Pages

Monday, March 30, 2015

பாடல் தந்த சுகம் : தானா வந்த சந்தனமே

'ஊரு வந்து ஊரு வந்து' படத்தின் பாடல்கள் வந்த நேரம் இந்திய அமைதிப்படை போய் பிரேமதாச - புலிகள் தேனிலவு காலமாக இருந்தது. மின்சாரம் இருந்தாலும் படங்கள் அவ்வளவாக தியேட்டருக்கு வராது. வீடியோ காசெட்டுகளை நம்பித்தான் சீவியம். ஆனாலும் பாட்டு மட்டும் சுடச்சுட வந்துவிடும். 

கரகாட்டக்காரன் படத்தின் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஒலித்துக் கொண்டிருந்த சூழல் அந்தப் பாடல்கள் தந்த மயக்கம் தீர முன்பே 'ஊரு விட்டு ஊரு வந்து' படப் பாடல்கள் ஷண் ரெக்கோர்டிங் பார் இற்கு வந்து சேர்ந்தன. வழக்கம் போல ராஜா பாட்டென்றால் முழுப்படப் பாடலையும் ஒலிநாடாவின் ஒரு பக்கம் முழுதும் நிரப்பி அடித்துக் கேட்டுக் கேட்டுப் பழக்கமாவது என்ன விரதமோ அப்போது 😄
அதே போல 'ஊரு விட்டு ஊரு வந்து' படப்பாடல்களையும் ஷண் ரெக்கோர்டிங் பார் துணையோடு அடித்து வைத்திருந்தாலும் உடனே கேட்கவேண்டும் என்ற ஆர்வம் அப்போது எழாததற்கு முக்கிய காரணம் தொண்ணூறுகளில் பெருவாரியாகக் குவிந்த ராஜாவின் ஏனைய படங்களின் பழக்கப்பட்ட பாடல்களைக் கேட்கவே நேரம் போதாதிருந்தது.

அந்த நேரம் சென்னை வானொலி வழியாக நேயர் விருப்பமாக அறிமுகமான பின்னர் தான் பதிவு பண்ணியிருந்த 'ஊரு விட்டு ஊரு வந்து' படப் பாடல்களில் "சொர்க்கமே என்றாலும்" பாடலைத் தொடர்ந்து "தானா வந்த சந்தனமே" பாடலில் மூழ்கிப் போனேன். அன்று என்னை அடிமையாக்கியது தான் இன்னும் அதே அளவில் கட்டியாள்கிறது இந்தப் பாடல். "சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா" பாடல் 15 வருடங்களைக் கடந்து எனது வானொலி நிகழ்ச்சியின் முகப்புப் பாடல் என்றால் இதே படத்தில் வந்த "இக்கு சையக்கு சையக்கு" பாடலைப் புலம்பெயர்ந்த சூழலில் தான் அதிகம் கேட்டு ரசித்திருக்கிறேன். இன்னொரு பாட்டு "கற்பூர தீபத்திலே" பாடலைக் கூட சமீப காலங்களில் தான் கேட்க வாய்ப்புக்கிட்டியிருக்கிறது.

140 கி.மீ வேகத்தில் நெடுஞ்சாலையில் ஓடும் காரை ஒரு வாளி தண்ணியை வீசியடிக்கும் போது பட்டுத் தெறிக்குமாற் போல அதிவேக இசையோடு பயணித்தாலும் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடும் போது மெல்லிசைப் பாடலுக்குச் சற்றும் குறைவில்லாத உணர்வையும் ஒருங்கே கொண்டு வந்து இன்பம் பாய்ச்சும்.
இங்கே தான் இளையராஜாவின் இசையின் தனித்துவம் நின்று விளையாடும். 

"வண்ண வண்ண வளவி போட்டு வசமாக வளைச்சுப் போட்டு என்னைக் கட்டி இழுத்துப் போகும் இளந்தேகமே" 
இந்த இடத்தில் இருந்து தான் பாட ஆரம்பிப்பேன் அந்த நேரம் கங்கை அமரன் வரிகளில் சரணாகதி அடைந்து தரை தட்டியிருக்கும் மனது.
நல்ல தமிழ்ச் சொற்களைத் தனக்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் சந்தம் கட்டி விளையாட ஆரம்பித்து விடுவார் கங்கை அமரன்.
இந்தாங்கோ இன்னொன்று
"கொத்து மல்லி கொண்டையில் ஆட குளிர் பார்வை வண்டுகள் ஆட 
புத்தம் புது செண்டுகள் ஆட 
புது தாகம் தோன்றுமே"

ஆகா ஆகா கங்கை அமரன் இருக்கும் திசை நோக்கித் தொழுது போற்றி

Wednesday, March 25, 2015

'தேனிசைத் தென்றல்" தேவாவை சந்தித்த வேளை


நேற்றிரவு 'தேனிசைத் தென்றல்' தேவா மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்களுடனான
உணவு விருந்துபசார நிகழ்வில் கலந்து கொண்டேன். அவ்வேளை தேவா அவர்களுடன் எனது மனப் பகிர்வையும், கையோடு கொண்டு போன 'தேனிசைத் தென்றல்' தேவா கொடுத்ததில் பிடித்த நூறு என்ற எழுத்துப் பகிர்வையும், நினைவுப் பரிசோடு அவரிடம் பகிர்ந்து கொண்டேன்.

தேவாவிடம் நான் பேசியதில் இருந்து சில பகிர்வு,

கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் போகும் இரவு பஸ் "கந்தன் இருக்குமிடம் கந்த கோட்டம்" என்ற உங்கள் கானா பாடலோடு தொடங்கியது. யாழ்ப்பாணத்தில் நான் இறங்கிய அந்த நாள் சைக்கிளை எடுத்துக் கொண்டு மளிகைக் கடைக்குப் போகும் போது ஒரு கலியாண வீட்டு ஒலிபெருக்கி "முத்து நகையே முழு நிலவே" என்று பாடியது. ஆகவே நீங்கள் இன்னமும் நம் கிராமங்களில் மறக்கடிக்கப்படாத இசையாக வாழ்கிறீர்கள்.

தேவா என்றால் கானா என்பதைத் தாண்டி நீங்கள் கொடுத்த மெலடி பாடல்கள் ஏராளம். ஒவ்வொரு படத்தில் இருந்தும் ஒவ்வொரு பாடல் என்று ஆசையாகக் கோத்து வைத்த நூறு பாடல் பகிர்வு இது.

தமிழ்த்திரையிசையில் தொண்ணூறுகள் தேவாவின் மகத்தான பங்களிப்பாக அமைந்தவை.

ஹரிஹரனுக்கு நீங்கள் கொடுத்த பாடல்கள் அளவுக்கு சிறப்பான பாடல்களை அதிகளவு வேறு யாரும் கொடுக்கவில்லை என்பது என் அபிப்பிராயம் என்று சொல்லி முடித்தேன்.

"ஆகா பட்டியலைத் தாருங்களேன் நானே மறந்த பாடல்களை நினைவுக்குக் கொண்டு வர உதவியா இருக்கும்" 
என்று சொல்லி ஆசையோடு பெற்றுக் கொண்டார் தேவா.

Tuesday, March 17, 2015

இயக்குநர் அமீர்ஜான் மறைவில்


எண்பதுகளில் வெற்றிகரமாக இயங்கிய இயக்குநர்களில் பத்திரிகை ஊடகங்களின் கமரா கண்ணில் அகப்படாதவர்களில் ஆபாவாணன், கே.ரங்கராஜ் வரிசையில் மூன்றாவதாக அமீர்ஜானையும் சேர்க்கலாம்.
அமீர்ஜானின் குருநாதர் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இறந்தபோது தொலைக்காட்சிகளின் அஞ்சலிப் பகிர்வுகளில் கூட அவரின் பகிர்வு இடம்பெறவில்லை. 

அதிக ஆர்ப்பாட்டமில்லாது பல வெற்றிப்படங்களை அளித்த படைப்பாளி என்ற வகையில் அமீர்ஜான் முக்கியத்துவம் பெறுகிறார். கே.பாலசந்தர் கவிதாலயா என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த போது முழு நீள மசாலாப் படத்தை எடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இயக்குநர் எஸ்.பி.முத்துராமனிடமே முதல் தயாரிப்பாக "நெற்றிக்கண்" படத்தை ரஜினியை நாயகனாக வைத்து இயக்கும் பொறுப்பை அளித்தார். தொடர்ந்து கமலை வைத்து "எனக்குள் ஒருவன்" படத்தைத் தயாரித்த போது அதற்கும் எஸ்.பி.முத்துராமன் தான் இயக்குநர்.

எஸ்.பி.முத்துராமன் தவிர கவிதாலயா தயாரிப்பில் ஏராளமான படங்களை இயக்கியவர் என்ற பெருமையைப் பெறுபவர் அமீர்ஜான். பூவிலங்கு படத்தில் ஆரம்பித்த இயக்கம், கவிதாலயா நிறுவனம் இளையராஜாவோடு இணைந்த இறுதிப் படமான "உன்னைச் சொல்லிக் குற்றமில்லை" படம் கூட அமீர்ஜான் இயக்கத்திலேயே வெளிவந்த பெருமை உண்டு.

கே.பாலசந்தர் முழு நீள மசாலாப்படம் இயக்குவதில்லை என்ற கொள்கைக்கு மாற்றீடாக அமீர்ஜானைப் பயன்படுத்தினாரோ என்று எண்ணுவேன். 
கே.பாலசந்தர் போன்றே அமீர்ஜானும் இசையமைப்பாளர் நரசிம்மனுக்குச் சிறப்பான வாய்ப்புகள் கொடுத்தவர். "புதியவன்" படத்தின் அனைத்துப் பாடல்களுமே வி.எஸ்.நரசிம்மனின் சாகித்தியத்தில் உச்சமாக அமைந்தவை. வண்ணக் கனவுகள் படத்துக்கும் அவரே இசை.

"அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது"என்று  நட்பு படத்திலும், தர்மபத்தினி படத்துக்காக " நான் தேடும் செவ்வந்திப் பூ இது", "போட்டேனே பூவிலங்கு" பாடலோடு பூவிலங்கு படத்திலும், "சொர்க்கத்தின் வாசல்படி" என்று உன்னைச் சொல்லிக் குற்றமில்லை படத்துக்காகவும் இணைந்த இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குநர் அமீர்ஜான் கூட்டணியில் 
"இரு வழியின் வழியே நீயா வந்து போனது" பாடல் உச்ச விளைச்சல். அந்தப் பாடலோடு படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகியதோடு அமீர்ஜானுக்கு முத்திரைப் படமாக அமைந்தது அவரின் இயக்கத்தில் கவிதாலயா தயாரிப்பில் வந்த "சிவா". இந்தப் படம் டைகர் சிவா என்ற தலைப்பில் வெளிவரவும் பரிசீலனையில் இருந்தது.

தனது எழுபதாவது வயதில் அமீர்ஜான் இன்று காலமாகிவிட்டார். அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்.


அமீர்ஜானின் கலையுலக வாழ்வு குறித்த முழுமையான பகிர்வு இங்கே கிடைக்கிறது
http://www.tamilcinetalk.com/film-director-ameerjohn-was-dead/

Monday, March 2, 2015

வீணை விற்பன்னர் ராஜேஷ் வைத்யாவின் "இது ஒரு நிலாக்காலம்" இசைமழையில் நான்

வீணை வாத்திய வாசிப்பில் துறைபோந்த ஒரு வாத்திய விற்பன்னர், திரையிசைப் பிரியராகவும், அதுவும் குறிப்பாக இசைஞானி இளையராஜாவின் ரசிகராகவும் அமைந்து விட்டால், அவர் படைக்கும் நிகழ்ச்சி எப்பேர்ப்பட்ட பரவசத்தைக் கொடுக்குமோ அதைத்தான் கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி சனிக்கிழமை திரு ராஜேஷ் வைத்யாவின் இசை நிகழ்ச்சி வாயிலாகக் கிட்டியது. 

"இது ஒரு நிலாக்காலம்" என்ற கவித்துவமான தலைப்போடு வீணைக்கலைஞர் திரு ராஜேஷ் வைத்யா இந்த நிகழ்ச்சியைப் படைக்கவிருக்கின்றார் அந்த ஒற்றைத் தலைப்பே இந்த நிகழ்ச்சி மீதான எதிர்ப்பார்ப்பைக் கிளப்பிவிட்டது. "சுப்ரதீபம்" என்ற சிட்னியின் உள்ளூர் இசைக்கலைஞர்களோடு ஒன்றிணைந்து படைக்கவிருக்கும் நிகழ்ச்சி பெப்ரவரி 28 ஆம் திகதி மாலை 6 மணிக்கு Redgum Function Centre, Wentworthville இல் நடக்கவிருக்கிறது என்றதுமே கொஞ்சம் அவ நம்பிக்கையோடுதான் போனேன். கையில் ஒரு புத்தகமும் எடுத்துச் செல்லுவோமா என்று கூட நினைத்தேன். ஏனென்றால் ஆறு மணி என்றால் ஏழு மணிக்கு நிகழ்ச்சியை நடத்துவது தானே நமது பாரம்பரியம்? ஆனாலும் என் நினைப்பை ஏமாற்றி விட்டிருந்தது அரங்கத்தில் கூடியிருந்த மக்கள் குழாம், ஐந்தரை மணிக்கே வந்து முகாமிட்டிருக்கிறார்கள். நிகழ்ச்சி பத்து நிமிடமே தாமதத்தில் ஆரம்பித்தது. இளையோர்களின் சுருக் நறுக் அறிமுகத்தோடு இதோ நிகழ்ச்சி ஆரம்பித்து விட்டது.

வெளிர் நீல மேக மூட்டம் பரவியது போல அலங்கார இருக்கை, மேலே உருண்டு திரண்ட மின் குமிழ் நிலாவாகவும் காட்சியளிக்க, அந்த இருக்கையில் ராஜேஷ் வைத்யா சரஸ்வதி போல மையம் கொண்டு அமைந்திருக்க, இரு மருங்கும் அணி செய்த சுப்ரதீபம் வாத்தியக் கலைஞர்கள் தேவர்கள் போலவும் கற்பனை செய்து கொண்டேன். அதே கற்பனா வெளியில் இருந்து கொண்டே முழு நிகழ்ச்சியையும் கேட்க என்னைத் தயார்படுத்திக் கொண்டேன். ராஜேஷ் வைத்யாவின் இசை நிகழ்ச்சி அனுபவம் எனக்கு இது தான் முதல் தடவையன்று  பதினைந்து வருடங்களுக்கு முன்னர் நான் மெல்பர்னில் இருந்த காலத்தில் சிட்னி வழியாக மெல்பர்னிற்கும் வந்து இசை நிகழ்ச்சி படைத்திருக்கிறார். பின்னர் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கலை ஒலி மாலை நிகழ்ச்சியிலும், சிட்னி கம்பன் கழக ஆண்டு விழா மேடைகளிலும் கலந்து சிறப்பித்திருக்கிறார். ஆனால் மூன்றரை மணி நேர நிகழ்ச்சியில் ராஜேஷ் வைத்யாவின் சாகித்யத்தை முழு அளவில் பயன்படுத்திப் புண்ணியம் தேடிக் கொண்ட கச்சேரியாக இந்த நிகழ்ச்சி அமைந்து விட்டது.

ராஜேஷ் வைத்யாவின் வீணை நிதானமெடுத்து அவையடக்கம் வழங்குமாற் போல மெல்லிய சங்கதியோடு கிளம்பி மெல்ல வாக டிஸ்கவரி சானலில் காணும் காட்சி போல அது அழகான மெட்டாக விரியும் பூவாக "ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ" பாடலோடு முழுமையாகத் தன்னை வெளிப்படுத்தி நிதானிக்கிறது. ஆரம்பத்தில் இருந்து அவ்வப்போது குரலால் நிவி விட்டு அழகு பார்க்கிறது ராஜேஷ் வைத்யாவோடு கூட வந்த தமிழகக் கலைஞர் திரு.சுப்ரமணியம் அவர்களின் வழியாக. தொடர்ந்து ஶ்ரீ ராகவேந்திரா பாடல் வழியாகவும் இந்தக் குரலிசையும் அவ்வப்போது பொருத்தமான இடங்களில் கலந்தது வெகு சிறப்பு.
ராஜேஷ் வைத்யாவுக்குச் சரணாகதித் தத்துவம் நன்றாகப் புலப்பட்டிருக்கிறது. தன்னுடைய மகாராஜாத்தனமான மீசையை மீறி வெளிப்பட்டும் அப்பாவித்தனமான சிரிப்போடு "சரி நாம இனி நிகழ்ச்சிக்குப் போகலாமா" என்று அவையோரிடமே அனுமதி கேட்கிறார். 
"என்ன கைதட்டலைக் காணோம், லைட்டைப் போடுங்க நான் நிகழ்ச்சிக்கு வந்தவங்களைப் பார்க்கணும், நீங்க எப்படி ரசிக்கிறீங்க எனக்குத் தெரியணுமே" என்று சொல்லவும் வெளிச்சச் சிரிப்பில் இயல்பாகிறது அரங்கம். இப்படியாக நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் ரசிகர்களைத் தன்னோடு இணைத்து விட்டுக் கச்சேரியைத் தட்டிவிட்டார் தேசிங்கு ராஜனின் புரவியாட்டம்  தொய்வில்லாதது தொடர்ந்தது கச்சேரி. இதுதான் ஒரு தேர்ந்த கலைஞன் தன் ரசிகர்களைக் கட்டுக்குள் கொண்டு வரும் வித்தை. இந்த வித்தையைக் கையாண்டதன் அருமை நிகழ்ச்சியின் நிறைவு வரை வெளிப்பட்டது.

"பூவில் தோன்றும் வாசம் அது தான் ராகமோ" என்ற இடத்தில் இருந்து ஆரம்பித்து "புத்தம் புதுக்காலை பொன்னிற வேளை" யாகத் தன்னை வெளிப்படுத்திய போது எஸ்.ஜானகியின் குரல் ராஜேஷ் வைத்யாவின் விரல்களை ஊடறுத்து வீணையின் நரம்பு வழியாகப் பாய்ந்தது போல ஒரு உணர்வு. எஸ்.ஜானகியின் அதே மென்மையை வீணை நாதம் பிரதிபண்ணிக் காட்டியது. இதே போல "இது ஒரு நிலாக்காலம்" (டிக் டிக் டிக் படத்தில் இருந்து) என்ற பாடலில் துள்ளாட்டம், தள்ளாட்டம் எல்லாம் கலந்து கிறங்கடித்த எஸ்.ஜானகியின் இன்னொரு பரிமாணத்தையும் அச்சொட்டாகக் காட்டிய விதத்தில் தான் ராஜேஷ் வைத்யாவின் தனித்துவம் வெளிப்படுகின்றது. ஒரு தேர்ந்த வாத்தியக் கலைஞர் பாடல்களை எடுத்துக் கையாளும் போது பாடலின் அடி நாதமாக விளங்கும் ரிதத்தில் மட்டும் தான் பெரும்பாலும் கவனத்தை எடுத்து அதை வெளிக்கொணருவார். ஆனால் ராஜேஷ் வைத்யாவின் வீணை அப்படியல்ல அது எஸ்.ஜானகி என்றால் எஸ்.ஜானகி என்ன மாதிரி வேறு பட்டுப் பாடுகின்றார் என்பதைக் கூட ஏற்ற இறக்கத்தோடும் வேகமாகவே, நிதானமாகவோ அல்லது பாடல் வரிகளில் எங்கெங்கே அழுத்தம் கொடுத்துப் போக வேண்டும் என்பதையும் உணர்ந்த ஒரு நடிப்பு வாத்தியக் கருவியாக நின்று இயங்குகின்றது. இதுதன் அவரின் தனி முத்திரை.

"காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா" என்ற கூட்டணிப் பாடலாகவும் "என் இனிய பொன் நிலாவே" என்ற தனிப்பாடலாகவும் "ஆகாய வெண்ணிலாவே" என்ற ஜோடிப் பாடலாகவும் வித விதமான ஆடையலங்காரம் பூண்டு அழகாக அபிநயம் பிடித்து ஆடுகிறது ராஜேஷ் வைத்யாவின் வீணை. 

விஸ்வநாதன்- ராமமூர்த்தி, எம்.எஸ்.விஸ்வநாதன், ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர், டி.இமான் வரை அவ்வப்போது தொட்டிருந்தாலும் தான் இளையராஜா காலத்தவன், இளையராஜாவின் இசை எவ்வளவு தூரம் தன்னை ஆட்கொண்டிருக்கிறது என்பதை உணர வைத்தது அவர் ராஜாவின் பாடல்களை நேசத்தோடு எடுத்து வாசித்த போது.மெல்லிய தன் அக்மார்க் சிரிப்போடு பாடலை உரக்கப் பாடியும் ரசித்து வாசிக்கிறார். அதற்கு அடுத்ததாக வித்யாசாகரின் ஒன்றிரண்டு பாடல்களை வீணையில் மீட்டிய போதும் இதற்கு அடுத்த நிலையில் இருந்தது போலப் பட்டது.

"பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ? ஆ மீதி ஜீவன் என்னைப் பார்த்த போது வந்ததோ?" என்று சரணத்தில் இருந்து தொடங்கும் "மலரே மெளனமா" பாடலை அப்படியே கால இயந்திரத்தால் காவிக் கொண்டு போய் "நெஞ்சிருக்கும் வரை" காலத்தில் போய் நிறுத்துகிறார் "முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்" பாடலோடு. "சந்தித்த வேளையில் சிந்திக்க வேளையில் தந்துவிட்டேன் என்னை" என்று கேட்டுக் கொண்டிருந்த ரசிகர்கள்  உரக்கப் பாடாததுதான் குறை. அவ்வளவுக்கு அந்த இசைக் கலவை உருக்கியது.

"தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை ஊர்பழி ஏற்றாயடா நானும் உன் பழி கொண்டேனடா நானும் உன் பழி கொண்டேனடா" என்று "உள்ளத்தில் நல்ல உள்ளம்" (கர்ணன்) பாடலால் உருக்கியவர் அப்படியே "எனது விரல் கண்ணை கெடுப்பதுவோ அழுது அறியாத என் கண்கள்
ஆறு குளமாக மாறுவதோ" என்று "விடுகதையா இந்த வாழ்க்கை" (முத்து) பாடலோடு சேர்த்து மெல்லிசை மன்னர்கள் விஸ்வ நாதன் ராமமூர்த்தி கூட்டணியோடு ஏ.ஆர்.ரஹ்மானை இணைத்துப் பிணைத்துப் பழமைக்கும் புதுமைக்கும் பாலம் அமைக்கிறார். 

ஊரில் இருந்த காலத்தில் பாண் (ரொட்டி) ஐ வாங்கி நடுப்பகுதியைத் தின்பதற்கு முன்னர் அதன் மொறு மொறுப்பான கரைப் பகுதியைக் கடித்து சுவை பார்த்து முழுமையாகத் தின்று தீர்ப்பதைப் போல ராஜேஷ் வைத்யாவின் வீணையில் பாவிக்கப்படாத பாகம் அந்த வீணையின் தாங்கியான அடிப்பாகம் மட்டும் தான் போல. வீணையின் நரம்புகளைத் தாண்டி அதனைப் பிணைத்திருக்கும் மரப்படுக்கையிலும் தட்டியெழுப்பும் ஓசையும் அந்தந்தப் பாடல்களுக்குச் சுவை கொடுக்கின்றது.

ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களைச் சேர்த்து ஒரு கலவை என்று சொல்லி விட்டு "என் காதலே என் காதலே", "அஞ்சலி அஞ்சலி", "தொடத் தொட மலர்ந்ததென்ன", "உயிரே உயிரே", "சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது" , "தமிழா தமிழா" என்று கலந்த அந்தப் பாடல் கோப்பில் 
Kal Ho Naa Ho என்ற ஹிந்திப் படத்தில் வந்த "Kal Ho Naa Ho" பாடலும் கலந்தது ஆனால் அது ஷங்கர் - எசான் - லாய் என்ற இசையமைப்பாளர்களின் பாடலாச்சே. 

"தகிட ததிமி தந்தானா" பாடலோடு மீண்டும் ராஜா யுகத்துக்குப் போகிறது கச்சேரி, இடைவேளைக்கு முன்னதாக "இது ஒரு நிலாக்காலம்" பாடலின் துள்ளிசையோடு மீண்டும் வரத் தூண்டில் போடுகிறது.

இடைவேளைப் பின்னர் மீண்டும் கலவையான இசையோடு வாத்தியக்காரகள் அணி வகுக்க அப்படியே "சேலை மூடும் இளம் சோலை மாலை சூடும் மண மாலை" என்று "பனி விழும் மலர்வனம்" பாடலாகக் குளிர் "விற்றது" ராஜேஷ் வைத்யாவின் அந்த வீணை.

"உன் சமையலயறையில் நான் உப்பா சக்கரையா" என்று வித்யாசாகராகவும் "வண்ணம் கொண்ட வெண்ணிலவே" என்று எஸ்.பி.பாலசுப்ரமணியமாகவும் "முன்பே வா என் அன்பே வா" என்று ஏ.ஆர்.ரஹ்மானாகவும் பயணித்த வீணை சூழ் இசை மழை ஒரு கட்டத்தில் "துன்பம் நேர்கையில் நீ யாழெடுத்து இன்பம் சேர்க்க மாட்டாயா" பாடலோடு பழமை என்றும் இனிமை என்று தொடர்ந்து "அத்தான் என்னத்தான் அவர் என்னைத் தான் எப்படிச் சொல்வேனடி" என்று காதில் கிசுகிசுக்கிறது ராஜேஷ் வைத்யா முகத்தில் பாவமன்னிப்பு படத்தின் சாவித்திரியின் அபிநயம். "சிந்து நதியின் மிசை நிலவினிலே", "காற்றினிலே வரும் கீதம்" , "உன்னிடம் மயங்குகிறேன்" என்று கிறங்க வைத்த அந்த இசை மழை  திடீரென்று "நெஞ்சுக்குள்ளே உம்ம முடிஞ்சிருக்கேன்" என்று ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப்புயல் அடித்துக் கடலில் கலந்தது ஒட்டவில்லை. அந்தப் பழைய பாடல் சுற்றைச் சேதாரமில்லாமல் வைத்திருந்திருக்கலாம்.
"ரா ரா சரசுக்கு ரா ரா" (சந்திரமுகி) , "ஐயய்யோ ஆனந்தமே" (கும்கி) பாடல்களும் உள்ளேன் ஐயா என்றன.

தன் பெரியப்பா ஜி.ராமநாதன் இசையில் வந்த பாட்டு என்று பெருமை பூக்கச் சொல்லியவாறே "உலவும் தென்றல் காற்றினிலே" (மந்திரி குமாரி) பாடலை ராஜேஷ் வைத்யா வாசிக்க இவரின் பெரியப்பா ஜி.ராமநாதன் வானத்தில் இருந்து கேட்டு ஆனந்தக் கண்ணீர் சொரிந்திருப்பார் அவ்வளவு தூரம் தன்னுடைய இசை மரபின் வேரைக் காட்டி விட்டுப் பதியம் போட்டது அந்த இசை.

"இனி உங்க நேரம் உங்களுக்குப் பிடிச்ச பாட்டுகளா சொல்லுங்க நான் வாசிக்கிறேன்" என்று ராஜேஷ் வைத்யா சொல்ல அரங்கத்தின் ஒவ்வொரு திசைகளிலிருந்தும் சத்தமாகவும், சன்னமாகவும் ரசிகர்கள் தமக்குப் பிடித்த பாடல்களைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நான் இசை நிகழ்ச்சி மேடையில் இருந்து இரண்டாம் வரிசையில் மிக நெருக்கமாக இருந்தாலும் வாய் திறக்காமல் காத்துக் கொண்டிருந்தேன். கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டிருந்தேன் என்றும் சொல்லலாம். அதை நியாயம் பண்ணும் விதமாக ராஜேஷ் வைத்யா தொடங்கினார் இப்படியாக
"எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே இரு மனம் எதோ பேசுது
எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது"

அதே தான், "தென்றல் வந்து தீண்டும் வந்து என்ன வண்ணமோ" எஸ்.ஜானகியோடு இளையராஜா பாடும் அவதாரம் படப் பாடல் தான். என்னுடைய முறுவலுக்குக் காரணம் கற்பித்தது. ஒரு இளையராஜாவின் தீவிர ரசிகன் மேடையில் வாசித்துக் கொண்டிருக்க, அரங்கத்தில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருக்கும் தீவிர ரசிகனுக்கும் இடையிலான டெலிபதி அது. 

"கண்ணிரண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும் ஆனாலும் அனல் பாயும் நாடியெங்கும் ஏதோ நாதவெள்ளம் ஓடும் ஆனாலும் என்ன தாகம்"  என்று போன "என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்" பாடலை ராஜேஷ் வைத்யா இசைத்த கணம் எனக்குப் பக்கத்தில் என்னுடைய உணர்வோடு ஒரு ராஜா ரசிகன் இருந்திருந்தால் கட்டிப் பிடித்து அழுதிருப்பேன். அற்ப ஆயுளில் முடிந்து போன பாடகி சொர்ணலதாவே ஜீவன் கொண்டு பாடியது போல உணர்ந்த தருணம்.

"நானுனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன் சேர்ந்ததே நம் ஜீவனே" தளபதி படத்தில் தம் காதல் முறிவுறும் வேளை ரஜினி, ஷோபனா சந்திக்கும் காட்சியோடு இழைத்த பின்னணி இசைத் தூக்கிக் கொண்டு வந்து சிட்னியில் வைத்துக் கையளித்தது போல அதே இடத்தில் தொடங்கி "சுந்தரி கண்ணால் ஒரு சேதி" என்று தன் முகவரியைக் காட்டிய ராஜேஷ் வைத்யாவின் வீணை ஒரு தேன் குடமோ?

பேச்சுக் கச்சேரி, மலர்மாலை, பொன்னாடை போர்த்தல் போன்ற சம்பிரதாயங்கள் இன்றி நிகழ்ச்சி அதீத தன்னடக்கத்துடன் நடந்ததாலோ என்னவோ "சுப்ரதீபம்" இசைக்குழுவைப் பற்றிய தகுந்த அறிமுகம் கொடுக்காமல் இருந்து விட்டார்கள். சக வாத்தியக்காரர்களும் கொஞ்சம் தனி வாசிப்பை அதிகப்படுத்தியிருக்கலாம்.
பாடல் தேர்வில் அதி சிரத்தையாக இருந்தவர்களுக்கு ஒரு சபாஷ் போட வேண்டும். ரஹ்மான் சுற்றில் வந்த அந்த ஹிந்திப் பாடல் (வேறு இசையமைப்பாளர்), ராஜா சுற்றில் வந்த "தில்லு முல்லு" (எம்.எஸ்.விஸ்வநாதன் இசை) போன்ற குறுணித் தவறைக் கடந்து விடலாம்.
"நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை" பாடலிலும் இன்னொரு பாடலும் கோளாறு பண்ணி மீதி மூன்றரை மணி நேரக் கச்சேரியில் சமர்த்துப் பிள்ளையாக இருந்தது அல்நூரின் திறம்பட்ட ஒலி ஒருங்கமைப்பு.
நிகழ்ச்சி நடக்கும் போது பக்கத்தில் இருப்பவரோடு குசு குசுப்பது உங்கள் இஷ்டம் ஆனால் ஒரு வரிசை தள்ளி இருப்போருக்கும் கேட்கும் வண்ணம் சத்தமாக உரையாடுவது மகா பாவம் அல்லவா. செல்போன் அழைப்புச் சத்தங்கள் இல்லாதது ஆறுதல்.

"இந்த ஷீட்ல இளையராஜா இசையமைத்த  முப்பது தொடங்கி நாற்பது பாடல்கள் இருக்கு இளையராஜாவால் தான் இது மாதிரி அமைக்க முடியும்னு காட்டுற பாடல்கள் அதை நாம தொடர்ச்சியாக வாசிக்கப் போகிறோம்" என்று சொல்லி விட்டு
"அந்தி மழை பொழிகிறது" பாடலில் ஆரம்பித்து  "பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்", தேவதை இளம் தேவி", "முதன் முதலாக காதல் டூயட்", "சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்", "பழமுதிர் சோலை  எனக்காகத் தான்", "ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்" "நானே நானா",  புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா,  "பாடவா உன் பாடலை", "புதுச்சேரி கச்சேரி", "ஒரு காதல் என்பது",  "சின்னப் புறா ஒன்று"  "தூங்காத விழிகள் இரண்டு" என்று தரையில் இருந்து  கிளம்பி வானத்தின் மீதேறி நிதானமாகப் பயணிக்கும் புஷ்பக விமானத்தில் ஏற்றிக் கொண்டு போய் "காதல் கவிதைகள் படித்திடும் நேரம்" பாடலோடு நிறைத்து நின்றார் ராஜேஷ், தேனுண்ட களிப்பில் சுழன்றடிக்கும் வண்டு போன்ற நிலை காது வழியே நெஞ்சில் நிறைந்த அந்த இசையோட்டம். 1000 படங்களைக் கண்ட இசைஞானி இளையராஜாவை இந்த ஆண்டு தமிழகம் கொண்டாடவிருக்கும் வேளை சிட்னியில் இருந்து மானசீகமாகக் கொண்டாடிய தருணம் இது.

ராஜேஷ் வைத்யாவின் வீணை வெறும் வாத்தியமன்று நம் எல்லோரது உணர்வுகளை மீட்டிப் பார்க்கும் உயிரோட்டமுள்ள நரம்புகளைப் பிணைத்த கருவி, அதன் மேல் அளையும் அவரின் விரல்களில் சரஸ்வதி தேவியின் அருட்கடாட்சம் நிரம்பியிருக்கிறது.