Pages

Wednesday, July 30, 2014

இசைஞானி இளையராஜாவின் சேர்ந்திசைக் குரல்கள் 150 வது நாள் சிறப்பு இசைப் பொதி

இசைஞானி இளையராஜாவின் சேர்ந்திசைக் குரல்கள் போட்டியைத் தினமும் http://radiospathy.wordpress.com/ என்ற இணையப்பக்கத்தினூடாக நடத்திவருவதைப் பற்றி முன்னர் உங்களிடம் சொல்லியிருந்தேன்.இதோ இந்தத் தொடர் போட்டி 150 நாட்களைக் கடந்து போய்க் கொண்டிருக்கின்றது.

இந்தப் போட்டியில் சேர்ந்திசைக் குரல்கள் (Chorus) இடம்பெற்ற 101 வது நாளில் இருந்து 150 வது நாள் வரையிலான இசைப்பொதியை இங்கே பகிர்வதில் மகிழ்வடைகின்றேன்.


ஒவ்வொரு நாளும் இந்தப் புதிர்ப்போட்டி வழியாகப் பகிரும் பாடல்கள் ஏற்கனவே அறிமுகமாகிப் பல நாள் கேட்டிராதவை அல்லது முன்பே கேட்காத பாடல்கள் என்று கலவையாக வந்தமர்கின்றன உங்கள் நெஞ்சங்களில். தொடர்ந்து இந்தப் போட்டிகளில் நீங்கள் கலந்து கொண்டு ஆதரவை வழங்க வேண்டும்.

முதல் நூறு நாட்கள் இடம்பெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற அன்பர்களின் விபரங்களையும் அறிவிப்பதில் பெருமகிழ்வு அடைகின்றேன். போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்குப் புத்தகப் பரிசு என்று முதலில் சொல்லியிருந்தேன், இப்போது மேலதிகமாக இருவருக்கும் சேர்த்து மொத்தம் ஆறு பேருக்குப் பரிசுகளை வழங்குவதில் மகிழ்வடைகின்றேன்.


முதலாவது இடத்தைப் பிடித்துக் கொண்ட விஜய் (@maestrosworld) 100 போட்டிகளில் 100 இலும் வெற்றி கண்டிருக்கிறார்.
இவருக்கு இசைஞானி இளையராஜா எழுதிய புத்தகம் ஒன்றும், மூன்று புத்தகங்கள் கொண்ட நாலு வரி நோட்டு என்ற நூல் தொகுதியும் என மொத்தம் நான்கு புத்தகங்கள் பரிசாக அனுப்பி வைக்கப்படும். ஒவ்வொரு நாளும் தவறாது போட்டியில் கலந்து கொள்வது மட்டுமல்ல, போட்டியில் கொடுத்த பெரும்பாலான பாடல்களுக்கு இவர் கொடுத்த விரிவான வர்ணனை வெகு சிறப்பாக அமைந்தது. அதற்காக ஒரு ஸ்பெஷல் பாராட்டும், நன்றிகளும் விஜய்.

இரண்டாவது இடத்தைப் பிடித்துக் கொண்ட ரிஷி (@i_vr) நூறு போட்டிகளில் 99 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறார்.
இவருக்கு மூன்று புத்தகங்கள் கொண்ட நாலு வரி நோட்டு என்ற நூல் தொகுதி பரிசாக அனுப்பி வைக்கப்படும்

மூன்றாவது இடத்தைப் பிடித்த என்.சொக்கன் @nchokkan 100 போட்டிகளில் 92 போட்டிகளிலும்

நான்காவது இடத்தைப் பிடித்துக் கொண்ட சரவணன் @vrsaran 100 போட்டிகளில் 90 போட்டிகளிலும்

ஐந்தாவது இடத்தைப் பிடித்துக் கொண்ட ராஜா @rajabalanm 100 போட்டிகளில் 81 போட்டிகளிலும்

ஆறாவது இடத்தைப் பிடித்துக் கொண்ட கார்த்திக் அருள் @kaarthikarul 100 போட்டிகளில் 80 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கின்றார்கள்>

இவர்களுக்கு இசைஞானி இளையராஜா எழுதிய புத்தகம் ஒன்று பரிசாக வழங்கப்படும்.

இதற்கான ஏற்பாடுகளைப் பரிசில் வென்றோருக்குத் தனிமடலில் அறியத்தருகின்றேன். இந்தப் பரிசுகளின் விநியோகத்தில் முன்னேர் பதிப்பகம் வழியாக உதவிய நண்பர் என்.சொக்கனுக்கும் இவ்வேளை நன்றிகள் உரித்தாகுக.

இந்த ஆறு பேருக்கும் எனது வாழ்த்துகளோடு தொடர்ந்து பங்களித்து வரும் உங்களுக்கும் எனது நன்றி கலந்த வணக்கங்கள்.

Friday, July 25, 2014

"தொட்டால் தொடரும்" படத்தின் இசை பிறந்த கதை

தொட்டால் தொடரும் திரைப்படத்தை அருமை நண்பர் கேபிள் சங்கர் இயக்கி முடித்திருக்கின்றார். 

இன்னொரு நண்பர் கார்க்கி பவா உதவி இயக்குனராகவும், பாடலாசிரியராகவும் பணிபுரிந்திருக்கிறார்.. 

நண்பர் கேபிள் சங்கரின் வலைப்பதிவுகளை ஒன்றுவிடாமல் படித்த அனுபவத்திலும், நேரடியாகச் சந்தித்த விதத்திலும் 
மிகவும் சுவாரஸ்யம் மிக்கவர், நேசத்தோடு பழகக்கூடியவர் என்பதை மனதில் பதிய வச்சாச்சு. 
கேபிள் சங்கர் திரைத்துறையோடு இயங்கிக் கொண்டிருந்தாலும், தொட்டால் தொடரும் படமே அவரை முதல் தடவையாக இயக்குனராக எல்லாத்துறைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு வெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டிய பாரிய பொறுப்பு. அண்மையில் படத்தின் பாடல் வெளியிடு வரை தயாரிப்பு வேலைகளை நிறைவு செய்து நிற்கும் இவ்வேளை நண்பர்களின் இந்த முயற்சி சிறக்க என் வாழ்த்துகள்.

தொட்டால் தொடரும் திரைப்படத்தின் இசையமைப்பாளர் P.C.ஷிவன் அவர்களை நான் இயங்கும் ஆஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக 20 நிமிடத்தைத் தொடும் பேட்டி ஒன்று கண்டேன்.

தான் இசையமைப்பாளராக வந்த பின்புலம், தொட்டால் தொடரும் படத்தின் பாடல்களின் உருவாக்கம், பின்னணி இசை குறித்த விரிவான சிறப்பானதொரு பகிர்வை P.C.ஷிவன் வழங்கியிருந்தது எனக்கும் மன நிறைவாக அமைந்தது.
தொட்டால் தொடரும் திரைப்படம் வெற்றிபெற என் வாழ்த்துகள்.
 

இதோ அந்தப் பேட்டியின் ஒலி வடிவம்




Download பண்ணிக் கேட்க

YouTube வழியாக


Wednesday, July 9, 2014

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தருக்கு ஒரு இசைப்பூமாலை


இன்று இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் பிறந்த நாள்.

இசைஞானி இளையரஜாவும் இயக்குனர் சிகரம் பாலசந்தரும் இணைந்த படங்கள் மிகவும் சொற்பம். அதில் சிறப்பாக இரண்டு படங்கள் பாடகனைப் பற்றியவை. ஒன்றில் சாஸ்திரீய சங்கீதம் கொடுக்கும் பாடகன் என்றால் இன்னொன்றில் ஜனரஞ்சக சினிமாப் பாடகன் என்று இரு விதமாகக் கொடுத்த இயக்குனர் இல்லையெனலாம். இந்த இரண்டு படங்களுக்குமே இசைஞானி இளையராஜா இசை. இரண்டிலும் வெவ்வேறு சூழலில் இசையிலும் மாறுபட்டுத் தனித்துவம் பொதிந்த  பாடல்கள். இவற்றோடு ருத்ரவீணா பின்னர் தமிழ் பேசிய உன்னால் முடியும் தம்பி படமும் இசைப் பின்னணியைச் சார்ந்ததே.

இளையராஜாவுக்கு முன்பே எம்.எஸ்.விஸ்வநாதனோடு கூட்டுச் சேர்ந்த போது முன் சொன்னவாறு இசையின் இரண்டு தளங்களில் அபூர்வ ராகங்கள் மற்றும் நினைத்தாலே இனிக்கும் ஆகிய படங்களைக் கொடுத்திருப்பார். இதில் நினைத்தாலே இனிக்கும் படம் எழுத்தாளர் சுஜாதா நேரடியாக சினிமாவுக்கு எழுதிய கதை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிற இசையமைப்பாளர் வரிசையில் மரகதமணியோடு ஜாதி மல்லி, ஏ.ஆர்.ரஹ்மானோடு டூயட் போன்ற படங்களிலும் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்த படங்கள்.

மேடை நாடகப் பின்னணியில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்கள் மேடை நாடகத்தையே சினிமாவாகக் காட்டினார்கள். ஆனால் கே.பாலசந்தரைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் அதை ஒரு நுழைவுச் சீட்டாகவே பயன்படுத்தினார். எண்பதுகளில் கே.பாலசந்தரின் படங்கள் முற்றுமுழுதான காட்சிவெளிப்பாடு சார்ந்த படங்களாக இருந்தன. 

இளையராஜாவோடு கே.பாலசந்தர் நேரடியாக இணைந்த சிந்துபைரவி, மனதில் உறுதி வேண்டும், புன்னகை மன்னன், ருத்ர வீணா, உன்னால் முடியும் தம்பி, புதுப்புது அர்த்தங்கள் தவிர, அவரின் கவிதாலயா நிறுவனத்தை உருவாக்கியபோது முதல் தயாரிப்பே இளையராஜாவோடு கைகோர்த்த நெற்றிக்கண் படம். நெற்றிக்கண் எனக்குள் ஒருவன், ஶ்ரீ ராகவேந்திரா, வேலைக்காரன் ஆகிய கவிதாலயா தயாரித்த படங்களை எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். பூவிலங்கு, சிவா, ஆகிய படங்களோடு கவிதாலயா இளையராஜா இணைந்த இறுதிப்படமான உன்னைச் சொல்லி குற்றமில்லை ஆகிய படங்களை அமீர்ஜான் இயக்கினார். அந்த வகையில் இசைஞானி இளையராஜாவோடு நேரடியாகவும், மறைமுகமாகவும் கே.பாலசந்தரின் கூட்டு எண்பதுகளில் முக்கிமானதொன்று.

ரஜினிகாந்தின் இலட்சியப்படமான ஶ்ரீ ராகவேந்திரா படம் மனம் நிறைந்த அளவுக்கு கல்லா நிறையவில்லை.

மீண்டும் கூட்டணி சேர்ந்தார்கள். வேலைக்காரன் படம் உருவானது. கவிதாலயா தயாரிப்பு, ரஜினி நடிப்பு, இயக்கம் எஸ்.பி.முத்துராமன் இயக்குனர் தான். இம்முறை முழுமையான மசாலா, நகைச்சுவை கலந்த படம். படம் எடுத்ததோ வடமாநிலத்தில். இந்த நிலையில் குறித்த இயக்குனர் நடிகர் பட்டாளத்தோடு வடமாநிலத்துக்குக் கிளம்பிவிட்டார். தயாரிப்பாளராக இருந்த கே.பாலசந்தர் , இந்தப் படத்தின் இயக்குனரின் ரசனை எப்படியிருக்கும் என்பதைக் கணித்து அதற்கேற்றாற்போலப் பாடல்களை மு.மேத்தாவை எழுத வைத்து இசைஞானி இளையராஜா மூலம் இசையமைத்து வந்த பாடல்களை உடனுக்குடன் வடமாநிலத்தில் இருக்கும் ஷூட்டிங் தளத்துக்கு அனுப்பி வைத்தாராம். பாடல்கள் அனைத்துமே முத்து, இன்றுவரை கேட்டாலும். குடும்பப்பாங்கான படங்களை இயக்கிய இயக்குனர் ஒரு மசாலா இயக்குனரின் ரசனையறிந்து பாடல்களைக் கேட்டு வாங்கிக் கொடுத்ததென்பது புதுமை. படம் நூறு நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. இந்தத் தகவலை ராணி மைந்தன் எழுதிய ஏவி.எம் தந்த எஸ்.பி.எம் நூலில் எஸ்.பி.முத்துராமன் சொல்லியிருக்கிறார்.

கே.பாலசந்தரின் திரையுலக வாழ்வில் வி.குமார், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, வி.எஸ். நரசிம்மன், ஏ.ஆர்.ரஹ்மான், மரகதமணி, வித்யாசாகர் உள்ளிட்ட பல்வேறு இசைமைப்பாளர்களைத் தன் படங்களுக்கு வெறுமனே இசை நிரப்ப மட்டும் பயன்படுத்தவில்லை. திரைக்கதையின் ஒரு கூறாகவே பாடலைப் பயன்படுத்தியிருப்பார் என்பதற்கு குறித்த பாடல்களை வைத்தே உதாரணம் காட்டமுடியும்.

முன் சொன்னவாறு மேடை நாடகப் பின்னணியில் இருந்து வந்த கே.பாலசந்தர் திரையூடகத்தைப் பயன்படுத்தும் போது காட்சி வெளிப்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த போது ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குத் திரைக்கதை நகரும் போது புத்திசாலித்தனமான திருப்பத்தின் மூலம் நகர்த்தியிருப்பதைப் பல படங்களில் உதாரணங்கள் மூலம் காட்டலாம். கே.பாலசந்தரின் படங்களில் ஒரு குறியீட்டுப் பாத்திரம் கண்டிப்பாக இருக்கும். அதை வைத்துத் தனிக் கட்டுரையே வரையலாம்.

கே.பாலசந்தர். ஶ்ரீதர் போன்ற திறமையான இயக்குனர்கள் தான் எல்லா இசையமைப்பாளர்களிடமிருக்கும் அற்புதமான இசைப்புதையலைக் கொண்டு வந்தார்கள். இதில் கே.பாலசந்தர் படங்களில் இடம்பெறும் காட்சியமைப்புகளோடு ஒட்டியே பாடல்கள் இருக்கும். இன்னும் சொல்லப்போனால் தனியாக அமைந்த பாடலின் காட்சியமைப்பில் படத்தின் கதையோட்டத்தை இலாவகமாக நுழைத்து விடுவார். மேடை நாடகப் பாணியிலிருந்து முற்றும் மாறுபட்ட திரைவடிவத்தைத் தான் கே.பாலசந்தர் அங்கே நிலை நிறுத்தியிருப்பார். 

சில மாதங்களுக்கு முன்னர் காரில் பயணிக்கும் போது சிந்து பைரவி படத்திலிருந்து "பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே" பாடல் ஒலிக்கிறது.
ஏனோ தெரியவில்லை முன்பிராத ஈர்ப்புடன் திரும்பத் திரும்பக் கேட்கிறேன். வைரமுத்துவின் வரிகளை, கே.ஜே.ஜேசுதாஸ் பாட கட்டிப் போட வைக்கும் இளையராஜாவின் இசை. வீட்டுக்கு வந்து அந்தப் பாடல் காட்சியைப் பார்த்தேன். பின்னர் கே.பாலசந்தர் ஒரு பாடலை எப்படி வண்ணமயமாக்குகிறார் என்பதற்கான சிறுதுளி உதாரணத்தை அந்தப் பாடலை edit பண்ணி YouTube இல் ஏற்றுகிறேன். அதையே நீங்கள் இங்கு காணப் போகிறீர்கள்.

சங்கீத உலகம் போற்றும் ஜே.கே.பி என்ற இசை மேதை வழி தவறிக் காதலில் விழுந்து பின் அதைத்தொலைத்த வேதனையில் குடியில் சரணாகதி கொள்கிறார். இருப்பு எல்லாம் மெல்ல மெல்லத் தேயும் வேளை எஞ்சிருந்த காரும் எதற்கு என்று ஜே.கே.பி மனைவி அது நாள் வரை வாகனச் சாரதியாக இருந்தவரை வழியனுப்புகிறார். அந்த அதிர்ச்சியைத் தாங்கமுடியாது  கார் மீது புதைந்து அழுகிறார் சாரதி. அப்படியே கமெரா கார்க் கண்ணாடி வழியாக சித்தம் கடந்து நிற்கும் ஜே.கே.பியைக் காட்டும். இவ்வளவு நுணுக்கமான காட்சியை "பூமாலை வாங்கி வந்தான்" பாடலின் இடையிசையின் ஒரு சில நிமிடங்கள் மாத்திரமே பயணிக்கும் இசையில் நிரப்பிய காட்சி தான். இதையே கே.பாலசந்தரின் திறமையான இயக்கத்தின் ஒரு சோறு பதமாக என்னால் காட்டமுடியும்.


அந்தப் பாடலின் முழுக் காணொளி



இங்கே நான் சொன்ன காட்சியைப் பாருங்கள். சாதாரணமாக கடந்து போயிருக்கும் பாடலாகப் பார்த்தவர்களுக்கு இப்போது காட்சியின் வீரியத்தைப் புரிந்து கொள்ளவும் உதவும்.

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர், இசைஞானி இளையராஜாவோடு கூட்டுச் சேர்ந்த படங்களின் பட்டியலைத் தான் முதலில் பகிர நினைத்தேன். ஆனால் இப்பேர்ப்பட்ட ஆளுமைகளைப் பற்றிப் பேசும் போது விலத்த முடியாது விஷயங்கள் வந்து கொண்டேயிருக்கும்.
இன்று பிறந்த நாள் கொண்டாடும் கே.பாலசந்தரை இத்தருணம் நானும் வாழ்த்துகிறேன்.

Wednesday, July 2, 2014

பாடல் தந்த சுகம் : அல்லி சுந்தரவல்லி லாலி


ஒலி நாடாக்களின் யுகம் வழக்கொழிந்து போகும் நேரத்தில் இந்தப் பாடலை அடிக்கடி நினைவுபடுத்தும் என்னிடமிருக்கும் இந்தப் படத்தின்     ஒலியிழைப் பேழை.

சிட்னியில் இருக்கும் நம்மூர் மளிகைக்கடையில் 15 வருஷங்களுக்கு முன்னர் இதைக் கண்டபோது முதலில் வாங்க வைத்ததே "நீ வருவாய் என" பாடல்கள் இருப்பதால் தான். வாங்கிய பின்னர் தான் தெரிந்தது கூடவே இருக்கும் சக படங்களான அந்தப்புரம், கண்களின் வார்த்தைகள் இவற்றின் இசை இளையராஜா என்று. அப்போது தான் எனக்கு அறிமுகமானது "அல்லி சுந்தரவல்லி லாலி சொல்லு லாலி"
இப்படி ஒவ்வொரு பாடல்களும் என்னை வந்தடையும் போது ஏதோவொரு பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்துடன் வந்துவிடுகின்றன :-)

நேற்று #RajaChorusQuiz இல் இந்தப் பாடலை நான் போட்டிப் பாடலாகக் கொடுத்த போது பலருக்கு அதுவே முதல் அனுபவம் என்றும், பாடலை மிகவும் ரசித்துக் கேட்டதாகவும் சொன்னபோது ஏதோ நானே இந்தப் பாடலை இசையமைத்த திருப்தியடைந்தேன்.

"கண்களின் வார்த்தைகள்" திரைப்படம் பிரபல தயாரிப்பு நிறுவனம் முக்தா பிலிம்ஸ் சார்பில் முக்தா.V.சுந்தர் இயக்கத்தில் வெளிவந்தது. இந்தப் படம் முக்தா பிலிம்ஸ் இன் நூறாவது தயாரிப்பு என நினைக்கிறேன் சரியாகத் தெரியவில்லை. ஆனால் ஏதோவொரு சிறப்பு அடையாளத்துடனேயே நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இவர்கள் இந்தப் படத்தைத் தயாரித்து வெளியிட்டிருக்கிறார்கள். விக்ரம், கரண், 
பிரேமா நடித்திருக்கிறார்கள். சேதுவுக்கு முந்திய விக்ரம் என்பதால் வழக்கமான அவரது ஆரம்பகாலத் தோல்வியோடு சேர்ந்துவிட்டது இந்தப் படமும்.

Nammoora mandara hoove என்று கன்னடத்தில் வெளிவந்த படம். கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மகன் ஷிவ்ராஜ்குமார் கதாநாயகனாக நடிக்க ரமேஷ் அர்விந்த், பிரேமா ஆகியோர் இணைந்து நடித்த வெற்றிப் படமாக அமைந்தது. இசைஞானி இளையராஜா இசையில் மொத்தம் ஏழு பாடல்கள்.

இளையராஜாவை ஒவ்வொரு மொழிக்காரரும் ஒரு குறிப்பிட்ட படப்பட்டியலோடு வெகுவாகக் கொண்டாடும் போது அந்தப் பட்டியலில் கன்னடம் என்று வரும் போது கண்டிப்பாக இந்தப் பாடல்களும் இருக்கும் அளவுக்கு கன்னடர்களுக்கு இந்தப் படப்பாடல்கள் மேல் கொள்ளைப் பிரியம்.
நான் சொன்னதை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினால் YouTube இல் தொங்கிக் கொண்டிருக்கும் இந்தப் படப்பாடல்களுக்கு வந்து சேர்ந்திருக்கும் பின்னூட்டங்களில் உச்சி மோந்து பாராட்டிக் கொண்டிருப்பதை ஒரு எட்டு பார்த்து விடுங்கள். 

குறிப்பாக இங்கே நான் பகிர்ந்திருக்கும் "அல்லி சுந்தரவல்லி லாலி" பாடலைத் தமிழில் பாடகர் அருண்மொழியும், மூலப் பாடலான "ஹள்ளி லாவணியல்லி லாலி சுபலாலி" பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியமும் குழுவினரோடு பாடியிருக்கிறார்கள். 
இந்தப் பாடலை ஏற்கனவே தெரிந்த பலருக்கு கன்னடம் வழியாகவே தமிழ் அறிமுகமாகியிருக்கிறது. எனக்கே தலைகீழ். எஸ்.பி.பாலசுப்ரமணியம், அருண்மொழி ஆகிய இரு வேறுபட்ட பரிமாணம் கொண்ட பாடகர்களின் பாடல்களைத் தனித்துக் கேட்கும் போது இரண்டுமே உறுத்தலில்லாமல் ரசிக்க வைத்திருப்பதே சிறப்பு.

சேர்ந்திசைக்கும் குரல்களை பாடல் முழுதும் தூவி, அவர்களையும் சிறு சிறு ஆலாபனை இசைக்க வைத்திருப்பது சிறப்பு. 

சந்தோஷம் கொட்டும் இந்தக் காதல் பாடலில் ஆண்குரல் மட்டும் தனியே இசைக்க, கூட ஜோடி போட்டுப் போட காதலிப்பெண் குரல் இல்லாது அந்தப் பெண்ணின் தோழியர் அவளின் மன நிலையைப் பிரதிபலிக்குமாற்போல வித்தியாசமாக அமைக்கப்பட்டிருக்கும். பாடலின் ஆரம்பம் முதல் இறுதிவரை அதே சீர் பின்பற்றப்பட்டிருக்கும்.

கற்பனை பண்ணிப்பாருங்கள் பாடலில் வரும் தோழிமார் பாடும் பகுதி இல்லாமல் கூட இந்தப் பாடலைக் கொடுத்திருக்க முடியும். ஆனால் ஒரு பாடலை எவ்வளவு தூரம் தனித்துவமாக்கிக் கொடுக்க வேண்டும் என்ற உழைப்பின் வெளிப்பாடே அந்தச் சேர்க்கை என்பது புலனாகும்.
பாடலின் இசைக்கோர்ப்பைப் பத்திரமாகக் கொண்டு சேர்க்கும் பொறுப்பில் பாடலாசிரியர் பழனிபாரதியின் பங்கும் சிறப்பானது.

இப்படியான பாடல்கள் இன்னும் வெகுவாகக் கொண்டாடப்படவில்லையே என்ற ஆதங்கம் இசை ரசிகனுக்கு என்றும் இருந்துகொண்டேயிருக்கும். ஆனால் அதையெல்லாம் இசைஞானி கடந்து போய் வெகுகாலமாயிருக்கும்.

"ஹள்ளி லாவணியல்லி லாலி சுபலாலி" கன்னடப் பாடலைக் கேட்க

http://soundcloud.com/kanapraba/hallilavaniyalli 

"அல்லி சுந்தரவல்லி லாலி சுபலாலி" தமிழ்ப்பாடலைக் கேட்க

http://soundcloud.com/kanapraba/alli-suntharavalli