Pages

Thursday, October 15, 2020

எஸ்பிபி ❤️ பாடகன் சங்கதி பாகம் 11 எஸ்பிபி இல்லாது என் எஞ்சிய காலத்தை எப்படிக் கழிப்பேனோ?"எஸ்பிபி இல்லாது 
 என் எஞ்சிய காலத்தை
 எப்படிக் கழிப்பேனோ?"

இப்படிச் சொன்னவர் கன்னடத் திரையிசையின் மிக முக்கியமான இசையமைப்பாளராகக் கொள்ளப்படும் ஹம்சலேகா அவர்கள்.எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களது  நினைவாஞ்சலியில் கூட விழி நீர் சொரியப் பாடகர்களோடு, இசையமைப்பாளர்களும் அவர் மறைவில் ஏங்கியது நாம் கண்டது. ஆனால் இன்னும் எத்தனையோ இசை மேதைகள் இந்த இழப்பைத் தம் சொந்த இழப்பாகவே எடுத்துக் கொண்டது எஸ்பிபி விஷயத்தில் தான் மிகவும் அதிகப்படி என்பது கண் கூடு. காரணம் அவர் இன்னும் இருந்திருந்தால் குறைந்தது பத்தாண்டுகளாவது மாறாத குரல் வளத்தோடு தன் சங்கதி படைத்திருக்க முடியும்.

எஸ்பிபி இல்லாது என் எஞ்சிய காலத்தை

எப்படிக் கழிப்பேனோ?

என்ற ஆதங்கத்தினுள் ஹம்சலேகா என்ற இசையமைப்பாளர் தாண்டிய ஒரு வாழ்வியல் விசுவாசமும் பொதிந்திருக்கிறது.


“பருவ ராகம்” படத்துக்குப் புதுப் புதுக் குரல்களில் புத்திசை கொடுக்க வேண்டும் என்று நான் நினைத்து அந்த முயற்சியில் சோர்ந்து தோல்வி காணும் நம்பிக்கையற்ற தருணத்தில் தான் எஸ்பிபி பாட் வந்தார்.
என்னுடைய திரையுலக வாழ்க்கையின் விதியை அப்படியே மாற்றி எழுத வைத்தார்”
என்று நேசிப்போடு எஸ்பிபியை நினைவு கூருகிறார் ஹம்சலேகா. ( நன்றி : metrosaga இணையம்)

“பூவே உன்னை நேசித்தேன்
 பூக்கள் கொண்டு பூஜித்தேன்”

https://youtu.be/Otfc5ARlavI

கர்னாடகா எல்லை தாண்டி தமிழகத்தில் ஊடுருவி ஒரு மிகப் பெரிய இசைத் தாக்கத்தை, அதுவும் இளையராஜா காலத்தில் நிகழ்த்திக் காட்டியது “பருவராகம்”.

தமிழராக இருந்தாலும் கன்னட சினிமா உலகில் கடை விரித்தவர் தயாரிப்பாளர் வீராச்சாமியும் மகனும் நடிகனுமான ரவிச்சந்திரன்.

ரவிச்சந்திரன் நடித்த கன்னடத் திரைப்படமான “பிரேம லோகா”  மிகப் பெரிய வெற்றியைக் குவித்தது. பாடல்கள் சூப்பர் ஹிட். அதுவே தமிழில் “பருவ ராகம்” ஆனது.
எனது வாழ்க்கைத் துணை என் மனைவி
எனது திரையுலகத் துணை ரவிச்சந்திரன்
என் இசையுலகத் துணை எஸ்பிபி என்று நன்றியோடு கொண்டாடினார் “பிரேம லோகா (பருவ ராகம்) தந்த விளைச்சலால் தொடர்ந்த பந்தத்தால்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்குக் கிடைத்த 6 தேசிய விருதுகளில் ஐந்தாவதாக 1995 ஆம் ஆண்டில் ஹம்சலேகா இசையில் “சங்கீத சாகர ஞானயோகி பஞ்சாட்சர கவி” (கன்னடம்), படத்துக்குக் கிட்டுகிறது.

https://youtu.be/OE447XttAjM

எப்படி முறையாகச் சங்கீதம் கற்காது சங்கராபரணத்தில் சங்கீதத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்களின் உதவியாளர் புகழேந்தி (இவரும் ஒரு இசையமைப்பாளர்) அவர்களின் வழிகாட்டுதலில் பயிற்சி எடுத்துக் கொண்டு தேசிய விருதை முதன் முதலில் சுவீகரித்துக் கொண்டாரோ அதே தயக்கம் தான் 14 ஆண்டுகள் கழித்து கன்னடப் படத்தில் ஒரு கஷ்டமான சாஸ்திரிய் சங்கீதத்தை ஹம்சலேகா ஊக்கத்தில் பாடி இதோ இன்னொன்றை எடுத்துக் கொண்டார்.

சங்கீத சாகர ஞானயோகி பஞ்சாட்சர கவி படத்தில் மொத்தம் 10 பாடல்கள். கே.ஜே.ஜேசுதாஸ் உட்பட்ட ஜாம்பவான்களோடு தன் பங்குங்கு 3 பாடல்களை எஸ்பிபி பாடினார்.

சங்கராபரணத்தில் கே.வி.மகாதேவனுக்கும்,
ருத்ர வீணா வில் இசைஞானி இளையராஜாவுக்கும் சிறந்த இசையமைப்பாளரும் எஸ்பிபிக்கு சிறந்த பாடகரும் என்று தேசிய விருது ஒரே சமயத்தில் கிட்டியது போலவே இங்கும் ஹம்சலேகாவுக்கும் ஒரே படத்தில் சிறந்த இசையமைப்பாளராகத் தேசிய விருது கிடைக்கிறது.
ஏன் எஸ்பிபி இறுதியாகப் பெற்ற மின்சாரக் கனவில் கூட ரஹ்மானுக்கும் தேசிய விருது.


1979 ஆம் ஆண்டில் கே.வி.மகாதேவன் இசையில் சங்கராபரணம் (தெலுங்கு),1981 ஆம் ஆண்டில் லஷ்மிகாந்த் பியாரிலால் இசையில் ஏக் துஜே கேலியே (ஹிந்தி), 1983 ஆம் ஆண்டில் இளையராஜா இசையில் சாகர சங்கமம் (தெலுங்கு), 1988 ஆம் ஆண்டில் இசைஞானி இளையராஜா இசையில்

ருத்ரவீணா (தெலுங்கு), 1995 ஆம் ஆண்டில் ஹம்சலேகா இசையில் சங்கீத சாகர ஞானயோகி பஞ்சாட்சர கவி (கன்னடம்), 1997 ஆம் ஆண்டில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் மின்சாரக்கனவு (தமிழ்) ஆகிய படங்களில் கிட்டிய வகையில் இங்கேயும் பன்முக மொழிகளில் தன் சாதனையை நிலை நிறுத்தியிருக்கின்றார்.

அத்தோடு ஒவ்வொரு பாடல்களும் வெவ்வேறு இசை மரபுகளில் இருக்கும். “தங்கத் தாமரை ம்லரே” என்ற மேற்கத்தேயத் துள்ளலுக்கும் ஒரு விரு(ந்)து.

பருவ ராகம் படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட சாஸ்திரிய இசையோடு அமைந்த இசைத் தொகுப்பு அது. முன்னது மேற்கத்தேய இசைக் கொண்டாட்டம்.

பிரேம லோகா தமிழில் பருவராகம் ஆன போது வசனத்தை பஞ்சு அருணாசலமும், முழுப் பாடல்களை வைரமுத்துவும் கவனித்துக் கொண்டனர்.

நாயகன் ரவிச்சந்திரன் கதை, திரைக்கதை, இயக்கத்தைக் கவனித்துக் கொண்டார்.  ஹம்சலேகா பாடல்கள் தமிழுக்கு வந்த போது அம்சலேகா ஆனார்.

பருவ ராகம் படத்தில் மொத்தம் பத்துப் பாடல்கள். அவற்றுள்
கே.ஜே.ஜேசுதாஸ் & எஸ்.ஜானகி கூட்டில்
“காதல் இல்லை என்று சொன்னால்”

https://youtu.be/LoFYQJ1c49w

எஸ்.ஜானகி & எஸ்பிபி கூட்டுச் சேர்ந்த
“பூவே உன்னை நேசித்தேன்”

https://youtu.be/SSM6jB3FKO0

பட்டி தொட்டியெங்கும் எண்பதுகளில் பருவ ராகம் பாடியது.

“பிரேம லோகா” கன்னடப் பாடல் திரட்டு

https://youtu.be/rGr2EGtPATo

“பருவ ராகம்” கன்னடப் பாடல் திரட்டு

https://youtu.be/MVQ2MbWj24s

கோவிந்தராஜூ கங்காராஜூ என்ற இயற்பெயர் கொண்டவர் இசையைப் படைக்கும் பிரம்மனின் புனைபெயர் தாங்கி "ஹம்சலேகா" ஆனவர். இவர் பாடலாசிரியராகவும், இசையமைப்பாளராகவும் இயங்குபவர்.

எஸ்பிபிக்குத் தான் பாடிய பாடல் ஒலிப்பதிவுகளை சேமித்து வைக்கும் பழக்கம் இருந்ததாம், இது அவர் தன்னுடைய மந்திர ஜாலக் குரலை வெவ்வேறு தளங்களில் பாவிக்கப் பேருதவியாக இருந்தது என்கிறார் ஹம்சலேகா.


ஹம்சலேகா குறித்து ஒரு பதிவுக்குள் அடக்க முடியுமா என்ன?

இன்னுமொன்றோடும் பாடகன் சங்கதியில் ஹம்சலேகா வருகிறார்.

அத்தோடு ரவிச்சந்திரன் படத்துக்கு இசை கொடுத்த எஸ்பிபியோடும் அடுத்த பதிவு

கானா பிரபா

பிரத்தியோகப் படங்கள் நன்றி : இசையமைப்பாளர் ஹம்சலேகா தளம்

#SPB ##பாடும்_நிலா

0 comments: