Pages

Wednesday, September 30, 2020

எஸ்பிபி ❤️️பாடகன் சங்கதி பாகம் 2 - இசையமைப்பாளர் சந்திரபோஸ் நினைவில் 10 ஆண்டுகள்எஸ்பிபி ❤️️பாடகன் சங்கதி
பாகம் 2 - இசையமைப்பாளர் சந்திரபோஸ் நினைவில் 10 ஆண்டுகள்
“நீலக்குயில்கள் ரெண்டு...
மாலைப் பொழுதில் இன்று...
கூவித் திரியும் தாவித் திரியும்
ஆயிரம் ஆசைகள் கொண்டு
ஹேய்
ஆயிரம் ஆசைகள் கொண்டு....”
கடல்புரத்தில் ஒரு காதல் பாட்டு பிறக்கிறது.
ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா என்று நீலம் பூசி அந்தச் சூழலை மனக்கண் கொண்டு வரும் மீனவ சமூகத்தின் நாட்டார் பண் பின்னணியில் சூழ வரும்.
இப்படியொரு அற்புதமானதொரு பாடல் சந்திரபோஸ் இசையில் மலர்கிறது. பல்லவியைத்தானே ஆரம்பித்து எஸ்.பி.பியிடம் கையளிக்கிறார். பாடும் நிலாவோ நிறை கொள்ளாக்காதலின் குதூகலிப்பு எட்டிப் பார்க்கப் பயணிக்கிறார். பாடலைக் கேட்கும் போது அதீதஅழகுணர்ச்சியை இந்த வரிகளில் தடவி விடுவார்.
ஓஹோஓஓஓஓ ஓஓஹோஓ.........
பாடலின் சூழலை நினைவுபடுத்துமாற் போல சந்தம் போடும் சந்திரபோஸ்.
பாரதிக்கு ஒரு குயில் பாட்டு போலவும், வைரமுத்துவின் புள்ளினங்காள் ஆகவும் இந்தப்பாடல் வாலிக்கு ஒரு நீலக் குயிலாகவும் பிறக்கின்றது.
பிற மொழியில் இருந்து தழுவி எடுக்கப்படும் படத்தில், அதுவும் அது கொண்ட இசையால்பெரிதும் ஈர்க்கப்பட்ட ஒரு படைப்பை அப்படியே உள் வாங்கும் போது அந்த மொழியில்வந்த பாடல்களையே தமிழுக்கான வரிகளைப் பதித்து ஒப்பேற்றி விடுவதுஇலகுவானதொரு முறைமை. அதையே தான் ஹிந்தியின் டிஸ்கோ டான்ஸரை “பாடும்வானம்பாடி” ஆக்கிய போது செய்தார்கள்.
இங்கே குர்பானி என்ற இசையில் சாதனை நிகழ்த்திய போது அதை அச்சொட்டாக எடுக்காமல் தன் பாணியில் புது மெட்டுகளையும் சேர்த்து சந்திரபோஸ் விடுதலை படத்தில் கொடுத்த பாங்கினால் தான் இன்று நாம் எஸ்பிபியைக் கொண்டாடும் போதெல்லாம் இந்த அழகான“நீலக்குயில்கள் ரெண்டு”
பாடலும் தவிர்க்க முடியாத அற்புதமாக அமைந்து விட்டது.
எண்பதுகளில் சந்திரபோஸ் அவர்களின் இசைச் சாம்ராஜ்ஜியம் பரந்து விரிந்துவிருந்தளித்தது. அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படமாகட்டும், கதையம்சம் கொண்டகுடும்பச் சித்திரமாகட்டும் வெகு நிறைவான இசைப் பங்களிப்பைக் கொடுத்துச்சென்றிருக்கிறார் எங்கள் சந்திரபோஸ் அவர்கள்.
“சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா
சின்னக் குழந்தையும் சொல்லும்”
முப்பது வருடங்கள் கடந்தும் ரஜினிக்கான முத்திரைப் பாடலைக் கொடுத்ததை மறக்கமுடியுமா?
இங்கேயும் சந்திரபோஸ் & எஸ்பிபி இருக்கிறார்கள். பாட்டில் அப்படியே ரஜினிஆகி விடுவார் எஸ்பிபி.
அப்படியே மறு கரையில் “யாரோ மன்மதன்” என்று குழைந்து மருகுவார் ராஜாத்தி ரோஜாக்கிளியில் சந்திரபோஸின் எஸ்பிபி.
ஆகா எத்தனை எத்தனை பரிமாணங்கள் இந்தக் கூட்டணியிலும்.
மலேசியா வாசுதேவன், கே.ஜே.ஜேசுதாஸ் போன்றே எஸ்பிபியையும் மிகக் கச்சிதமாகசந்திரபோஸ் தன் பாடல்களில் தேர்ந்தெடுத்திருக்கிறார்.
இயக்குநர் வி.சி.குகநாதன் அவர்களின் “மதுர கீதம்” படத்தில் “கண்ணன் எங்கே” பாடலில் தொடங்கித் தன் இசை வாழ்வின் ஆக உச்ச சூப்பர் ஹிட் படமாக “மாநகரகாவல்” படத்தில் “வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர” வரை எஸ்பிபியைக்கொண்டாடியிருக்கிறார் தன் இசையால்.
அதுவும் மாநகர காவல் படத்தில் வெளிவராத பாட்டு “தலை வாரிப் பூச்சூடும் இளந்தென்றலே”
வெகு அற்புதமானதொன்று.
சந்திரபோஸ் - எஸ்பிபி கூட்டணியில் கிட்டிய ரத்தினங்களைப் பட்டியலிட்டால்
எப்பேர்ப்பட்ட மகத்துவத்தை எங்கள் பாடும் நிலாவுக்குக் கொடுத்திருக்கிறார் என்பதுபுரியும்.
சந்திரபோஸ் அவர்களின் இசையில் மலர்ந்த எஸ்பிபி பாடல்களை முன் வைத்து என்னுடைய சில இடுகைகளும் பாட்டுப் பாட்டியலும்
யாரோ மன்மதன் - ராஜாத்தி ரோஜாக்கிளி
கொலுசே கொலுசே - பெண்புத்தி முன் புத்தி
என் ராசாத்தி நீ வாழணும் - ஊமைக்குயில்
சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா - ராஜா சின்ன ரோஜா
ஹேய் மல்லியப்பூ பூத்திருக்கு - தாய் மேல் ஆணை
வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர - மாநகர காவல்
வண்ணத்துப் பூச்சி வயசென்ன ஆச்சு - பாட்டி சொல்லைத் தட்டாதே
வெத்தல மடிச்சுக் கொடுத்த பொம்பள - பாட்டி சொல்லைத் தட்டாதே
வானத்தைப் பார்த்தேன் - மனிதன்
காள காள - மனிதன்
தங்கமணி ரங்கமணி வாம்மா நீ - விடுதலை
ராஜாவே ராஜா - விடுதலை
ஆண்டவனைப் பாக்கணும் - மக்கள் என் பக்கம்
வாழ்க்கையோ கையிலே - வசந்தி
ராஜா சின்ன ரோஜாவோடு - ராஜா சின்ன ரோஜா
பூ முடிக்கணும் உன் தலையிலே - ஊமைக்குயில்
வான் மேகம் அது பூ தூவும் - நல்லவன்
வெற்றி மேல வெற்றி தான் - நல்லவன்
இதய வானில் உலவுகின்ற - வடிவங்கள்
சொந்தக்காரன் யார் சொந்தக்காரன் - சொந்தக்காரன்
என்னைப் பத்தி நீ என்ன நெனக்கிற - சங்கர் குரு
அதோ வானிலே நிலா ஊர்வலம் - தண்டனை
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு - அண்ணா நகர் முதல் தெரு
என்னைக் கதை சொல்லச் சொன்னா - அண்ணா நகர் முதல் தெரு
பச்சப்புள்ள அழுதுச்சுன்னா - புதிய பாதை
வம்புல மாட்டி வுடாதீங்கோ - சுகமான சுமைகள்
இளங்குயில் பாடுதோ - கலியுகம்
கானா பிரபா
எஸ்பிபி தொடருக்காக இன்னொரு கட்டுரையை எழுதி முடித்த பின்னர் தான் இன்று இசையமைப்பாளர் சந்திரபோஸ் அவர்கள் நம்மை விட்டு மறைந்து 10 ஆண்டுகள் என்றுதெரிந்து புதுக் கட்டுரையாக இதை வடிவமைத்துப் பகிர்கிறேன்.
சந்திரபோஸ் அவர்களின் மறைவின் போது அவர்களின் வீட்டுக்கு எஸ்பிபி சென்று 5 மணி நேரம் தங்கி ஆறுதல் வார்த்தைகள் பகிர்ந்ததை அண்மையில் நினைவுபடுத்தி நெகிழ்ந்திருந்தார் சந்திரபோஸ் மகன்
Vinoth Chandar
அத்தோடு இந்தப் பதிவுக்காக இங்கே பகிரும் புகைப்படத்தையும் தந்துதவினார்.
இன்று வர இருந்த இடுகை அடுத்த பகுதியாக வரும்.

1 comments:

ceylon24.com said...

சிறந்த தொகுப்பு