Pages

Monday, June 29, 2015

பாடல் தந்த சுகம் : வானம் அருகில் ஒரு வானம்


எண்பதுகளில் இறுதியில் கே.ராஜேஷ்வர் இயக்கத்தில் வெளிவந்த படம் "நியாயத் தராசு". இந்தப் படத்தின் மூலக் கதை மலையாள தேசத்தின் உயரிய கதை சொல்லி M.T.வாசுதேவன் எழுதியது. 

கலைஞர் கருணாநிதி திரைக்கதை, வசனம் பொறுப்பைக் கவனித்துக் கொண்டார். அந்தக் காலகட்டத்தில் கலைஞரின் வசனப் பங்களிப்பென்றால் ஒன்றில் எஸ்.ஏ.சந்திரசேகர் அல்லது வி.எம்.சி.ஹனிபா இயக்கியதாக இருக்கும். விதிவிலக்காகவும் வேறு சில இயக்குநர்களோடு இணைந்து பணியாற்றிய வகையில் இந்தப் படம் மிக முக்கியத்துவம் பெறுகிறது.

அத்தோடு கலைஞர் கருணாநிதியால் "கலையரசி" பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்ட ராதிகா கலைஞரின் எழுத்தின் புரட்சிகரமான பெண் பாத்திர வெளிப்பாடாக நடித்து வந்த போது மாறுதலாக நடிகை ராதா நடித்த வித்தியாசமான படம் என்ற பெருமையும் இதற்குண்டு.

"ராஜா ராஜாதி ராஜனெங்கள் ராஜா" பாட்டு அலை அடித்துக் கொண்டிருந்த போது "வெண்ணிலா என்னோடு வந்து ஆட வா"  http://www.youtube.com/watch?v=Hh3z6YWMsbs&sns=tw என்று மனோ தன் பங்குக்குக் கொடுத்த துள்ளிசை. அதுவரை நகைச்சுவை நடிகராக வந்த சார்லிக்குக் குணச்சித்திர வேடம் கட்டி இந்தப் பாடலையும் கொடுத்து அழகு பார்த்தது "நியாயத் தராசு"

இயக்குநர் ராஜேஷ்வரின் சிறப்பம்சம் என்னவென்றால் இவர் இயக்கிய அனைத்துப் படங்களிலும் ஒளிப்பதிவு அட்டகாசமாக இருக்கும். உதாரணம் இவரின் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய
இதயத் தாமரை, அமரன் ஆகியவற்றில் பி.சி.ஶ்ரீராம் ஒளிப்பதிவாளராக மணிரத்னம் படங்கள் தவிர்த்து அப்போது ராஜேஷ்வர் படங்களில் இடம்பிடித்தவர்.
நியாயத்தராசு படத்தின் ஒளிப்பதிவும் முக்கியமாகச் சொல்லி வைக்கவேண்டியது. ஆனால் G.P.கிருஷ்ணா என்பவரே இந்தப் படத்தில் பங்களித்திருந்தார், ஒளிப்பதிவின் வெளிப்பாட்டில் பி.சி.ஶ்ரீராம் தரம் இந்தப் படத்தில் இருக்கும்.

ராஜேஷ்வரின் அடுத்த தனித்துவம் பாடல்கள். அது சங்கர் கணேஷ் ஆக இருந்தாலென்ன, ஆதித்யனை அறிமுகப்படுத்தித் தொடர்ந்து பயன்படுத்தினாலென்ன கலக்கலான  (இந்திர விழா விதிவிலக்காக) பாடல்களை வாங்குவதில் சமர்த்தர். 

சங்கர் கணேஷ் இரட்டையர்களுக்கு ராஜேஸ்வரின் "நியாயத் தராசு", "இதயத் தாமரை" போன்ற படங்களோடு கே.சுபாஷின் "உத்தம புருஷன்" , "ஆயுள் கைதி" போன்ற படங்கள் மாமூலான அவர்களின் இசையில் இருந்து விலகித் தனித்துத் தெரிந்தவை.

நியாயத் தராசு படத்தின் அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதினார். அன்றைய காலத்தில் சந்திரபோஸ்,சங்கர் கணேஷ் ஆகியோர் வைரமுத்துவின் தொடர்ச்சியான பங்களிப்புக்கு உறுதுணையாக விளங்கினர்.

"வானம் அருகில் ஒரு வானம்" பாடல் அதன் வரிகளின் கட்டமைப்பாலும், கே.ஜே.ஜேசுதாஸின் சாதுவான குரலாலும் அப்போது வெகுஜன அந்தஸ்த்தைப் பிடித்தது. சென்னை வானொலி நேயர் விருப்பத்திலும் அடிக்கடி வந்து போனது.
அது மட்டுமா? சிறந்த பாடகருக்கான தமிழக அரசின் விருதை கே.ஜே.ஜேசுதாசுக்கு அளித்த வகையில் இன்னும் பெருமை கொண்டது.
இந்தப் பாடலின் சரணத்தில் பிரதான பாத்திரத்தின் அவலப் பக்கத்தைக் காட்டும் களத்துக்கான பாடலாக அமைந்தாலும் பொதுவாக ரசிக்க வைக்கக் காரணம், பாடல் வரி, இசை, குரல் எல்லாமே கூட்டணி அமைத்துக் கொடுத்த புரிந்துணர்வு உடன்படிக்கை தான்.

ஊர் உறங்கிய பொழுதில் இந்தப் பாடலை ஒலிக்க விட்டுத் தனியே ரசிக்கும் போது ஆத்ம விசாரணை செய்து ஆற்றுப் படுத்தும் ஆற்றல் கொண்டது இந்தப் பாடல்.

வானம் அருகில் ஒரு வானம்
தரையில் வந்த மேகம்
தலை துவட்டிப் போகும்
கானம் பறவைகளின் கானம்

 http://www.youtube.com/watch?v=61zuhSxACZI&sns=tw 

Monday, June 22, 2015

விஜய் | இளையராஜா | பழநி பாரதி


'இரவு பகலைத் தேட 
இதயம் ஒன்றைத் தேட 
அலைகள் அமைதி தேட 
விழிகள் வழியைத் தேட 
சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம் எந்தன் மனதைக் கொஞ்சம் சுமக்குமோ'

வானொலி ஒலிபரப்புக் கூடத்துள் வந்த வேகத்தில் அப்போது இந்தப் பாடலைத் தான் அன்றைய நாளின் முதல் பாடலாக வானலையில் தவழ விடுகிறேன்.
மெல்பர்னில் அதுவரை காலமும் படிப்பில்
செலவழித்து விட்டு சிட்னியில் வேலையில்லாப் பட்டதாரியாக வந்து ஆத்ம திருப்திக்காக ஊதியமற்ற வானொலி வாகனத்தில் ஏறிச் சவாரி செய்த Y2K கால கட்டம் அது. இந்தப் பாடல் ஏனோ என் மனநிலையைப் பாடுமாற் போல இருந்தது. இத்தனைக்கும் இந்தப் பாடலுக்கும் எனக்கும் அன்று தான் முதல் சந்திப்பு. தனியான இருந்த என்னை அரவணித்து ஆறுதல் சொல்லுமாற் போல என்னவொரு திடீர் பந்தம் இந்தப் பாட்டுக்கும் எனக்கும்?

'சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம் எந்தன் கனவைக் கொஞ்சம் சுமக்குமோ'

"கண்ணுக்குள் நிலவு' திரைப்படத்தின் பாடல்கள் அப்போது தான் மலேசியாவின் அலையோசை இசைத்தட்டு நிறுவனத்தின் வெளியீடாகப் பாலித்தீன் பொதி செய்யப்பட்டு சிட்னிக்கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கிறது. வானொலி நிலையத்துக்கு வரும் வழியில் அந்தக் கடையை எட்டிப் பார்த்தபோது இதைக் கண்ட போது கண்ணுக்குள் நிலவே தான். சுடச் சுட அந்தப் பாடலை ஒலிபரப்பிய நிகழ்வை இன்னும் சுமந்து கொண்டிருக்கிறது என் பிரத்தியோக இசைக் களஞ்சியத்தில் இருக்கும் இந்த இசைத்தட்டு.

'கண்ணுக்குள் நிலவு' படத்தில் "நிலவு பாட்டு நிலவு பாட்டு ஓர் நாள் கேட்டேன்" அதுவும் மறக்கக் கூடியதா என்ன? 
இந்தப் படம் வந்த போது உடனடிப் பிரபலமானது என்னவோ "ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது" பொதுவாகவே அதிக ஜனரஞ்சக அந்தஸ்துப் பெறும் பாடல்களைக் கொஞ்சம் நிதானமாகவே அனுபவிக்கலாமே என்ற என் கொள்கையில் இந்தப் பாட்டும் விதிவிலக்காக அமையவில்லை.

"தாகங்கள் தாபங்கள் தீராதா
தாளங்கள் ராகங்கள் சேராதா
விழியோரம் வழி வைக்கிறேன்,
என்னைத் தாலாட்ட வருவாளா"

"கிறுகிறுவெண்டு படித்து முடித்து விட்டு உடனேயே நாட்டுக்குப் போகவேண்டும்" என்று என் மனச்சாட்சியை உறுக்கிக் கொண்டிருந்த காலமது. மெல்பர்ன் வந்து இரண்டு ஆண்டுகள் தான் கடந்திருக்கிறது ஆனால் இரண்டு யுகங்கள் போலத் துன்புறுத்திய தனிமையும், இரவைப் பகலாக்கித் தொழில் சுமந்து,  பகலில் பாடப்புத்தகம் சுமந்து கொண்டிருந்த நாட்கள். இதுவே ஒரு யாழ்ப்பாணத்துப் பல்கலைக்கழகமாகவோ, பேராதனை வளாகமாகவோ இருந்தால் பச்சைக் குடை அசோக மரங்களில் கீழ் காதல் மொழி பேசிக் கொண்டிருக்கும். இங்கோ கற்பனைக் கோட்டை எழுப்பி
"விழியோரம் வழி வைக்கிறேன்"

'காதலுக்கு மரியாதை" காலத்தில் இருந்து இன்று வரை ஒவ்வொரு பாடலாக அதே படத்தின் ஒவ்வொரு பாடல்களும் மாறி மாறி என் விருப்பத் தேர்வில் முன் நிற்கும். இப்போது அது 
"ஏ இந்தா இந்தா இந்தா 
ஐயா வூடு 
தெறந்து தான் இருக்கு"
கேட்கும் போதே இடம் பாராமல் துள்ள வைக்கும் மொத்திசை.

"நீயா அட நானா நெஞ்சை முதன் முதல் இழந்தது யார் ந ந ந ந ந
காதல் எனும் ஆற்றில் இங்கு முதன் முதல் குதித்தது யார்,
தென்றல் வரும் வழியைப் பூக்கள் அறியாதா"
பாடல் ஆரம்பிக்கும் போது ஒரு வாத்தியம் கீச்சிட ஆரம்பிக்குமே அந்த நேரமே கண்களை மூடி இசை வாகனமேறி கனவுலகம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பேன். அப்போதெல்லாம் சீடி பொருத்திய வாக்மேன் மடியில் கிடக்க, மேசையில் ஒருக்களித்துப் படுத்துக் கண் மூடியபடி பாடலோடு ஐக்கியமாகியிருப்பேன். ஃப்ரெண்ட்ஸ் படம் வந்து பதினைந்து ஆண்டுகளைத் தொடப் போகிற பாட்டு ஆனால் இன்னும் பதினைந்து ஆண்டுகள் போனாலும் பருவக் குமரியாகத் தான் இருக்கும் போல இந்தப் பாட்டு, "அள்ளிக் கொடுத்தேன் மனதை"

இசைஞானி இளையராஜாவின் 'காதலுக்கு மரியாதை' படத்தில் இளங்கவி பழநி பாரதியின் பாடல்கள் என்று எழுத்தோட்டத்தில் காட்டி வெற்றிக் கூட்டணி அமைக்கிறார்கள். நாயகன் விஜய் இன் திரையுலக ஆரம்ப வாழ்வின் திருப்புமுனைப் படங்களில் ஒன்று. சங்கிலி முருகன் தயாரிப்பு, அப்படியே விநியோகஸ்தர் ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கு அடுத்த தசாப்தம் வரை வெற்றியை அள்ளிக் கொட்டப் பிள்ளையார் சுழி போட்ட படம்.
"கண்ணுக்குள் நிலவு" படத்திலும் அதே பாசில், இளையராஜா, விஜய், கூட்டணி 
இங்கேயும் முழுப் பாடல்களும் பழநிபாரதிக்குச் சீர் செய்ய, அவரும் இன்றளவும் இந்தப் பாடல்களைப் பேசிக் கொண்டிருக்கும் அளவுக்கு வரிகளை அணிகலனாக்கியிருக்கிறார் ராஜாவின் முத்தான மெட்டுகளை வைத்து.

இயக்குநர் பாசிலின் அந்த இரண்டு படங்களோடு அவரின் சீடர் சித்திக் இன் "ப்ரெண்ட்ஸ்". அதிலும் விஜய், இசைஞானி இளையராஜாவோடு, இளங்கவி பழநி பாரதியே முழுப்பாடல்களையும் ஆக்கித் தந்தார்.

"இரவு பகலைத் தேட"
 http://www.youtube.com/watch?v=4soLRlhOfPc&sns=tw 

"என்னைத் தாலாட்ட வருவாளோ"
 http://www.youtube.com/watch?v=8SnPN4-NF9I&sns=tw 

"தென்றல் வரும் வழியை"
 http://www.youtube.com/watch?v=tOPjl71yoaQ&sns=tw 

Friday, June 19, 2015

சஹானா சாரல் தூவுதோ - மழைப்பூக்களின் பாட்டு


"சஹானா சாரல் தூவுதோ" மழைப்பூக்களின் பாட்டு

கண்ணாடிச் சன்னலின் உருண்டைப் புள்ளியாகப் பட்டுத் தெறிந்து அப்படியே இழுபட்டுக் கீழிறங்குகின்றன மழைத் துளியின் கோடுகள், சிட்னி ரயிலில் கூட்டமில்லாத காலை ஏழுமணிப் பயணத்தில். மழைப்புள்ளிகள் ஜன்னலில் திட்டுத் திட்டாகப் பரவி மறு முனையில் இருந்து சினேக விசாரிப்பாய்.

"சஹானா சாரல் தூவுதோ" காதுக்குள் கண்கூடாகத் தொனித்த அந்த மழைத் துளியின் தெறிப்புகளுக்கு இசை வடிவம் கொடுக்குமாற் போல மலருகின்றது இன்றைய காலை.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இன் A380 என்ற காண்டாமிருகப் பயணி வண்டி சிங்கையில் இருந்து சிட்னி நோக்கிப் பயணிக்கிறது. நெருக்கம் காட்டாத அகன்ற இருக்கை, ஹெட்ஃபோனால் காதுகள் நத்தை தன் கூட்டுக்குள் சுருக்கிக் கொண்டது போல இசைக்குள் அடைக்கலம். 

சாக்ஸ் ஆலாபனை எழுப்ப 
2.27 நிமிடத்தில் வந்து சறுக்கிக் கொண்டே மெல்ல எழும்புமே ஒரு இசை அந்தக் கணம் விமானப் பயணத்திலும் சன்னலின் முத்தம் பதித்தன மழைத் துளிகள்.
"தீம் தரனன தீம் தரனன திரனன திரனன" என்று அந்த இசையை வாரியணைக்கும் ரஹ்மானுடன் சேர்ந்த கூட்டுக் குரல்களைக் கேட்கும் போது மழையின் நர்த்தனம் தான் அதைக் காட்சிப்படுத்த முடியும்.
எட்டு வருடங்களுக்கு முன்னான அந்த விமானப் பயணம் அது. விமானத்தின் பிரத்தியோக இசைப்பெட்டியில் சேமித்து வைத்திருந்த பாடலில் ஒன்றாக இதுவும் இருந்தது.
அன்று வானத்தில் மிதக்கும் போது தந்த மழைச் சுகம் இன்று தண்டவாளத்தில் வழுக்கிப் பயணிக்கும் வண்டியில்.

உதித் நாராயணனின் தேங்காய் உரிக்கும் தமிழோடு சின்மயி மெல்லிசைக் குரல் ஜோடி போடும். பாடலில் தனக்கான ஒவ்வொரு சொல்லையும் நோகாமல் வளைத்தும் நெளித்தும் கொடுத்த வகையில் சின்மயி வெகு சிறப்பாக உழைத்திருக்கிறார்.

"தலை முதல் கால் வரை தவிக்கின்ற தூரத்தை இதழ்களில் கடந்து விடு" என்று கிசுகிசுக்கும் போது பின்னால் தாள வாத்தியம் டுடுடுடும்ம்ம்மென்று  ஆரவாரமின்றி இழுபட்டு அப்படியே மிருதங்கத்திடம் போகும் போது இன்னும் கொஞ்சம் அதிகமாகவே அந்தத் தாளத்தைப் பின்னணியில் கொடுத்துக் கொண்டே போகுமே, ஹெட்போனில் மிக நெருக்கமாக இந்தப் பாடலோடு உட்கார்ந்து கொள்ளும் போது அந்த நொடிகள் தரும் பரவசமே தனி.

ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் இதுவரை வந்த பாடல்களில் ஆகச் சிறந்த பாடலாக இதையே என் பட்டியலில் முதலில் சேர்ப்பேன்.

பூமிக்கும் வானுக்கும் விரிகின்ற தூரத்தை (மழைப்) பூக்களில் நிரப்பட்டுமா 

பிஞ்சுக் கால்களைத் தொப்பென்று பதித்துக் குதித்து விளையாடும் குழந்தை போல
சன்னல் கண்ணாடியில் குதிக்கும் மழைத் துளிகள்

 http://www.youtube.com/watch?v=MSCBx07ENGQ&sns=tw 

Wednesday, June 17, 2015

சிங்கப்பூர் ஒலி படைப்பாளினி பாமா நினைவில்


இணையம் தந்த புண்ணியத்தில் உலக வானொலிகளைக் கேட்க ஆரம்பித்த போது தொடர்ந்து பதினைந்து வருடங்களாக நேசத்தோடு நான்  நேயராக இணைந்திருக்கும் வானொலி சிங்கப்பூர் ஒலி.
இத்தனை ஆண்டுகளில் பல்வேறுபட்ட குரல்களை சிங்கப்பூர் ஒலி அலை வழியாகக் கேட்டிருந்தாலும் ஒரு சில குரல்களை இத்தனை ஆண்டுகளாகக் கேட்டு ரசிக்கும் வாய்ப்புக் கிடைத்ததிருக்கிறது. அதில் முதன்மையாமையானவர் நிகழ்ச்சிப் படைப்பாளர் பாமா பாலகிருஷ்ணன் அவர்கள்.

வானொலியில் தான் படைக்கும் நிகழ்ச்சிகளில் பொருந்தமான கோர்வையில் பாடல்களைக் கொடுக்கும் போதும், விளம்பரக் குரல்களின் போதும், நேயர்களுடனான கலந்துரையாடலின் போதும் தனித்துவமாக மிளிர்ந்தவர் இவர்.

நேயர் கலந்துரையாடலின் போது மென்மையாகவும், கருத்தைச் சிதறவிடாம அணைத்துக் கொண்டு போவதில் சமர்த்தர். நேயர்களின் கருத்தை உள்வாங்கிய பின் அதிகாரத்தனம் இல்லாது தன் கருத்தை இசைவாகக் கொடுப்பார். இதனால் மாறுபட்ட கருத்தோடு வருபவர் கூட இவரின் கருத்தை உள்வாங்கும் பக்குவத்தை ஏற்படுத்துவார்.

சிங்கப்பூர் ஒலி நாடகங்கள் பலவற்றில் பாமா குறித்த பாத்திரமாகவே மாறி நடித்திருந்ததை எல்லாம் ரசித்திருக்கிறேன். ஒருமுறை வசந்தம் தொலைக்காட்சியின் சிறப்பு நாடகத்திலும் இவரைப் பார்த்ததாக ஞாபகம்.
கடந்த தீபாவளி ஒலி சிறப்பு நாடகத்தில் "வழக்கமா பண்றதை விட நான் பயங்கரமான வேஷம் ஒண்ணு போடப் போறேன்" என்று முன்னோட்டம் சொன்ன போது மனதுக்குள் சிரித்தேன்.

சிங்கப்பூர் வானொலியின் போக்குவரத்துத் தகவலில் பாமாவின் குரல் அடிக்கடி ஒலிக்கும் போது அம்மாவின் கனிவான ஆலோசனை போன்றிருக்கும்.

சில மாதங்களுக்கு முன் சிங்கப்பூரின் புகழ் பூத்த மருத்துவர் ஒருவரின் இறப்பு அஞ்சலி செய்யும் போது அந்த மருத்துவர் பாமா தான் நிகழ்ச்சின் செய்பவர் என்று அறியாது அவரின் நிகழ்ச்சியைச் சிலாகித்துப் பேசியதை நெகிழ்வோடு சொன்னார்.

ஒலிப்படைப்பாளர்களுடன் சம்பாஷிக்கும் போது ஐய்யய்யோ என்று வெட்கப்பட்டு ஒலிக்கும் பாமாவின் குரலில் அப்பட்டமான குழந்தைத்தனம் ஒட்டியிருக்கும்.

சிங்கப்பூர் ஒலி படைப்பாளி, நேசத்துக்குரிய பாமா அவர்களின் இறப்புச் செய்தியை அறிந்து அதிர்ச்சியடைகிறேன்.

நேயர்களுடன் பண்பாகவும், மென்மையாகவும் பழகிய பாமா அவர்களின் குரல் மனதை விட்டு நீங்காது நிறைந்திருக்கிறது எனது ஆழ்ந்த அஞ்சலிகளை நேயர்களில் ஒருவனாகப் பகிர்கிறேன்.

Wednesday, June 10, 2015

பாடல் தந்த சுகம் : காத்தே காத்தே என் காதோடு


பாடல் தந்த சுகம் : காத்தே காத்தே என் காதோடு சொல்லு

"காதல் சாதி" திரைப்படம் இசைஞானி இளையராஜா இசையமைத்து முழுமையாக வெளிவராத படங்கள் என்ற பட்டியலில் அடங்கும். இயக்குநர் கஸ்தூரி ராஜா இயக்க நடிகர் உதயா. பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிப்பில் வெளிவர இருந்த திரைப்படம் இதுவாகும்.

இந்தப் படத்திற்காக மொத்தம் ஒன்பது இசையமைக்கப்பட்டவை என்பதை நினைக்கும் போதுதான் முடங்கிவிட்ட படத்தால் அருமையான பாடல்களும் விழலுக்கு இறைத்ததாகப் போய்விட்டதோ என்று எண்ணத் தோன்றும். கஸ்தூரிராஜா இதற்கு முன்னர் தேவா இசையில் "மவுன மொழி" படத்துக்காகப் பத்துப் 
பாடல்களைப் பெற்றுப் பயன்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

"காதல் சாதி" திரைப்படப் பாடல்கள் 2001 ஆண்டு வாக்கில் வெளியான போது அந்தக் காலகட்டத்தில் கார்த்திக்ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு, பவதாரணி ஆகியோர் பாடகராக ஒரு சில படங்களில் பாடி வந்தனர். இந்தப் படத்திலும் அவர்களின் பங்களிப்பு இருக்கிறது. தவிர இசைஞானி இளையராஜா, கோவை கமலா, உன்னிகிருஷ்ணன் ஆகியோரும் பாடியிருக்கிறார்கள்.
பாடகி மஹதியின் குரலை மேற்கத்தேயப் பாணியில் கேட்டுப் பழகிய காதுக்கு இவரின் ஆரம்பகாலப் பாடலான "என்னை மறந்தாலும்" பாடலை கேட்கும் போது புதுமையாக இருக்கும்.

"மனசே என் மனசே" உன்னிகிருஷ்ணன், பவதாரணி பாடிய ஜோடிப் பாடல் அப்போது பிரபலம்.

பாடகர் கார்த்திக் சன் டிவியில் அப்துல் ஹமீத் அவர்கள் வழங்கி வந்த "பாட்டுக்குப் பாட்டு" மூலம் மேடை வாய்ப்பைப் பரவலாக்கிக் கொண்டவர். ஒருமுறை தன் பேட்டியில் "காதல் சாதி" படப்பாடல் தான் தனக்குக் கிட்டிய முதல் வாய்ப்பு என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் "ஸ்டார்" படத்தில் வந்த "நேந்துகிட்டேன்" பாடல் சமகாலத்தில் ரஹ்மான் இசையில் பாடும் வாய்ப்பாகக் கார்த்திக்குக்கு அமையவே அதுவே அவரின் அறிமுகப்பாடலாக அமைந்துவிட்டது. இருப்பினும் இளையராஜா, ரஹ்மான் என்ற இரு பெரும் முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் தனது அறிமுகத்தைக் காட்டும் வாய்ப்பு எத்தனை பேருக்குக் கிட்டும்.

"காதல் சாதி" படத்தில் பாடகர் கார்த்திக் 
மூன்று பாடல்களைப் பாடியொருக்கிறார்.
அதில் தனித்துத் தெரிவது "காத்தே காத்தே என் காதோடு சொல்லு".
நேற்று ஆதித்யா டிவியின் பழையதொரு வீடியோவை நோண்டி எடுத்தபோது அதில் நகைச்சுவை நடிகர் "காதல்" சுகுமார் பேசிக் கொண்டிருந்தார். காதல் சாதி தான் தன்னுடைய முதல்படம் என்றும் அதில் பாடியிருப்பதாகவும் அவர் குறிப்பிடவே, அந்த வீடியோவை ஓரமாகக் கிடப்பில் போட்டுவிட்டு "காதல் சாதி" பாடல்களைக் கேட்க ஆரம்பித்தேன். "காதல்" சுகுமார் தானும் பாடியதாகக் குறிப்பிட்ட பாடல் இந்தக் "காத்தே காத்தே", அதில் கோஷ்டிப் பாடகராகப் பாடியிருக்கிறார்.

2000 களில் என் வானொலி நிகழ்ச்சிகளில் அளவுகணக்கில்லாமல் நான் ஒலிபரப்பிய பாட்டு. புல்லாங்குழல் இசையோடு தொடரும் போது அப்படியே ஏகாந்தத்தை மாற்றாமல் இறுக்கிப் பிணைத்திருக்கும் இசையும், எளிமையான வரிகளும்

"தன்னந்தனியா நானு அது போல் இந்தக் காடு" என்ற வரி வரும் போது எனது வானொலி நிகழ்ச்சி நள்ளிரவைத் தாண்டியிருக்கும். ஒலிபரப்புக் கூடத்துள் நானும் தனிமையில் தான் அப்போது, வேணுமென்றால் "தன்னந்தனியா நானு அது போல் இந்தப் பாட்டு" என்று வைத்துக் கொள்ளலாம் என்னும் அளவுக்கு நெருக்கமான பாட்டு இது.

 http://www.youtube.com/watch?v=c9N5MdLZNhQ&sns=tw 

Tuesday, June 2, 2015

இளையராஜாவின் காதல் 50+


இசைஞானி இளையராஜா தந்த தீஞ்சுவைப் பாடல்களும், பின்னணி இசையும் என் நெஞ்சில் நீக்கமற நிறைந்திருப்பதை அவரின் 72 வது பிறந்த நாளில் மீளவும் பூரிப்போடு பகிர்ந்து கொள்வதோடு அவர் பாடிய பாடல்கள் தான் என்னளவில் மனசுக்கு முதலில் நெருக்கமாக இருப்பதையும் சொல்லி வைக்க வேண்டும்.

அந்த வகையில் இசைஞானியின் பிறந்த நாள் சிறப்புப் பகிர்வாக அவர் பாடிய காதல் பாடல்களில் ஜோடிப் பாடல்கள் ஐம்பதைத் திரட்டி இங்கே பகிர்வதை மகிழ்வடைகின்றேன். இதைத் தாண்டி இன்னும் ஏராளம் பாடல்கள் இருந்தாலும் இந்தப் பட்டியல்  என் மனதில் உட்கார்ந்திருந்ததால் எழுதும் போது சட்டென்று எழுந்து நின்று விட்டன.

இளையராஜாவின் காதல் ஜோடிப் பாடல்கள் மட்டும் போதாது, அவரின் தனிப் பாடல்களில் (கூட்டுக்குரல்கள் ஒலிக்க) காதல்/அன்பு என்ற போன்ஸ் தொகுப்பையும் சேர்த்த இசைத் திரட்டை ஆண்டு அனுபவிக்க வேண்டுகிறேன்.

1. சொர்க்கமே என்றாலும் - எஸ்.ஜானகி (ஊரு விட்டு ஊரு வந்து)
2. தென்றல் வந்து தீண்டும் போது - எஸ்.ஜானகி ( அவதாரம்)
3. பூமாலையே தோள் சேரவா - எஸ்.ஜானகி (பகல் நிலவு)
4. மலரே பேசு மெளன மொழி - சித்ரா (கீதாஞ்சலி)
5. ஒரு ஜீவன் அழைத்தது - சித்ரா (கீதாஞ்சலி)
6. தேவனின் கோயில் மூடிய நேரம் - சித்ரா (அறுவடை நாள்)
7. காதலா காதலா - சித்ரா ( தாய்க்கு ஒரு தாலாட்டு)
8. இந்த மான் உந்தன் சொந்த மான் - சித்ரா (கரகாட்டக்காரன்)
9. நேத்து ஒருத்தரை ஒருத்தரு - சித்ரா (புதுப்பாட்டு)
10. மருதாணி அரச்சேனே - எஸ்.ஜானகி ( ராஜா கைய வச்சா)
11. கண்ணம்மா காதல் எனும் - எஸ்.ஜானகி ( வண்ண வண்ணப் பூக்கள்)
12. விளக்கு வச்ச நேரத்துல - எஸ்.ஜானகி (முந்தானை முடிச்சு)
13. நான் தேடும் செவ்வந்திப்பூ இது - எஸ்.ஜானகி (தர்ம பத்தினி)
14. கண் மலர்களின் அழைப்பிதழ் - எஸ்.ஜானகி (தைப்பொங்கல்)
15. புன்னகையில் மின்சாரம் - எஸ்.ஜானகி (பரதன்)
16. மாதுளங் கனியே நல்ல - எஸ்.ஜானகி (சாமி போட்ட முடிச்சு)
17. ஊரோரமா ஆத்துப் பக்கம் - சித்ரா (இதயக் கோயில்)
18. அந்த நிலாவத் தான் - சித்ரா (முதல் மரியாதை)
19. நில் நில் நில் - உமா ரமணன் ( பாட்டு பாடவா)
20. செவ்வரளித் தோட்டத்திலே - உமா ரமணன் (பகவதிபுரம் ரயில்வே கேட்)
21. மேகம் கருக்கையிலே - உமா ரமணன் (வைதேகி காத்திருந்தாள்)
22. ரெட்டைக் கிளி சுத்தி வந்த - சித்ரா 
(கிராமத்து மின்னல்)
23. ஒரு கணம் ஒரு யுகமாக - எஸ்.ஜானகி (நாடோடித் தென்றல்)
24. ஒரு ஆலம்பூவு - சுஜாதா (புண்ணியவதி)
25. ஏ கொஞ்சிப் பேசு - சுஜாதா (காதல் கவிதை)
26. சாமக்கோழி ஏன் - எஸ்.பி.சைலஜா ( பொண்ணு ஊருக்குப் புதுசு)
27. காதல் ஓவியம் - ஜென்ஸி (அலைகள் ஓய்வதில்லை)
28. சிறு பொன்மணி - எஸ்.ஜானகி (கல்லுக்குள் ஈரம்)
29. சங்கத்தில் பாடாத - எஸ்.ஜானகி (ஆட்டோ ராஜா)
30. நாள் தோறும் எந்தன் - கவிதா சுப்ரமணியம் ( தேவதை)
31. வானம் மெல்ல மண்ணில் - பெல்லா ஷிண்டே (நீதானே என் பொன் வசந்தம்)
32. அடி ஆத்தாடி - எஸ்.ஜானகி (கடலோரக் கவிதைகள்
33. வட்டி எடுத்து - சித்ரா (கிராமத்து மின்னல்)
34. வள்ளி வள்ளி என - எஸ்.ஜானகி (தெய்வ வாக்கு)
35. நில்லாத வெண்ணிலா - ஸ்வர்ணலதா (ஆணழகன்)
36. ஆகாயத் தாமரை - எஸ்.ஜானகி (நாடோடிப் பாட்டுக்காரன்)
37. தோட்டம் கொண்ட ராசாவே - ஜென்சி (பகலில் ஓர் இரவு)
38. தென்னமரத்துல தென்றலடிக்குது - பி.சுசீலா ( லட்சுமி)
39. சாண் பிள்ளை ஆனாலும் - எஸ்.ஜானகி  (மனைவி ரெடி)
40. பொன்னின் திருவோணம் - சுஜாதா (கவலைப்படாதே சகோதரா)
41. பொன்னோவியம் - எஸ்.ஜானகி (கழுகு)
42. ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே - எஸ்.ஜானகி ( எல்லாமே என் ராசா தான்)
43. நேற்று வந்த காற்று - எஸ்.ஜானகி (கண்மணி)
44. சின்னப் பொண்ணு சேல - எஸ்.ஜானகி (மலையூர் மம்பட்டியான்) 
45. கண்ணே என் காவிரியே - சித்ரா (தங்கமான ராசா)
46. விழியில் விழுந்து - சசிரேகா (அலைகள் ஓய்வதில்லை)
47. இந்திர சுந்தரியோ - எஸ்.ஜானகி (என் அருகில் நீ இருந்தால்)
48. மாலைச் செவ்வானம். - ஸ்வர்ணலதா (இளையராஜாவின் ரசிகை)
49. என் காவிரியே - சித்ரா (எங்க ஊரு மாப்பிள்ளை)
50.என் கானம் - ஜென்ஸி (ஈரவிழிக் காவியங்கள்)
 
இளையராஜாவின் தனிப்பாடலில் காதல்
 
 1. யாரடி நான் தேடும் - பொண்டாட்டி தேவை
2. நிலவே நீ வர வேண்டும் - என் அருகே நீ இருந்தால்
3. கானம் தென் காற்றோடு - கண்ணுக்கொரு வண்ணக்கிளி
4. எங்கிருந்தோ அழைக்கும் - என் ஜீவன் பாடுது
5. இதுதான் இதுக்குத் தான் - புலன் விசாரணை
6. இதயம் ஒரு கோயில் - இதயக் கோயில்
7. மங்கை நீ மாங்கனி - இன்னிசை மழை
8. ஏ வஞ்சிகொடி (கார்த்திக்ராஜா இசை) - பொன்னுமணி
9. பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - இதயம்
10. மைனா மைனா - பகல் நிலவு
11. நாரினில் பூ தொடுத்து - இரண்டில் ஒன்று
12. மெட்டி ஒலி காற்றோடு - மெட்டி
13. ஒரு காவியம் - அறுவடை நாள்
14. ஊரெல்லாம்  உன் பாட்டுத் தான் - ஊரெல்லாம் உன் பாட்டு