Pages

Tuesday, May 12, 2015

பாடல் தந்த சுகம் : கேக்குதடி கூக்கூ கூ

பாடல் தந்த சுகம் : கேக்குதடி கூக்கூ கூ

பாட்டுக்கு இளையராஜா பின்னணி இசைக்கு தேவா

கடலோரப் பின்னணியில் அமைந்த படங்களில், இளையராஜாவின் இசையமைக்க நடிகர் பிரபுவுக்குக் கிடைத்த இரண்டு படங்கள் சின்னவர் மற்றும் கட்டுமரக்காரன் இரண்டிலுமே அட்டகாசமான பாடல்கள். ஆனால் இந்தக் கூட்டணியில் வந்த மற்றைய படங்களோடு ஒப்பிடும் போது வசூல் ரீதியாகப் பெரிதும் ஈர்க்காத படங்களாயிற்று.

காலத்துக்குக் காலம் தமிழ் சினிமாவில் ஒரு தயாரிப்பாளர் சிறிது காலம் பரபரப்பாகப் பேசப்பட்டுப் பின்னர் காணாமல் போய்விடுவார். அந்த வரிசையில் 90களின் மத்தியில் பரபரப்பாகல் பேசப்பட்ட தயாரிப்பாளர் ஏ.ஜி.சுப்ரமணியம். இவரின் படங்கள் பெரு வெற்றி காணுதோ இல்லையோ அந்த நேரத்தில் நிறையப் படங்கள் ஏ.ஜி.எஸ் மூவீஸ் தயாரிப்பில் வந்து கொண்டிருந்தன.
அந்த வகையில் கட்டுமரக்காரன் படமும் சேர்ந்து கொண்டது.  ஆனால் படத் தயாரிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் இளையராஜாவுக்கும், ஏ.ஜி.சுப்ரமணியத்துக்கும் இடையில் முறுகல் ஏற்படவே படத்தின் பின்னணி இசையை தேவா கவனித்துக் கொண்டார்.
இளையராஜா பாடல்களுக்கு இசையமைக்க, தேவா பின்னணி இசையமைத்த புதுமையான வரலாற்றில் இந்தப் படமும் சேர்ந்து கொண்டது.

பி.வாசு இயக்க பிரபு - குஷ்பு ஜோடியின் சின்னத்தம்பி அலை ஓயவும், குஷ்பு மாதிரியே ஒரு கதாநாயகி என்று அஞ்சலி என்ற நடிகையைக் கட்டுமரக்காரனில் ஜோடியாக்கியதும் இந்தப் படத்தின் ஒரு பின்னடைவு என்று சொல்லலாம்.

"கடலை விடக் காதல் ஆழமானது" என்று இந்தப் படத்துக்கு மகுட வாக்கிய விளம்பரம் கொடுத்திருந்தார்கள். தொண்ணூறுகளில் வந்த படங்களுக்கு இம்மாதிரி மகுட வாக்கிய விளம்பரம் கொடுப்பது அந்தக் காலப் பண்பு :-)
அப்போது வெளிவந்த "பொம்மை" சினிமா இதழின் பின் பக்க முழு விளம்பரமாக "கட்டுமரக்காரன்" படம் இருந்தது. பொம்மை புத்தகத்தை கொழும்பில் வாங்கிக் கொண்டு யாழ்ப்பாணம் போவதற்கு தாண்டிக்குளம் தமிழீழ விடுதலைப் புலிகள் சோதனைச் சாவடியில் நுழைந்த போது பொம்மை குப்பைக் கூடைக்குள் போனது. அப்போது சினிமாப் புத்தகங்கள் தமிழீழப் பகுதிக்குப் போகத் தடை இருந்த காலம்.


கவிஞர் வாலி முழுப் பாடல்களையும் எழுதும் பொறுப்பைக் கவனிக்க "வெற்றி வெற்றி என்று சொல்லும் கோவில் மணி" எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாட அந்தக் காலத்திலேயே ஹிட் அடித்த பாடல். 

நேற்று முன் தினம் ராஜா கோரஸ் க்விஸ் இல் இதே படத்தில் வந்த "கேக்குதடி கூக்கூ கூ" பாடலைப் போட்டிப் பாடலாகக் கொடுத்த பின்னர் தான் குறித்த பாடலின் காணொளிக் காட்சியை முதன் முதலில் பார்த்தேன் என்றால் நம்பத்தான் வேண்டும். கூட்டுக் குரல்களே பாடல்களைத் தொடக்கி வைக்க அவர்களோடு நாயகியும் சேர்ந்து பாட பின்னர் தனிக்குரலாய் எஸ்.ஜானகி நாயகிக்கும் மனோ நாயகனுக்குமாகப் பாடுகிறார்கள். இந்த மாதிரி அழகான இசை நுட்பம் பொருந்திய பாடல்களைக் காட்சிப்படுத்தும் போது மொக்கை போட்டு விடுவார்கள். ஆனால் இந்தப் பாடல் காட்சி பாடலின் திறனை நியாயம் செய்யுமாற் போலப் படமாக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் இந்தப் படம் இன்னும் கவனிக்கப்படும் அளவுக்கு எடுக்கப்பட்டிருந்தால் பரவலாகப் பலரையும் எட்டி ரசிக்க வைத்திருக்கும் என்ற ஆதங்கமும் எழுகிறது.3 comments:

 1. அருமையான பாட்டு இலங்கை வானொலியில் அதிகம் ஒலித்த பாடலும் கூட!

  ReplyDelete
 2. இப்படத்தில் 'கத்துங் கடல் உள்ளிருந்து ' என்ற பாடல் மனதை உருக்கும் பாடல்...

  ReplyDelete
 3. வாவ்...
  நல்ல பதிவு
  தம +

  ReplyDelete