Pages

Thursday, November 17, 2016

கவிஞர் அறிவுமதி அண்ணன் பாடல்களோடு சொன்ன கதைகள்


இன்று என் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய அறிவுமதி அண்ணன் பிறந்த நாள் என்பதைக் கவிஞர் பழநிபாரதி அவர்கள் பகிர்ந்த வாழ்த்துப் பகிர்வில் இருந்து அறிந்து கொண்டேன்.தொலை தூரம் இருந்தாலும் தமிழுணர்வாலும், ஈழத்தமிழருக்கான குரலாகவும் அவர் எமக்கெல்லாம் கிட்டத்தில் இருப்பவர் ஆயிற்றே. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அறிவுமதி அண்ணருக்கு.

வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக 12 வருடங்களுக்கு முன்னர் அறிவுமதி அண்ணரோடு நான் கண்ட வானொலிப் பேட்டியின் சில பகுதிகளை ஒலிக்க விட்டுக் கேட்டேன். அதில் இசைஞானி இளையராஜா தொட்டு முக்கியமான சில இசையமைப்பாளர்களது இசையில் பாடல் எழுதிய கதையைக் குறிப்பிட்டிருந்தார். அவற்றில் இருந்து பிரித்தெடுத்தெடுத்து எழுத்துப் பகிர்வாக இங்கே பகிர்கின்றேன்.

முதலில் கே.பாக்யராஜ் இவரைத் திரையுலகுக்கு அழைத்து நான்கு திரைப்படங்களில் உரையாடல், நெறியாள்கை பின்னர் பாலுமகேந்திராவிடம் 7 படங்கள் , பாரதிராஜாவிடம் நான்கு ஆடுகால் என படங்களுக்கு உதவி இயக்குநராக இருந்திருக்கிறார். மலையாளத்தில் மம்முட்டி நடித்த யாத்ரா திரைப்படம் தெலுங்கில் பானுசந்தர், அர்ச்சனா ஜோடியோடு மீளவும் பாலுமகேந்திரா இயக்க, அந்தத் திரைப்படத்தில் முன்னர் "ஓலங்கள்" திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட "தும்பி வா" பாடல் மெட்டு பயன்படுத்தப்படுகிறது. நிரீக்ஷனா திரைப்படம் தமிழில் "கண்ணே கலைமானே" என்ற பெயரில் மொழி மாற்றப்பட்ட போது  அதில் "நீர்வீழ்ச்சி தீ மூட்டுதே"  https://www.youtube.com/shared?ci=-oydrjrc-Kk பாடலை எஸ்.ஜானகிக்காக எழுதினார் அறிவுமதி.
மூன்றாம் பிறை படத்தில் வந்த பின்னணி இசையின் ஒரு பகுதியே பாலுமகேந்திராவின் வேண்டுகோளில் இளையராஜாவால் "தும்பி வா" ஆனதாகவும் பேட்டியில் சொன்னார். பின்னர் இந்த மெட்டு "சங்கத்தில் பாடாத கவிதை" என்று ஆட்டோ ராஜா படத்துக்காக புலவர் புலமைப்பித்தனால் எழுதப்பட்டது. தான் கலந்து கொண்ட கவியரங்க மேடைகளில் தலைவராக வீற்றிருந்த புலவர் புலமைப்பித்தன் எழுதிய அதே மெட்டுக்குத் தானும் பாடல் புனையும் வாய்ப்புக் கிட்டியதைச் சொல்லி நெகிழ்ந்தார் அறிவுமதி.

தான் உதவி இயக்குநராக இருந்த போது இசைஞானி இளையராஜா பாடல் இசையமைக்கும் தருணம் கூட இருந்ததை நினைவு கூர்ந்தவர் "நாடோடித் தென்றல்" படத்தின் பாடல்களை இளையராஜா எழுதி விட்டு "மதி இதைப் பார்" என்று என்று எழுதியதைக் காட்ட, அவற்றின் ஈரம் காயாமல் படியெடுத்துக் கொடுத்தாராம், மணியே மணிக்குயிலே உட்பட.

மலையாளத்தில் காலாபாணி என்று பிரியதர்ஷன் இயக்கிய படத்தின் தமிழ் வடிவம் "சிறைச்சாலை" ஆனபோது அந்தப் படத்தின் உரையாடல், மற்றும் அனைத்துப் பாடல்களையும் எழுதினார் அறிவுமதி.
சிறைச்சாலையின் ஒவ்வொரு பாடல்களைப் பற்றியும் தனித்தனியாகப் பதிவு எழுதலாமே.
அந்தப் பாடல்கள் https://www.youtube.com/shared?ci=Kdwb7-h1LVY

இசைஞானி இளையராஜாவோடு அறிவுமதி அண்ணன் முதன் முதலாக அமர்ந்து பாட்டெழுதியது "ராமன் அப்துல்லா" படத்தில் வந்த "முத்தமிழே முத்தமிழே முத்தச்சத்தம் ஒன்று கேட்டதென்ன" https://www.youtube.com/shared?ci=CF7IhOVNFqM பாடலாம். அந்தப் பாடலை எழுத முன், நான்கைந்து மெட்டுகளைக் கொடுத்து "இவற்றில் உனக்குப் பிடித்ததை எடுத்துப் பாட்டெழுது" என்றாராம் ராஜா.

இந்த வானொலிப் பேட்டியை நான் எடுத்த சமயம் தமிழீழத்தின் A9 பாதை இலங்கை அரசாங்கத்தால் அடைபட்டிருந்த நேரமது. தன் பேட்டியில் "எங்கே செல்லும் இந்தப் பாதை" https://www.youtube.com/shared?ci=Q_AoV8ckCNQ பாடலை சேது படத்திற்காக எழுதியதோடு ராஜா குரலுக்காகத் தான் எழுதிய முதல் பாடல் என்ற நினைவோடு இப்போது A9 பாதை அடைபட்டதையே இந்தப் பாடலைத் தொடர்புபடுத்திப் பார்க்க முடிகிறது என்றார்.

ஆங்கிலம் கலக்காத தமிழில் தான் எழுதுவேன் என்ற என் கொள்கையைத் தெரிந்தும் தன் உதவியாளரை அனுப்பி "உதயா உதயா உளறுகிறேன்" https://www.youtube.com/shared?ci=d1LkuuhrHF0 பாடலை எழுத வைத்தாராம். தான் வெளியூருக்குப் போய் வந்து நாட் கணக்கில் தாமதித்தாலும் காத்திருந்து   ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கிக் கொண்டதையும் குறிப்பிட்டார்.

"பிரிவொன்றைச் சந்தித்தோம் முதன் முதல் நேற்று" https://www.youtube.com/shared?ci=-Lijqq5Cjkk பாடலைப் பிரியாத வரம் வேண்டும் படத்துக்காக எழுதிக் கொண்டிருக்கும் போது அதில் எழுதிய "ஒரு வரி நீ ஒரு வரி நான் திருக்குறள் நாம்" வரிகளைக் கண்டு நெகிழ்ந்து தனக்கு ஒரு சந்தர்ப்பத்தில் கிட்டிய பாராட்டு மோதிரத்தைக் கழற்றி அறிவுமதி அண்ணனுக்கு அணிவிக்க வந்தாராம் இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார். நான் மோதிரம் அணிவதில்லை என்று இவர் மறுக்க, இது உங்கள் தமிழுக்கு நான் தருவது என்று வற்புறுத்தினாராம் எஸ்.ஏ.ராஜ்குமார்.

வித்யாசாகரோடு அறிவுமதி அண்ணன் இணைந்து கொடுத்த பாடல்கள் தனித்துவமானவை. அவற்றைப் பற்றிச் சொல்லும் போது  "அள்ளித் தந்த வானம்" படத்துக்காக முதன் முதலாகச் சந்தித்தாராம். அப்போது ஏற்கனவே எழுதிய பாடலைக் காட்டிய போது அரை மணி நேரத்தில் மெட்டுப் போட்டது 
"தோம் தோம் தொலைவில் இருந்தும் சந்தித்தோம்" https://www.youtube.com/shared?ci=tldQN4tNa30 ஆனதாம். அதே படத்தில் "கண்ணாலே மிய்யா மிய்யா" https://www.youtube.com/shared?ci=KU0M_1bTGnw பாடலோடு,  நாட்டுப் புறப் பாடலுக்கும் மெட்டமைத்தாராம்.
தமிழ் மீது தனக்கிருக்கும் காதலை உணர்ந்து, பாடலாகவே முதலில் எழுதித் தரச் சொல்லிப் பின் மெட்டமைப்பாராம் வித்யாசாகர்.
அப்படி வந்ததிதில் "அழகூரில் பூத்தவளே என்னை அடியோடு சாய்த்தவளே" https://www.youtube.com/shared?ci=gE5S9fwx25U
(ஆகா ஆகா என்ன பாட்டய்யா இது போன வாரம் முழுக்க முணு முணுத்தேனே தேனே)
பரவை முனியம்மாவுக்காகப் பத்து நிமிடத்தில் எழுதியது" மதுர வீரன் தானே" https://www.youtube.com/shared?ci=xeY0BKhmd78

பேட்டி எடுக்கும் போது சொல்லாத பாட்டு ஆனால் என்னைச் சொக்க வைக்கும் இன்னொரு பாட்டு "விழியும் விழியும் நெருங்கும் பொழுது வளையல் விரும்பி நொறுங்கும் பொழுது வசதியாக வசதியாக வளைந்து கொடு"
https://www.youtube.com/shared?ci=LQ-FOFu7gB4

இந்தப் பேட்டி எடுத்த போது 120 பாடல்கள் வரை எழுதிய பின் தன் திரைப்பணியில் இருந்து ஒதுங்கிருந்தார். அதையும் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

அறிவுமதி அண்ணனைச் சென்னை தேடி வந்து நேரே சந்தித்திருக்கிறேன். பின்னர் வானொலிப் பேட்டியும் கண்டிருக்கிறேன். ஆனாலும் மீண்டும் சந்திக்க வேண்டும், நிறையப் பேச வேண்டும் என்ற ஆவல் இன்னும் தீரவில்லை.
நீங்கள் பல்லாண்டு காலம் நோய், நொடியின்றித் தன் மூச்சாய்க் கொண்ட தமிழோடு வாழ வாழ்த்துகிறேன்.

1 comment: