Pages

Sunday, September 28, 2014

பாடல் தந்த சுகம் : துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே


சினிமா உலகில் அதிக வெளிச்சம் படாத இயக்குநர் சின்னத்திரையில் சாதித்துக் காட்டுவது உண்டு. இவ்வகையான இயக்குநர்களில் முன்னோடி என்று  சுந்தர் கே.விஜயனைக் குறிப்பிடலாம். இவரின் தந்தை புகழ்பெற்ற இயக்குநர் கே.விஜயன். தயாரிப்பாளர் நடிகர் கே.பாலாஜியின் திரைப்படங்கள் பெரும்பாலும் கே.விஜயனின் இயக்கத்திலேயே இருப்பதுண்டு. தந்தை வழியில் தனயன் சுந்தர் கே.விஜயனும் "ரேவதி" என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். 

சுந்தர் கே.விஜயன் இசைஞானி இளையராஜாவோடு இணைந்த படம் "என் அருகில் நீ இருந்தால்" அந்தப் படத்தின் பாடல்களைக் காட்சிகளைத் தவிர்த்து இசையை மட்டும் கேட்டுப் பாருங்கள். அருமையான இசைப் பெட்டகம் அது.

ரேவதி என்ற திரைப்படத்தைத் தொடர்ந்து சுந்தர் கே.விஜயன் இயக்கத்தில் வெளிவந்த படம் "வெளிச்சம்". இந்தப் படத்துக்கு இசை வழங்கிய மனோஜ் கியான் இரட்டையர்கள் அப்போது ஊமை விழிகள் திரைப்படத்தின் வாயிலாகப் பரவலாக அறிமுகமாகியிருந்தார்கள். இளையராஜா காலத்தில் சந்திரபோஸ் இற்கு அடுத்து அதிகம் அறியப்பட்ட இசையமைப்பளார்களாக எண்பதுகளின் இறுதியில் மனோஜ் கியான் இரட்டையர்களின் பங்களிப்பு சிறப்பானது. குறிப்பாக இவர்கள் இசையமைத்த "வெளிச்சம்" திரைப்படம் மற்றைய படங்களைப் போலப் பரவலாக அறியப்படாத படம் என்றாலும் என் பார்வையில் இந்தப் படத்துக்கு இவர்கள் தந்த இசை மற்றைய படங்களை விடத் தனித்துவமாக நிற்கும். குறிப்பாக இரண்டு பாடல்களில் ஒன்று "ஓ மை டியர் ஐ லவ் யூ" பாடலை டாக்டர் கல்யாண், ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் குரல்களில் கேட்டுப்பாருங்கள் ஒரு பாடலில்  இரண்டு விதமான தளங்களில் பயணப்படும் முக்கோணக் காதலை அழகாகக் கொடுத்திருக்கும். http://songs.shakthi.fm/ta/Velicham_www.shakthi.fm/shakthi.FM%20%20-%20%20My%20Dear.mp3

வெளிச்சம் படத்தில் வரும் "துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே" பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் பாடியிருப்பார். அந்தக்காலத்துச் சென்னை வானொலி நிலைய நேயர் விருப்பம் வாயிலாக எனக்கு அறிமுகமான பாடலிது. கே.ஜே.ஜேசுதாஸ் பாடிய பாடல்களில் இளையராஜாவுக்குக் கொடுத்தது மட்டுமன்றி ரவீந்திரன் (உதாரணம் ஏழிசை கீதமே, பாடி அழைத்தேன்), சந்திரபோஸ் (சந்தோஷம் காணாத வாழ்வுண்டா) வரிசையில் மனோஜ் கியானுக்காகப் பாடிய பாடல்களைத் தேடிக் கேட்பதே சுகம். மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் கே.ஜே.ஜேசுதாஸ் இன் குரலுக்குக் கிடைத்த இன்னொரு பரிமாணம் துலங்கும்.
துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே பாடலில் இழைத்திருக்கும் மெல்லிசையும், வைரமுத்துவின் அழகிய வரிகளும், ஜேசுதாஸ் இன் குரலும் சேர்ந்து கிட்டிய இந்த அழகிய பாடலை இரவு நேரத்தில் கேட்கும் போது அது தரும் சுகமே தனி.


பாடலை YouTube channel இல் காண 
http://www.youtube.com/watch?v=GyJlJXiS8u4&sns=em

Thursday, September 25, 2014

பாடல் தந்த சுகம்: விழிகள் மீனோ மொழிகள் தேனோ

"இளையராஜாங்கிற ராட்சஷன் இந்தக் கல்யாணி ராகத்தை எவ்வளவு அற்புதமா, வித விதமாப் பயன்படுத்தியிருக்கார்" என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் முன்பொரு சூப்பர் சிங்கர் மேடையில் "விழிகள் மீனோ மொழிகள் தேனோ" பாடலை ஒரு போட்டியாளர் பாடி முடித்ததும் சொல்லியிருந்தார்.

ஒரு வருடம் கழித்து மீண்டும் சூப்பர் சிங்கர் மேடை, இது சின்னஞ் சிறாருக்கானது அங்கேயும் இதே பாடல் வந்திருக்கிறது நேற்று. சூப்பர் சிங்கர் ஜூனியர் மேடையில் பிரபலமான குழந்தை ஸ்பூர்த்தி பாடிய விதம் மீண்டும் சிறப்பு விருந்தினராக வந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களைப் பனிக்கச் செய்திருக்கின்றது. ஸ்பூர்த்தி இந்தப் பாடலை ஆரம்பத்தில் எடுத்த விதம் மாறுதலாக இருந்தாலும் பின்னர் பாடலின் ஜீவனோடு பயணித்து முக்கியமாக அந்த ஆலாபனைகளில் சிறப்பாகப் பாடியிருந்தார்.

"விழிகள் மீனோ மொழிகள் தேனோ" ராகங்கள் மாறுவதில்லை என்ற திரைப்படத்திற்காக பாடலாசிரியர் வைரமுத்து வரிகளில், இசைஞானி இளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடியிருந்தார். எண்பதுகளின் முற்பகுதியில் வெளிவந்த இந்தப் படத்தின் பாடலை அப்போது என் அண்ணன் இயக்கிக் கேட்ட எல்.பி ரெக்கார்ட்  வழியாக என் காதுகளுக்குக் கடத்தியது.  அப்போதெல்லாம் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் பாடல்களை இனம் காணும் அளவுக்கு அறிவிருந்தாலும் இந்தப் பாடலை ஏனோ  பாடகர் பாலமுரளிகிருஷ்ணா அவர்களின் குரலோடு பொருத்தியே மனம் ஒப்புவித்தது.
எப்படி "உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை" என்ற பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் குரலுக்குப் பதிலாக ஜெயச்சந்திரன் குரலாகப் பலரால் நினைக்க முடிகின்றதோ அது போல
"ஒரு நாள் போதுமான நான் பாட" என்ற திருவிளையாடல் படப் பாடலை டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் பாடும் போது மனம் எஸ்.பி.பியாகவே நினைத்து வைத்திருக்கும். அதற்கு எதிர்மாறாக அமைந்திருக்கிறது இந்த "விழிகள் மீனோ மொழிகள் தேனோ" பாடல்.  ஆனால் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தான் பாடினார் என்பதற்கு முத்திரையாக ஒரு சங்கதி வந்து விழும் "அடடா கால்கள் அழகிய வாழை" என்று பாடுமிடத்தில் ஒரு வெட்கப் புன்னகை அதுதான் அக்மார்க் எஸ்.பி.பொ

இந்தப் பாடலின் ஆரம்பமே எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் ஆலாபனையோடு தான் வாத்தியக் கருவிகளுக்குக் கடத்தும். ஒரு சாஸ்திரீய சங்கீதத்துக்குண்டான வாத்தியக் கோஷ்டியாக புல்லாங்குழல், மிருதங்கம் எல்லாம் அணி செய்தாலும் மிக முக்கியமாக வயலின் வாத்தியப் பயன்பாடு வெகு உச்சமானது இந்தப் பாடலில். குறிப்பாக 1.14 நிமிடத்தில் வயலின் தனித்து நின்று சிறப்புச் சேர்க்க விட்டேனா பார் என்பது போல புல்லாங்குழலும், மிருதங்கமும் சங்கமிக்கும் போது ஒரு மினி இசை வேள்வியே நடந்து முடிந்திருக்கும்.

இம்மாதியான  எண்பதுகளின் ஆரம்பத்தில் கொஞ்சம் சாஸ்திரீய சங்கீதப் பின்னணி கொண்ட பாடல்கள் பலவற்றுக்கு வார்த்தைகளால் அணி செய்திருக்கிறார் புலவர் புலமைப்பித்தன்.
இந்தப் பாடல் கவிஞர் வைரமுத்து அவர்களால் எழுதப்பட்டிருக்கிறது. எனக்குத் தெரிந்து இந்த அழகிய பாடலை தன்னுடைய மற்றைய பாடல்கள் போல அதிகம் சிலாகித்துப் பேசவில்லை ஆனால் இந்தப் பாடலின் மகத்துவம் இன்னும் சிறப்பானது. "சலங்கை ஒலி"க்கு நிகரானது.
 பாடல் வரிகளுக்குப் பின்னான ஜதிகளை மேலதிகமாகச் சேர்த்த கைங்கர்யம் ராஜாவுடையதாக இருக்கலாம்.
இந்த மாதிரியான பாடல்கள் தலைமுறைகளைத் தாண்டி வாழும் என்பதற்கு 31 வருடங்கள் கழித்து ஸ்பூர்த்தி மெய்ப்பித்திருக்கிறாள்.

விழிகள் மீனோ மொழிகள் தேனோ மூலப்பாடல்

சூப்பர் சிங்கரில்  ஸ்பூர்த்தி பாடியதுமுகப்புப் படம் நன்றி: http://www.tamilnow.com

Friday, September 19, 2014

மாண்டலின் ஶ்ரீநிவாஸ் நினைவில்

போன ஜூன் மாசம் தான் சிட்னி இசை விழாவுக்கு வந்து சிறப்பித்து போனவர் இப்படித் தன் 45 வது வயதில் திடீரென்று நம்மைவிட்டு மறைவார் என்று யார்தான் நினைத்திருப்பார்கள். சிட்னி இசை விழாவுக்கு வந்து சிறப்பித்த கலைஞர்களை வானொலிப் பேட்டி காணும் சந்தர்ப்பம் வாய்த்த போது மாண்டலின் ஶ்ரீநிவாஸ் ஐ வானொலிப் பேட்டியெடுக்கவே பெரிதும் முனைந்தேன். ஆனால் அவரின் வருகை விழாவுக்கு முந்திய நாள் என்பதாலும் வேறு சில தனிப்பட்ட காரணங்களாலும் பேட்டி தவிர்க்கப்படவே, அடுத்தமுறை வருவார் தானே என்று காத்திருந்தேன்.

மிக இளவயதிலேயே சாதித்துக் காட்டியதாலோ என்னமோ சீக்கிரமே நம்மிடமிருந்து பிடுங்கப்பட்டுவிட்டார் என்ற பேரதிர்ச்சியை ஜீரணிக்க முடியவில்லை.

மாண்டலின் ஶ்ரீநிவாஸ் என்ற ஆளுமை 90 களின் ஆரம்பத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட போது அப்போது சினிமா இசையைத் தவிர வேறெதையும் தொடாத என்னைக் கேட்க வைத்தது அவரின் வாத்திய இசைத் தொகுப்பு ஒன்று. கொழும்பின் பம்பலப்பிட்டி கிறீன்லாண்ட்ஸ் ஹோட்டலில் தூசு படிந்த ஒலி நாடாவை வாங்கி வந்து போட்டுக் கேட்ட நினைவுகள் இன்னும் என் மனக்கிணற்றில் தேங்கியிருக்கின்றன.
இளையராஜாவோடு சேர்ந்து  இவர் பணியாற்றிய அந்தச் சிறப்பு அனுபவங்களையும் பேட்டி வழியாகத் தேக்கி வைக்க நினைத்திருந்தேன்.

மாண்டலின் இசையை நம் வானொலி நிகழ்ச்சிகளில் மன அமைதியைத் தரும் பகிர்வுகளுக்குப் பின்னணி இசையாய் ஒலிக்கவிட்டுக் கொடுப்போம். இனிமேல் அது ஒலிக்கும் போதெல்லாம் உங்கள் ஞாபகமே வெளிக்கிளம்பிச் சஞ்சலப்படுத்தும். 

Friday, September 5, 2014

இசைஞானி இளையராஜா இசையில் பாடலாசிரியர் மு.மேத்தா


இன்று கவிஞர் மு.மேத்தா அவர்களின் பிறந்த நாள். தமிழில் புதுக்கவிதை படைத்த முன்னோடிகளில் சிறப்பான தனியிடம் பெற்றவர் என்ற தகமையைத் தாண்டி, ஈழப்பிரச்சனை குறித்து அன்று தொட்டு இன்றுவரை "தெளிவான" சிந்தனையோடு இயங்கும் மிகச்சில படைப்பாளிகளில் இவரும் ஒருவர் என்ற மேலதிக காரணத்தால் மு.மேத்தா அவர்களின் மீது எனக்கு இன்னும் ஒருபடி அதிகப்படியான நேசத்தை என்னுள் விதைத்து வைத்திருக்கிறேன். ஒருமுறை ஆனந்த விகடனில் இவர் எழுதிய சிறுகதை ஒன்றில் ஈழத்தமிழர் தரப்பின் நியாத்தை மறைபொருளாகச் சுட்டி எழுதியிருந்தார். அதற்கு முன்னரே ஈழத்தின் எண்பத்து மூன்றுகளின் அவலங்களை

"எல்லார்க்கும் விருந்தளித்து 
ஏற்றம் பெற்ற எங்கள் இனம்
மரணதேவதையின் கோரப்பசிக்கு 
விருந்து கொடுத்த பின்
அங்கே இப்போது அகதியானது"

போன்ற புதுக்கவிதைகள் தாங்கிய "திருவிழாவில் ஒரு தெருப்பாடகன்" என்ற தொகுதியில் கொடுத்திருப்பார்.

மு.மேத்தாவின் கவிதைகளை அவரின் "ஊர்வலம்" என்ற கவிதைத் தொகுதியே எனக்கு அறிமுகப்படுத்தியது. பின்னர் அவளுக்கு ஒரு கடிதம், நடந்த நாடகங்கள், முகத்துக்கு முகம், அவர்கள் வருகிறார்கள், கண்ணீர்ப்பூக்கள், வெளிச்சம் வெளியே இல்லை, நந்தவன நாட்கள், மு.மேத்தா முன்னுரைகள், மு.மேத்தா திரையிசைப்பாடல்கள் என்று வாங்கிக் குவித்தேன். பத்து வருடங்களுக்கு முன்னர் "காதலர் கீதங்கள்" என்ற வானொலித் தொகுப்பைத் தயாரித்து வழங்கியபோது வெறுமனே காதல் பாடல்களை மட்டும் சேர்த்து இட்டு நிரப்பாமல், பின்னணி இசையோடு அவரின் கவிதைத் தொகுதிகளில் இருந்து இரண்டடி வரிகளை எடுத்துக் கொடுத்துவிட்டு அதற்கேற்ற சூழலுக்குப் பொருந்துமாற்போலப் பாடல்களை இணைத்துக் கொடுத்தேன். அந்தப் படைப்பு நேயர்களைக் கவரவே பின்னர் தாங்களும் ஈரடிக் கவிதையோடு பாடல்களை இணைத்து வானொலிப் பிரதியாக அனுப்பி நிகழ்ச்சி தயாரிக்க வைத்தார்கள். கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் இந்த நிகழ்ச்சியைச் செய்தேன்.

மு.மேத்தாவின் புதுக்கவிதைகளை நடிகர் முரளியின் ஏக்கம் கலந்த தொனியில் அந்தக் காதலன் உள்ளக்கிடக்கையாகக் கொடுத்த இதயம் படம் சிறப்பானது.அந்த ஒலிப்பகிர்வுகளை இங்கே கொடுத்திருக்கிறேன்.
http://www.radiospathy.com/2011/02/www-www.html

கண்ணதாசன், வாலி, வைரமுத்து, முத்துலிங்கம் உள்ளிட்ட வெற்றிகரமான திரையிசைப்பாடலாசிரியர்கள் தம் திரையிசை அனுபவங்கள், பாடல் பிறந்த கதைகளை நூலுருவில் கொடுத்தது போன்றே மு.மேத்தா அவர்களும் தனது திரையிசைப்பாடல்கள் நூலில் தன் ஆரம்பகாலப் படங்களின் பாடல்கள் உருவான சுவையான பின்னணி மற்றும் காட்சிக்குப் பொருந்திய பாடல் வரிகளின் நியாயத்தை எல்லாம் நிறுவியிருப்பார். அத்தோடு பிரபல வானொலி, தொலைக்காட்சிப் படைப்பாளர் பி.ஹெச்.அப்துல்ஹமீத் அவர்கள், கலைஞர் தொலைக்காட்சியில் படைத்த இன்னிசை மழை என்ற நிகழ்ச்சியிலும் மு.மேத்தாவின் பாடல் அனுபவங்கள் சிறப்பாகப் பதிவாகியிருக்கின்றன.

"அனிச்ச மலர்" என்ற படத்தில் சங்கர்-கணேஷ் இசையில் அறிமுகமான மு.மேத்தாவுக்கு "ஆகாய கங்கை" என்ற இசைஞானி இளையராஜாவின் இசையில் மலர்ந்த படத்தின் "தேனருவியில் நனைந்திடும்" http://www.youtube.com/watch?v=lrCmn2WdRSE&sns=em என்ற பாடலே அதிக புகழைக் கொடுத்தது. அந்தப் பாடல் வாய்ப்பை மு.மேத்தாவின் நண்பர் கமல்ஹாசனே பெற்றுக் கொடுக்கக் காரணமாக அமைந்தாராம்.

தொடர்ந்து இதய கோவில் படத்தில் இடம்பெற்ற "யார் வீட்டில் ரோஜா பூப்பூத்ததோ"   http://www.youtube.com/watch?v=jRCh-b-a334&sns=em 
நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தில் இடம்பிடித்த "பெண்மானே சங்கீதம் பாடிவா"  http://www.youtube.com/watch?v=Dj-cimDzqoY&sns=em 
சொல்ல துடிக்குது மனசு படத்தில் வந்த "வாயக்கட்டி வயித்தக் கட்டி" 
http://www.youtube.com/watch?v=JVOdYtytRNk&sns=em
என் புருஷன் எனக்கு மட்டும் தான் படத்தில் வந்த "மனதில் ஒரே ஒரு பூப்பூத்தது" 
http://www.youtube.com/watch?v=Q2VC0QoqHoc&sns=em
கோடை மழை படத்தில் இடம்பெற்ற "பல பல பல பல குருவி" http://www.youtube.com/watch?v=qWyuY1UQyjU&sns=em
போன்ற இனிமையான பாடல்களுக்குச் சொந்தக்காரர் மு.மேத்தா. 
உதய கீதம் படத்தில் வந்த "பாடு நிலாவே தேன் கவிதை" http://www.youtube.com/watch?v=nrTKUhNQaWg&sns=em பாடலை நாயகி பாடுவது போல் ஆரம்பித்து நாயகனும் இணையும் வேளை நாயகனும் பாடு நிலாவே என்று பாடுவது பொருந்தாது ஏனென்றால் அவன் மூடிய சிறைக்குள் இருந்து அவளின் குரல்கேட்டுப் பாடுகிறானே எனவே "பாடும் நிலாவே" என்று மாற்றி பாடல் வரிகளில் நுணுக்கம் இருக்க வேண்டிய தேவையைச் சுட்டினாராம் இளையராஜா.

"ராஜராஜ சோழன் நான்" http://www.youtube.com/watch?v=7f1kEtA-xRM&sns=em என்ற ரெட்டைவால் குருவி படப்பாடலே மு.மேத்தாவைப் பரவலாகக் கொண்டு சேர்த்த இனிய பாடல். அந்தப் பாடல் ஒன்றே போதும் மு.மேத்தாவின் கவிச்சிறப்பைத் திரையில் காட்ட. 

வேலைக்காரன் படத்தின் படக்குழு இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுடன் வட நாட்டுக்குச் சென்றுவிட, அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா சார்பில் இயக்குனர் கே.பாலசந்தரே ஒவ்வொரு பாடலுக்குமான கதைக்களனைச் சொல்லி மு.மேத்தாவை அனைத்துப் பாடல்களையும் எழுத வைத்து, இசைஞானி இளையராஜா இசையில் கொண்டுவந்தது ஒரு புதுமை. "தாஜ்மஹாலின் காதிலே ராம காதை கூறலாம்" என்று சமூக சிந்தனையை "வா வா வா கண்ணா வா" காதல் பாடலில் புகுத்தியிருப்பார் மு.மேத்தா.

தன் திரைப்படப் பாடல்கள் தொகுப்பில் கவிஞர் மு.மேத்தா இப்படிக் கூறுகின்றார்.
"தென்றல் வரும் தெரு" http://www.youtube.com/watch?v=oeN1fVS-Psg&sns=em என்று சிறையில் சில ராகங்கள் படத்துக்குப் பாடல் எழுதினேன்.

இப்பாடலின் தொடக்க வார்த்தைகளே பின்னர் நான் நண்பர்களுடன் சேர்ந்து தயாரித்த திரைப்படத்தின் பெயரானது. வேறு பெயர் வைக்கலாம் என்று நான் விரும்பினேன். பெயரை மாற்றக்கூடாது என்று மொத்த யுனிட்டே பிடிவாதம் பிடித்தது.

நான் தயாரித்த "தென்றல் வரும் தெரு" திரைப்படத்திலும் இதே பாடல் வரிகளை முதல் அடிகளாகக் கொண்டே பாடல் ஒன்று இருக்கின்றது. அப்பாடலின் வரிகளை மாற்றலாமே என்று இளையராஜா கேட்டார். கதைச் சூழலுக்காக இந்த வரி கட்டாயம் வேண்டும் என்று வேண்டினோம்.

இரண்டு பாடல்களுக்கும் முதல் வரிகள் இரண்டும் ஒன்றே. இசை வேறு, இரண்டுக்கும் ஒரே இசையமைப்பாளர் இளையராஜா. "தென்றல் வரும் தெரு அது நீ தானே" என்ற பாடல் வரிகளை முதல் அடியாகக் கொண்டு "சிறையில் சில ராகங்கள்" திரைப்படம் 1990 இல் வெளியானது. அது நடிகர் முரளி, பல்லவி நடிப்பில் வெளியானது.அடிகள் பயன்பட்ட மு.மேத்தாவின் தயாரிப்பில் வந்த "தென்றல் வரும் தெரு" ரமேஷ் அரவிந்த், கஸ்தூரி நடிப்பில் வெளியானது. நான்கு ஆண்டுகள் கழித்து 1994 இல் தான் படம் வந்தது.
இந்தப் படத்திலும் தென்றல் வரும் தெரு http://www.youtube.com/watch?v=ZvtCLpjMnvw&sns=em என்று இன்னொரு பாடலை எழுதியிருப்பார் மு.மேத்தா.
மு.மேத்தாவின் திரையிசைப் பயணத்தில் இப்படிக் கிட்டிய எண்ணற்ற முத்துகள் ஏராளம்.

இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து பணிபுரியும் பாடலாசிரியர்களில் வாலிக்குப் பின்னர் இன்னமும் தொடர்ந்து சேர்ந்திசையாகப் பயணிக்க்கும் கவிஞர் மு.மேத்தாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
Monday, September 1, 2014

பாடல் தந்த சுகம் : நந்தவனம் பூத்திருக்கு அடி அம்மாடி


ஒரு மலையாளப்படம் மூன்று மலையாளத்திரையுலக இயக்குனர்களால் மூன்று வெவ்வேறு மொழிகளில் எடுக்கப்பட்டது என்ற பெருமையைப் பெற்ற படம் "சன்மனசுள்ளவர்க்கு சமாதானம்".
மலையாளத் திரையுலகின் ஜனரஞ்சக இயக்குனராக இருக்கும் சத்யன் அந்திக்காட் இன் படங்களை விலாவரியாகப் பதிவுகள் போடுமளவுக்கு இவரின் படங்கள் மீது எனக்குக் கொள்ளைப் பிரியம். இந்த "சன்மனசுள்ளவர்க்கு சமாதானம்" படம் அவரின் இயக்கத்தில் மோகன்லால், காத்திகா, சிறீனிவாசன் உள்ளிட்டோர் நடிப்பில் வந்த படம். 
பின்னர் தமிழுக்கு இந்தப் படத்தின் கதையோடு மலையாளத்தின் இன்னொரு பெரும் இயக்குனர் ஐ.வி.சசி மூலமாக "இல்லம்" என்ற பெயரில் எடுக்கப்பட்டது. 
ஹிந்திக்கு மலையாளப் படங்களைச் சுட்டும் சுடாமலும் தூக்கிக் கொண்டு போய் டிங்கரிங் செய்து படமெடுக்கும் மலையாள நட்சத்திர இயக்குனர் பிரியதர்ஷன் கையகப்படுத்தி சுனில் ஷெட்டியை வைத்து இயக்கினர். ஆக மொத்தத்தில் மூன்று பிரபல மலையாள இயக்குனர்கள் வெவ்வேறு மொழிகளில் இயக்கிய சன்மானத்தைப் பெற்ற படம் இது.

ஐ.வி.சசி தமிழில் பகலில் ஓர் இரவு, குரு, காளி போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். கமல் நடித்த குரு படம் யாழ்ப்பாணம் வெலிங்டன் தியேட்டரில் 200 நாட்களைக் கடந்து ஓடிய படம். அப்போது சின்னப்பிள்ளையாக இருக்கும் போது வீரகேசரி பேப்பரில் குரு படம் நாட்கணக்கில் ஓடும் விளம்பரங்களைப் புதினமாகப் பார்த்ததுண்டு. அப்பேர்ப்பட்ட புகழ் கொடுத்த குரு படத்தை ஐ.வி.சசிக்கு "இல்லம்" இடம் கொடுக்கவில்லை. சிவக்குமார், அமலா, சந்திரசேகர் போன்றோர் முக்கிய பாத்திரத்தில் நடித்த படம் அது.
சிவக்குமாரை அமலாவோடு சேர்த்து படம் இயக்கும் போதே பாதி சறுக்கல் தெரிந்திருக்கணும். இல்லத்தை இல்லாமல் செய்துவிட்டார்கள் ரசிகர்கள். 

ஆனால் வழக்கம் போல இந்தப் படத்தையும் தூக்கி நிறுத்தி இன்றளவும் பேச வைத்தது இசைஞானி இளையராஜாவின் இசை. படத்தின் அனைத்துப் பாடல்களையும் கங்கை அமரன் எழுதியிருந்தார். அதிலும் குறிப்பாக "நந்தவனம் பூத்திருக்கு அடி அம்மாடி வண்டு வந்து ஆடிப்பாடத்தான்" என்ற பாடல் அந்த நாளில் வானொலிப் பிரியர்களுக்கு பெரு விருந்தாக அமைந்தது. இந்தப்பாடலின் சிறப்பு என்னவென்றால், 

"அழகென்ற விருந்து வைத்தாள் இயற்கை அன்னை
அதைப்பாடப் படைத்து விட்டாள் கவிஞன் என்னை
இளகாத இளமனதை இளக வைத்து 
இன்பத்தை என்னோடு தவழ வைத்து" 

என்று ஒரு தொகையறாவைக் கொடுத்து விட்டு " நந்தவனம் பூத்திருக்கு அடி அம்மாடி வண்டு வந்து ஆடிப்பாடத்தான்" என்று ஆரம்பித்துக் குதூகலமாகப் பாடியளிப்பார் எஸ்.பி.பாலசுப்ரணியம். இளஞ்சோலை பூத்ததா போன்ற பாடல்கள் எல்லாம் இந்தப் பாடலுக்கு அண்ணன், தம்பி உறவு அவ்வளவுக்கு நெருக்கமான சங்கதிகளோடு அமைந்த பாடல்கள் இவை. இந்தப் பாடல் இசையின்றி ஆரம்பித்து பின் மேற்கத்தேய வாத்தியப் பின்னணிக்கு மாறிப் பின்னர் சரணத்தில் தாள வாத்தியக் கட்டுக்குத் தாவும் ஆனால் கேட்கும் போது எந்த நெருடலும் தெரியாத இசைப்பந்தம் இருக்கும்.