Pages

Tuesday, January 27, 2015

பாடல் தந்த சுகம் : சந்திரிகையும் சந்திரனும் பேரில் வேறு தானடி

சில இயக்குநர்களின் ராசி அவர்கள் எந்த இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணிபுரிந்தாலும் அந்தக் கூட்ட்டணி வெற்றிகரமான பாடல்களைக் கொடுத்துவிடும். இயக்குநர் ஶ்ரீதர், பாலசந்தர், பாரதிராஜா, பாக்யராஜ் போன்றோர் இவ்வகையினர். இவர்களுக்குள் இருக்கும் இசை ஞானமும் காட்சிகளுக்கேற்ப எப்படியான பாடலை இசையமைப்பாளரிடமிருந்து தருவிக்க முடியும் என்ற சாமர்த்தியமும் கைவரப் பெற்றவர்கள் இவர்கள்.

இன்னோர் வகையினர் என்னதான் உச்ச இசையமைப்பாளருடன் இணைந்து பணி புரிந்தாலும் அவர்களின் ராசியோ என்னமோ பாடல்கள் அதிகம் கவனிக்கப்படாது கடந்து விடும். அந்த வகையில் இயக்குநர் விசுவின் படங்களில் பெரும்பாலானவை சங்கர் - கணேஷ் இரட்டையர்களின் இசையில் கவனிக்கத்தக்க பாடல்களோடு அமைந்திருந்தாலும், இளையராஜாவோடு இயக்குநர் விசு இணைந்த கெட்டி மேளம் படம் வந்த சுவடே பலருக்குத் தெரிந்திருக்காது. 

அதே வரிசையில் இயக்குநர் வி.சேகர் அவர்களையும் சேர்த்து விடலாம். கிட்டத்தட்ட விசுவின் அடுத்த சுற்றாக இவருடைய படங்களைப் பொருத்திப் பார்க்கும் அளவுக்கு ஏராளமான குடும்பச் சித்திரங்களை உருவாக்கியவர் வி.சேகர்.
"நீங்களும் ஹீரோ தான்" என்ற மாறுபட்ட கதையோடு களம் இறங்கியவருக்கு அடுத்து இயக்கிய "நான் புடிச்ச மாப்பிள்ளை" படத்தின் வெற்றி கை கொடுத்தது. சந்திரபோஸ் இசையில் அந்தப் படத்தில் வந்த "தீபாவளி தீபாவளி தான்" கவனிக்கத்தக்க பாடலாக அனைந்திருந்தது.

இயக்குநர் வி.சேகருக்கு பாடல்களை விட நகைச்சுவை தான் பட ஓட்டத்துக்குக் கை கொடுத்தது. ஆரம்பத்தில் ஜனகராஜ் பின்னர் கவுண்டமணி என்று தொடர்ந்து வடிவேலு, விவேக் என்று நகைச்சுவை நாயகர்களை குணச்சித்திர பாத்திரங்களில் நடிக்க வைத்து வெற்றி பெற்றார். "பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்" வி.சேகரின் இயக்குநர் வாழ்க்கையில் பெரு வெற்றியைக் கொடுத்த படம்.

இயக்குநர் வி.சேகர் இசைஞானி இளையராஜாவோடு இணைந்த மூன்று படங்களில் "ஒண்ணா இருக்க கத்துக்கணும்", "பொறந்த வீடா புகுந்த வீடா" இரண்டும் இவரின் தனித்துவமான குடும்பப்படங்கள். இவற்றிலிருந்து மாறுபட்டு முழுமையான காதல் கதையாக இவர் இயக்கிய "பார்வதி என்னைப் பாரடி" தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் கவனிக்கத்தக்க நாயகனாக வலம் வந்த சரவணன் நடிப்பில் வெளிவந்தது.
"பார்வதி என்னைப் பாரடி" படத்தில் அனைத்துப் பாடல்களும் அட்டகாசம் ரகம். அப்போது சென்னை வானொலியின் வழியாக எனக்கு அறிமுகமான பாடல்கள் வரிசையில் இந்தப் படத்தின் பாடல்களும் சேர்ந்து கொண்டன. 
குறிப்பாக "சின்னப் பூங்கொடி சிந்தும் பைங்கிளி" பாடல்
அப்போது வயசுக்கோளாறுக்கு உரு ஏத்திய பாடல். அப்போது மின்சாரம் இல்லாத காலத்தில் நண்பர்களோடு பங்கு போட்டு 300 ரூபாவுக்கு மண்ணெண்ணை வாங்கி தண்ணீர் இறைக்கும் ஊசிலி மெஷினை ஜெனரேட்டர் ஆக்கிப் பார்த்த படங்களில் இந்தப் படத்தைப் பார்த்து நொந்த நினைவு மறக்க முடியாது.
"மச்சான் அருமையான காதல் கதையடா"என்று கதையளந்து படத்தைப் போட மற்றவர்களையும் சம்மதிக்க வைத்து, பின்னர் படம் ஓடும் போது ஒவ்வொருத்தர் கண்ணும் விஜயகாந்தின் கொவ்வைப் பழக் கண் ஆகாதது தான் மிச்சம் :-)
எங்களுக்கே இப்படியென்றால் படம் எடுத்த வி.சேகருக்கு எப்படியிருக்கும்? அதன் பிறகு அவர் முழு நீளக் காதல் கதைகளைத் தொடவே இல்லை.

பார்வதி என்னைப் பாரடி படத்துக்கு முன்னர் வி.சேகர் & இளையராஜா கூட்டணியில் வெளிவந்த படம் தான் "பொறந்த வீடா புகுந்த வீடா".
அப்போதைய தனது ஆஸ்தான நாயகி பானுப்பிரியா மற்றும் சிவக்குமார் நடித்திருந்தனர்.
அந்தப் படத்தின் பாடல்களில் எனக்குப் பெரு விருப்பமான பாடலாக அமைந்தது "சந்திரிகையும் சந்திரனும் வேறு வேறு தானடி". அப்போது கொழும்பில் இயங்கிய எஃப் எம் 99 என்ற பண்பலை வானொலி தான் இந்தப் பாடலை ஊரெல்லாம் கேட்க வைத்துப் பிரபல்யம் அடைய வைத்தது.

கவிஞர் வாலியின் வரிகளுக்கு மனோ மூன்று விதமாகத் தன் குரல்களை மாற்றிச் சேஷ்டை பண்ணினாலும் (!) கூட இணைந்த சித்ரா, குழுவினரும் பாடலின் இசையும் மெய்மறக்கச் செய்து இசையில் கலக்க வைக்கும்.



Tuesday, January 20, 2015

பாடல் தந்த சுகம் : மகராஜனோடு ராணி வந்து சேரும்

இன்று காலை வேலைக்குப் பயணித்துக் கொண்டிருக்கும் போது என் காதில் அமர்ந்து பயணித்துக் கொண்டிருந்தது இந்தப் பாடல். 

யாழ்ப்பாணத்தில் இருந்து நிரந்தரமாகப் பிரிகின்றோம் என்று தெரியாமல் அப்போது கொழும்புக்கு மேற்படிப்பின் நிமித்தம் வந்தவேளை இந்தப் பாடலும் அப்போது வெளிவந்த காரணத்தால், எப்போது இதைக் கேட்கும்போதெல்லாம் வெள்ளவத்தை நித்தியகல்யாணி நகை மாளிகையின் மேல் அடுக்கு மாடியில் நண்பர்களோடு குடியிருந்ததை நினைப்பூட்டும். 
ராஜாவின் பாடல்கள் ஏதோதோ சினிமாவின் காட்சிக்களனுக்குப் பயன்படும் நோக்கில் இசையமைத்திருந்தாலும் குறித்த பாடல்களுக்கு நம் பசுமையான நினைவுகளைத் தட்டியெழுப்பும் வல்லமை உண்டு.

சதிலீலாவதி திரைப்படம் கமல்ஹாசனும் பாலுமகேந்திராவும் நீண்ட வருஷங்களுக்குப் பின் இணையக் காரணமான படம். ராஜ்கமல் என்ற கமல்ஹாசனின் சொந்தப் பட நிறுவனமே தயாரித்திருந்தது. வசனத்தை கிரேஸி மோகன் எழுதியிருந்தார். அப்போது ஒரு சஞ்சிகை பேட்டியில் கிரேஸி மோகனின் துணுக்குத் தோரணம் என்ற விமர்சனத்தை  பாலுமகேந்திரா மிகவும் எரிச்சலோடு எதிர்கொண்டார்.

இந்தப் படம் கன்னடத்தில் மீளவும் நாயகன் ரமேஷ் அர்விந்த் இயக்க, கமல்ஹாசன் தமிழில் கோவை வட்டார வழக்கில் பேசி நடித்தது போலவே கன்னடத்தின் ஹூப்ளி வட்டார வழக்கில் பேசி நடித்தார். ராமா பாமா ஷியாமா என்பது கன்னட வடிவத்தின் தலைப்பு.

சதிலீலாவதி படத்தின் அனைத்துப் பாடல்களையும் வாலி எழுதியிருந்தார். 
"மகராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜயோகம் காலம் தோறும் வாழும்" இந்தப் பாடல் வந்த காலகட்டத்தில் இளையராஜாவின் இசை அதுவரை பயணித்த இசை வடிவத்திலிருந்து மாற்றம் கண்டது. இளையராஜாவின் ஆரம்பகாலம், எண்பதுகள், தொண்ணூறுகள் என்று பிரிக்கும் போது அவரின் இசை வடிவம் ஒவ்வொரு தளங்களிலும் மாறியிருப்பதை அவரின் தீவிர ரசிகர்கள் உன்னிப்பாக அவதானித்திருப்பர். என்னைப் பொறுத்தவரை இந்த "ராஜனோடு ராணி வந்து சேரும்" பாடல் இருபது வருடங்களுக்கு முன்பே தன்னுடைய அடுத்த தலைமுறையான யுவன் ஷங்கர் ராஜா காலத்துக்கு முன்னோடியாக அமைந்ததாகவே எண்ணிக் கொள்வேன்.

தான் கொண்ட கலையைத் தீவிரமாக நேசிக்கும் கலைஞன் என்பவன் தான் வெற்றி பெற்ற அம்சத்தில் இருந்து விலகி, காலத்துக்குக் காலம் புதுமையான படைப்புகளைக் கொடுக்கவேண்டும் என்ற முனைப்போடு இருப்பான். ஜனரஞ்சக ரீதியான வெற்றி தோல்வி என்பது இரண்டாம் பட்சம் தான்.
"எப்படி ஹிட் பாடல்களை அமைக்கிறீர்கள்?" என்ற கேள்விக்கு
"பாடல்களை ஹிட் ஆக்கிவது நீங்க தானே" என்று சொன்ன ராஜாவின் பதில் தான் இதை முன்மொழியும்.

இந்தப் பாடலின் உருவாக்கம் குறித்து அப்போது உதவி இயக்குநராக இருந்த சுகா ஒரு பதிவு எழுதியிருந்தார். அதில் வாத்தியக்கலைஞர் விஜி இம்மானுவேல் இந்தப் பாடலுக்குக் கையாண்ட சாகித்தியத்தையும் சிலாகித்திருப்பார்.
பாடகர் உன்னிகிருஷ்ணனுக்கும் இதுதான் 
இளையராஜாவின் இசையில் முதல் பாடல் என்று நினைவு.

"கங்கைக்கொரு வங்கக் கடல் போல் வந்தான் அவன் வந்தான்" சித்ரா பாடும் போது வங்கக் கடலாய் நெஞ்சில்  கிளர்ந்து எழும் அந்த நினைவுகளைப் புதுப்பித்துக் கொண்டே பயணிக்கிறது பாட்டு.

Monday, January 12, 2015

பாடல் தந்த சுகம் : கதை கேளு கதை கேளு நிஜமான கதை கேளு

பாடல் தந்த சுகம் : கதை கேளு கதை கேளு நிஜமான கதை கேளு.

ஒரு படத்தின் எழுத்தோட்டத்தில் வரும் முகப்புப் பாடல் என்ற வகையில் இந்தப் பாடல் போல ஒப்பீட்டளவில் வேறொன்றும் அதிகம் ஈர்த்ததில்லை. இம்மட்டுக்கும் இந்தப் பாடல் உயர்ந்த கவித்திறன் கொண்ட காதல் ரசம் பொழியும் பாடல் அன்று. 
வெறும் வசனங்களின் கோப்பாகப் பிணைந்த வரிகளும் அவற்றைத் தன் வாத்தியக் கருவிகளில் சுமந்து பயணிக்கும் மாட்டு வண்டிச் சவாரிக்கு ஒப்பானது இந்தப் பாடல்.

மைக்கேல் மதன காமராஜன் படத்தின் முகப்புப் பாடலாக அமையும் இந்தப் பாடலின் வரிகளை படத்தின் தயாரிப்பாளரான பஞ்சு அருணாசலம் எழுத, பாடி இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா. இந்தப் பாடல் காட்சியின் ஆரம்பத்தில் படச்சுருள் பெட்டியோடு சந்து படம் காட்டும் மனிதராக நடித்திருப்பவர் இப் படத்தின் இயக்குநர் சிங்கிதம் சீனிவாசராவ். 
பாடலைக் கேட்கும் போது ஒரு கதாசிரியர், ராஜாவின் ஒலிப்பதிவுக் கூடத்தின் மெத்தையில் அமர்ந்து படக்கதையின் ஓட்டத்தை ஆரம்பிப்பது போல இருக்கும். 

பொதுவாக இப்படியான சம்பவச் சுருக்கங்களின் முன்னோட்டத்தை (flashback) எழுத்தோட்டத்துக்கு முந்திய காட்சிகளாகவோ அன்றி நிழல் படங்களின் தொகுப்புகளாகவோ அமைத்துக் கொடுப்பது தான் வழக்கம். ஆனால் பாருங்கள் காட்சி வடிவம் நிகழ்காலத்திலிருந்து இறந்த காலத்துக் கதையோட்டத்துக்குப் போகும் போது அந்தக் காலத்து வேகப் பட நகர்வும், கருப்பு வெள்ளை ஒளிப்பதிவுமாக அமைக்கப்பட்டிருக்கும். மூன்று நிமிடம் 51 விநாடிகள் அமைந்த இந்த முன் கதைச் சுருக்கத்துக்கு எத்தனை மினக்கெடல்? அதுதான் கமல்ஹாசனின் தொழில் ஈடுபாடு. இல்லாவிட்டால் 25 வருடங்கள் கழித்து இந்தப் புதுமையான உத்தியைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்போமா? இல்லாவிட்டால் இதற்குப் பின் இதே போல கன கச்சிதமான பாடலோடு கூடிய முன் கதைச் சுருக்கமும் காட்சி வடிவமும் அமைந்த பாடலைக் கடந்த 25 வருடங்களில் பார்த்திருப்போமா? எனக்கு நினைவில்லை,

ஒரு படத்தின் ஆரம்பப் பாடலை இளையராஜா பாடினால் படம் வசூலை வாரி இறைக்கும் என்பது எண்பதுகளில் சாதித்துக் காட்டிய நம்பிக்கை. "அட கத கேளு கதை கேளு கருவாயன் கதை கேளு" என்று இதே ஆரம்ப அடிகளோடு கரிமேடு கருவாயன் படப் பாடலும், "காட்டு வழி போற பொண்ணே கவலைப்படாதே" என்ற மலையூர் மம்பட்டியான் படப்பாடலும் அந்தந்தப் படங்களின் நாயகனின் குணவியல்பைக் காட்டும் பாடல்களுக்கு உதாரணமாகின்றன.

"மானினமே" என்று முள்ளும் மலரும் படத்திலும், "ஜாக்கிரத ஜாக்கிரத தாய்க்குலமே ஜாக்கிரத"என்று சின்ன வீடு படப்பாடலும் அந்தந்தப் படங்களின் தன்மையைச் சுட்டுவனவாகவும், "அம்மன் கோயில் கிழக்காலே" (சகல கலா வல்லவன்) பொதுவான முகப்புப் பாடல்களாகவும், அப்பனென்றும் அம்மையென்றும் (குணா) போன்ற பாடல்கள் அந்தப் படத்தின் கதைக்களனையும், "குயில் பாட்டு ஓ வந்ததென்ன (என் ராசாவின் மனசிலே) போன்ற உதாரணங்கள் அந்தந்தப் படங்களில் இடம்பிடித்த பிரபலமான பாடல்களின் இன்னொரு வடிவமாகவும் என்று இளையராஜா இந்த முகப்புப் பாடல்களைக் கையாண்டார். இது பற்றி நீண்ட பட்டியல் போடுமளவுக்குப் பாடல்கள் உண்டு. 

இவை தவிர இளையராஜா ஒரு படத்தின் முகப்பு இசைக்குக் கொடுக்கும் மினக்கெடல் சொல்லித் தெரிவதில்லை.

இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கும் போது "கதை கேளு கதை கேளு" பாடல் துள்ளிக் குதிப்பது போலக் காதில் அசரீரியாகக் கேட்பது போலப் பிரமை. அந்தளவுக்கு மனதில் ஆக்கிரமிப்பை உண்டு பண்ணும் இசையும், கட்டுக்கோப்பான நறுக்கென்ற, அலுப்படிக்காத வரிகளினூடே கதை சொல்லலுமாகப் பயணிக்கும் பாட்டு இது.