Pages

Wednesday, October 14, 2020

எஸ்பிபி ❤️ பாடகன் சங்கதி பாகம் 10 பாட்டை வெறுக்கும் பாத்திரமாக நடித்த எஸ்பிபி"பின்னணி படித்த குயிலு வளர்ந்து 

 முன்னணி ஆனது 

இன்று முகத்தைக் காட்டுது"


https://www.youtube.com/watch?v=C7p7pWsMhAU


பாலைவன ராகங்கள் படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடலுக்குப் பின் ஒரு சேதி உண்டு.


“இசையைத் தன் உயிராக நேசிக்கும் பாட்டுக் கலைஞன் ஒருவன் ஒரு அசாதரண சந்தர்ப்பத்தில் தான் நேசிக்கும் இசையை வெறுக்குமளவுக்கு மாறி விடுகிறான்” 

இப்படியொரு விளம்பரத்தோடு தொண்ணூறுகளில் வெளியான படம் “பாலைவன ராகங்கள்”


இந்தக் கதாபாத்திரத்தில் நடித்தவர் வேறு யாருமல்ல நம்ம எஸ்பிபி தான்.


“பூந்தோட்டக் காவல்காரன்” புகழ் செந்தில் நாதன் இயக்கிய “பாலைவன ராகங்கள்”


படத்தில் எஸ்பிபியோடு ஜோடி கட்டியவர் நடிகை ரேகா. அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அந்தநினைவுகளை ரேகா பகிர்ந்து கொண்டார் என்று 

அறிந்தேன். முன்பு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் எஸ்பிபியின் முன்னால் இந்தப் பட வாய்ப்பு கிட்டியதை 

ரேகா சிலாகித்ததும் நினைவுக்கு வருகிறது.


பாலைவன ராகங்கள் படத்தின் பாடல்கள் தற்போது இணைய வெளியில் கிட்டாத சூழலில் இந்தப்பாடல்களை YouTube இலும் பகிர்ந்து பதிவோடு தருகிறேன்.


எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் எஸ்பிபி பாடிய பாடல்களில் ஒரு இசைக் கூடத்திலேயே பதிவு செய்த

பாங்கில் உரையாடலோடு “மழை மழை “ 

https://www.youtube.com/watch?v=cCrkrKr0GQ8


என்ற இந்தப் பாடல் இருக்கும்.

பதிவுக்குச் சம்பந்தமில்லை ஆனால் இந்த இடுகையோடு பாலைவன ராகங்கள் பாடல்களையும் பகிரும் நோக்கில் இன்னும் இரண்டு பாடல்கள் எஸ்.ஏ,ராஜ்குமார் இசையமைத்துப் பாடிய "ஒரு ஓரமா" https://www.youtube.com/watch?v=DTiexOA3OaE

மற்றும் மனோ & ஸ்வர்ணலதா பாடிய "பூவே பெண் பூவே" https://www.youtube.com/watch?v=AU5TpXAUSzc பாடல்களையும் இங்கே தருகிறேன்

தொண்ணூறுகளில் மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய இசையமைப்பாளர்களில் ஒருவராக அறிமுகமானவர் பாலபாரதி அவர்கள். 

இயக்குநர் செல்வா தன்னுடைய சின்னத்திரை உலகத்தில் இருந்து பெருந்திரைக்கு வரும் போது கூடவே அழைத்து வந்தவர் இசையமைப்பாளர் பாலபாரதி. ஒரு பேட்டியில் இசைஞானி இளையராஜாவே மெச்சும் அளவுக்குப் பெயர் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் “சிகரம்” தொட்டு ஏராளம் படங்களில் மானாவாரியாக நடித்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு தலைவாசல் நூறு நாள் படம் என்ற விருந்தைக் கொடுத்தது.

"வாசல் இது வாசல் தலைவாசல்..."


"தலைவாசல்" படத்துக்காக அந்தப் பாடல் பதிவாகும் போது எஸ்.பி.பி தன் வழக்கமான சங்கதிகளோடு பாடிக் காட்டுகிறார். ஆனால் இசையமைப்பாளர் பாலபாரதிக்கு இது ஒப்பவில்லை. இந்தப் பாடலில் அறிவுரைத் தனத்துடன் பாட வேண்டும் எனவே மேலதிக சங்கதிகள் வேண்டாமே என்று எஸ்பிபிக்குத் தடை போடுகிறார். சரியென்று பாலபாரதி வேண்டியவாறே பாடிக் கொடுத்து விடுகிறார்.

இதோ அடுத்த பாடல் வருகிறது. அந்தப் பாடலில் சங்கதி ஏதும் கொடுக்காமல் எஸ்பிபி பாடி முடித்ததும் பாலபாரதியின் முகம் சுருங்கிப் போகிறது.

"சார் இதில் உங்க பாணியில் ஜாலியாகப் பாட வேண்டும்"
என்று பாலபாரதி கூறவும்,
"ஓ உங்களுக்கு அதெல்லாம் வேண்டாம் என்றுதான் தவிர்த்தேன்"
என்று சொல்லி விட்டு, சித்ராவை அழைத்து, பாடலின் இடையே சித்ராவைச் சிரிக்கச் சொல்லியெல்லாம் எஸ்பிபியே சொல்லிப் பாடலை மெருகேற்றி அழகாக்கிக் கொடுத்தாராம்.
அந்தப் பாடல் தான் "தலை வாசல்" படத்தில் வரும்

"உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி"


அப்படியே ஒரு இளம் வாலிபனாகி விட்டது அந்தப் பாடலில் எஸ்பிபி குரல்.  ஒரு முதிர்ந்த கல்லூரிப் பேராசிரியராகவும், அதே படத்தில் ஒரு இளம் வாலிபனுக்கும் குரல் கொடுத்த எஸ்பிபியின் குரலின் ஜாலம் பறையும் தலைவாசல்.

இதே படத்தில் எஸ்பிபி & மனோ கூட்டணியில் "நாளைக்கும் நம் காலம் வெல்லும்" https://www.youtube.com/watch?v=tZtvvGomE4I
பாடல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

"புத்தம் புது மலரே
 என் ஆசை சொல்லவா"


தொண்ணூறுகளின் ஆகச் சிறந்த பாடல் பட்டியலில் தவிர்க்க முடியாததொன்று இது. 

இந்தப் பாட்டு ஒலிப்பதிவு முடிந்ததும் ஒரு வேடிக்கை நடந்ததாம். 
தன் ஒலிக்கூடத்தில் இருந்து வெளியேறிய எஸ்பிபி
"பாலபாரதி! செல்வா !
யாராவது ஒரு பொண்ணு வேணும் 
லவ் பண்ணனும் போல இருக்கு"
என்றாராம் எஸ்பிபி :)

"அமராவதி" திரைப்படத்தின் மூலம் இயக்குநர் செல்வா & இசையமைப்பாளர் பாலபாரதி கூட்டு மீண்டும் இணைந்த போது இன்னும் அதிகப்பட்டியான வெளிச்சம் விழுந்தது. இன்று தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திரம் அஜித் குமார் நாயகனாக முதல் தமிழ் வரவாக வந்த அந்தப் படத்தின் முகவரி சூப்பர் ஹிட் பாடல்களே.

"தாஜ்ஜுமஹால் தேவை இல்லை அன்னமே அன்னமே
 காடுமலை நதிகள் எல்லாம் காதலின் சின்னமே"


அந்தக் காலத்துக் காதலருக்கும் கூட காதல் கடிதங்களுக்கான அடிகளாக வைரமுத்து எழுதிக் கொடுத்த வரிகள் அவை. இந்தப் பாடல் உருவாக்கத்தில் ஆரம்பத்தில் இயக்கு நர் செல்வாவுக்குத் திருப்தி இல்லையாம். ஆனால் வைரமுத்துவோ 
"இந்தப் பாடல் கண்டிப்பாக வேண்டும், 
எஸ்பிபியிடம் கூடச் சொல்லி விட்டேன்"
என்று சொன்ன போது பாலபாரதி மெட்டில் சில மாற்றங்களைச் செய்து இந்தப் பாடலை உருவாக்கிக் கொடுத்தாராம். 

"தாஜ்ஜுமஹால் தேவை இல்லை 
இந்தக் காடுமலை நதிகள் எல்லாம் காதலின் சின்னம்"

இதுதான் வைரமுத்து எழுதிய மூல வரிகள். பின்னர் வரிகளை மாற்றி இசையமைத்த போது சந்தோஷத்தில் தன் இருக்கையை விட்டுத் தூக்கிப் பாராட்டினாராம் வைரமுத்து என்றார் பாலபாரதி.
இந்தப் பாடலின் இடை இசையில் "ஆனந்த ராகம் கேட்கும்" பாடலின் முன்னிசையின் தாக்கம் இருக்கும். 
அமராவதி படத்தில் "அடி சோக்குச் சுந்தரி" பாடலின் மூலம் முதன் முதலில் அஜித்தைத் துள்ளிசையில் ஆட வைத்த எஸ்பிபி, "ஆஹா கனவே தானா" என்ற இன்னொரு பாடலுமாக மொத்தம் நான்கு பாடல்களைக் கொடுத்திருக்கிறார்.

அஜித்குமார் முதன் முதலில் நாயகனாக ஒப்பந்தமான "பிரேம புஸ்தகம்" தெலுங்குப் படத்துக்குப் பரிந்துரை செய்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களே. ஆனால் அந்தப் படத்தின் இயக்கு நர் கொல்லப்புடி ஶ்ரீனிவாஸ் விபத்தில் மரணமடையவே, அவரது தந்தை பிரபல நடிகர் கொல்லப்புடி மாருதிராவ் தான் மீதிப் படத்தை இயக்கி வெளியிட்டார். அந்தப் படம் தமிழில் "காதல் புத்தகம்" என்று தமிழில் மொழி மாற்றம் கண்டது. 
வேதம் புதிது புகழ் இசையமைப்பாளர் தேவேந்திரன் இசையில் "பிரேம புஸ்தகம்" படத்தின் பாடல்களைப் பாடியவர் எஸ்.பி.பி என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்தப் பாடல்களைக் கேட்க


எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடகராகவும், இசையமைப்பாளராகவும் இரட்டை அவதாரங்கள் எடுத்த படங்களை அவ்வப்போது பார்க்க இருக்கிறோம்.

"தென்றலிலே மிதந்து வந்த தேவ மங்கை வாழ்க
தேவதை உன் தேகம் தொடும் தென்றல் கூட வாழ்க"

ஏதோவொரு பண்பலை வானொலியோ அல்லது என் ஊர் போகும் பஸ்வண்டியோ இந்தக் கணம் எடுத்து வரக் கூடும் இதை. தொண்ணூறுகளின் சுகந்தமாகப் பரவிய இந்தப் பாட்டு இலங்கையின் பண்பலை வானொலிகளால் இன்றும் மெச்சப்பட்டு வானலையில் தவழவிடப்படுகிறது. "புதிய தென்றல்" படத்துக்காக இடம்பெற்ற பாடல் என்ற அடையாளத்துடன் தொக்கி நின்று விடுகிறது.
சிலவேளை ஆர்வக்கோளாறு ஒலிபரப்பாளர்களால் தேனிசைத் தென்றல் தேவா என்றோ சந்திரபோஸ் என்றோ இல்லை இசைஞானி இளையராஜா என்றோ கற்பிதம் செய்து அறிவிக்கப்படுவதுமுண்டு.
ஆனால் இந்தப் பாடலைப் பிரசவித்த ரவி தேவேந்திரன் என்ற அற்புதமான இசையமைப்பாளர் அடையாளம் மறைக்கப்பட்டு விடும். இந்த மாதிரியான மழுங்கடிப்பை இந்த ரவி தேவேந்திரன் "வேதம் புதிது" காலத்தில் "தேவேந்திரன்" ஆக இருந்த காலத்திலும் அனுபவித்திருக்கிறார்.

"தென்றலிலே மிதந்து வந்த" பாடலின் அந்த ஆரம்ப இசை இதயத் துடிப்புப் போலப் படபடக்க,
இந்தப் பாட்டின் இடையிசையில் வரும் புல்லாங்குழல் இசை இளையோருக்கோ மகுடி வாசிப்பது போல மயக்கத்தைக் கொடுத்தது.
“தென்றலிலே மிதந்து வந்த தேவ மங்கை வாழ்க” பாடலின் இசை நேர்த்தியைப் பார்த்தால் புதிதாகச் சாதிக்க வரும் இசையமைப்பாளரின் துடிப்பும், நேர்த்தியும் இருக்கும். ஆனால் எண்பதுகளில் “வேதம் புதிது” தொட்டு இன்னொரு பரிமாணத்தில் இசை கொடுத்த தேவேந்திரன் தான் ரவி தேவேந்திரன் என்று தீவிர ரசிகர்கள் கண்டுணர்ந்தார்கள். இந்தப் பாடலில் எஸ்பிபி கொடுத்த புத்துணர்வான குரல் தான் தேவேந்திரனுக்கும் ஒரு புது இசையமைப்பாளர் போன்ற அடையாளத்தைக் கொடுத்தது என்று சொன்னால் அது மிகையில்லை.

புதிய தென்றல் படத்தில் இடம்பெற்ற
“ஓ பறவைகளே ஓ பறவைகளே நில்லுங்கள்”

எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஸ்வர்ணலதா பாடிய பாடல் தொண்ணூறுகளின் காதலர் சோக கீதங்களில் ஒன்றானது.

ரவி தேவேந்திரன் என்ற தேவேந்திரனின் எண்பதுகளில் எஸ்பிபியின் சுவை சொட்டும் பாடல்கள் குறித்து இன்னொரு விரிவான பதிவு வரும்.

இந்தப் பதிவுக்காக எஸ்பிபி கனடா நிகழ்ச்சியில் ஒளிப்படம் எடுத்துச் சிறப்பித்த நண்பர் சிவரூபன் படத்தைத் தந்து உதவினார் அவருக்கு மிக்க நன்றிகள்.

0 comments: