன் படம் அவரை நடிப்பின்உச்ச எல்லையோடு நிறுத்தி விட்டது.
அவரின் நியாயமான கணக்கு அதுவரை தான்.
அந்தப் படத்திலும் எஸ்பிபி சிவாஜிக்காக ஒரு இரங்கல் பா ஐப் பாடி வைத்துப் போய்விட்டார்.
வானம் தொட்டுப் போனான்
மனமுள்ள சாமி......
கானா பிரபா
இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 92 வது பிறந்த நாள்
பாதி வழியில் வந்த பந்தம்
தேவன் எனக்களித்த சொந்தம்
வானம் வரை பறந்த நானும்
வழியில் துணை நீயும் இணையக் கண்டது
நானும் நீயும் ஏது பிரிவினை
பேதம் இல்லை இல்லை மனக் கவலை
ஹேய் ராஜா ...ஒன்றானோம் இன்று
சிவாஜி & எஸ்பிபிக்காகவே கங்கை அமரன் எழுதி வைத்தது போல இருக்கிறது.

1 comments:

Unknown said...

நடிகர் திலகம் சிவாஜி, பாடும் நிலா SPB கூட்டணி பாடல்கள் மிக அருமை. அதேபோல் MGR SPB பாடல்கள் பற்றியும் எழுதவும். SPB எல்லோருடைய மனங்களில் என்றும் வாழ்பவர். அவரப்போல ஒரு பாடகர் மீண்டும் வருவடு கடினமே. விண்ணுலகம் சென்றாலும் அவருடைய குரல் மண்ணுலகில் என்றும் ஒலித்துக்கொண்டு இருக்கும்.