Pages

Sunday, May 26, 2013

எண்பதுகளில் 'திரு"க்குரல் T.M.செளந்தரராஜன்


எண்பதுகளின் திரையிசையைத் தான் பாடபாடமாகக் கொண்டவர் நாம், ஆனாலும் காலங்களைக் கடந்து முந்திய தசாப்தங்களின் பாடல்களையும் கேட்க வைத்த புண்ணியத்தைக் கொடுத்தது இலங்கை வானொலி. "பிறந்த நாள் இன்று பிறந்த நாள்" என்ற ஆரம்ப அடியைக் கொண்ட பாடல் முழுசாகக் கேட்காவிட்டாலும் அந்த வரிகள் நாள் தப்பாமல் வந்து கொண்டே இருக்கும் அப்போது.

எழுபதுகளின் இறுதிக் காலகட்டத்தில் இளையராஜாவின் காலத்திலும் டி.எம்.செளந்தரராஜனின் பங்களிப்பு அன்னக்கிளி தொடங்கி தியாகம், நான் வாழ வைப்பேன் போன்ற படங்களில் சிவாஜிக்கான குரலிலும் பைரவியில் ரஜினிக்காக "நண்டூருது நரியூருது" என்றும் சங்கர் கணேஷ் இரட்டையர்கள் "தாயில்லாமல் நானில்லை" படத்தில் கமலுக்காக டி.எம்.எஸ் ஐப் பாடவைத்த "வடிவேலன் மனசு வைத்தான்" என்று அடுத்த தலைமுறை நடிகர்களுக்காகவும் தன் குரலைக் கச்சிதமாகப் பொருத்தி வைத்தார்.  இவைகளையெல்லாம் கடந்து அந்த எண்பதுகளிலும் "பாசமலர்" ஆகவும் "பாலும் பழம்""ஆலய மணி" ஆகவும் நீக்கமற வானொலிப்பெட்டியை நிறைத்தார் டி.எம்.செளந்தரராஜன்.

அற்ப வாழ்நாள் கொண்டிருந்தாலும் அற்புதக் கவியாற்றல் கொண்ட பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்களின் எழுச்சி மிகு பாடல்களுக்கு உணர்வு வடிவம் கொடுத்தது இன்னும் உயர வைத்தது டி.எம்.எஸ் இன் குரல். கண்ணதாசனின் காதலில் இருந்து எல்லா உணர்வையும் அசரீரியாகக் கொடுத்ததில் டி.எம்.செளந்தரராஜனின் குரலே முதன்மையானது.  தமிழ்த்திரையின் முன்னணி நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி ஜெய்சங்கர், சிவக்குமார் வரையான நாயகர்களுக்கு ஏற்ற விதத்தில் பாடிச் சென்றவரின் பாடல்களை வெறுமனே ஒலி வடிவில் கேட்கும் போதே இது யாருக்கானது என்று கண்டுபிடித்துச் சொல்லுமளவுக்கு நுணுக்கம் நிறைந்தவர்.  அவருக்குப் பின்னர் தான் திரைப்படத்தின் நாயகனின் பாத்திரத்துக்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டு பாடும் வல்லமையைத் தமிழ்த்திரையிசையுலகம் பதிவு செய்து கொண்டது. அந்த நிலையை இழந்து சோரம்போய் நிற்கின்றது இன்றைய தமிழ்த்திரையிசையுலகம். 
 அவர் ஒரு கடல், கம்பன் சொல்லுவது போல "ஆசையினால் பாற்கடலை நக்கிக் குடித்துவிட முனையும் பூனை" போன்றது டி.எம்.செளந்தராஜனின் முழுமையான திரையிசைப் பங்களிப்பைப் பற்றி அலசி ஆராயும் பணி. என்னளவில் எண்பதுகளில் அவரின் பாடல்கள் எவ்வளவு தூரம் எம்மை ஆட்கொண்டன என்பது குறித்த சில நினைவுத்துளிகளை இங்கே பகிர்ந்து கொள்கின்றேன்.

"எங்கள் தமிழினம் தூங்குவதோ சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ" லவுட் ஸ்பீக்கர் பூட்டிய ஒ ரு பழைய மொறிஸ் மைனர் காரில் இருந்து வெளிக்கிளம்புகிறது மலேசியா வாசுதேவன் குரல்.  அந்தச் சத்தம் வந்த திசை நோக்கிக்  கூட்டம் கூடுகிறது காரை ஓரம் கட்டிவிட்டு, காருக்குள் இருக்கும் போராளி தாயக விடுதலை குறித்த கோஷத்தை எழுப்புகிறார். கூடவே துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்படுகின்றன. கார் மெல்லக் கிளம்புகின்றது, இம்முறை டி.எம்.எஸ்
பாடுகின்றார் "அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்"
இன்னும் பல கிராமங்களைக் கடக்கவேண்டும் அந்தக் கார், புழுதியைக் கிழித்துக் கொண்டு போகின்றது. புழுதி வளையம் மட்டும் கொஞ்ச நேரம் நிற்க கார் எங்கோ கடந்து விட்டது, தூரத்தே
"ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறதே" என்றும், "அச்சம் என்பது மடமையடா" என்றும் சில்லென்று காதை ஊடுருவுகிறது டி.எம்.எஸ் இன் கணீர்க்குரல், அந்தக் காலகட்டத்தில் இளைஞர்களின் எழுச்சிக் குரல் அது. அப்போதெல்லாம் ஈழ விடுதலை இயக்கங்கள் தமக்கான போர்க்கால எழுச்சிப்பாடல்களைத் தாமே உருவாக்காத காலகட்டம். அப்போதெல்லாம் செளந்தரராஜன் என்றோ ஏதோ ஒரு படத்துக்காகப் பாடிய பாடல்களே அதிலும் குறிப்பாக எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் பதிவாகிய வீரமூட்டும், நம்பிக்கை கொடுக்கும் விடுதலைத் தீயை மூட்டப் பயன்படுத்த உறுதுணையாக அமைந்தன.
பின்னாளில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தொண்ணூறுகளில் கூட புலிகளின் குரல் வானொலியில் விதிவிலக்காக அமைந்த திரையிசைப்பாடல்கள் என்றால் அங்கே டி.எம்.செளந்தரராஜனின் பாடல்களே இடம்பிடித்திருந்தன. கூடவே பி.பி.ஶ்ரீனிவாஸ் குழு பாடிய "தோல்வி நிலையென நினைத்தால்".

டி.எம்.செளந்தரராஜன் குரல் போர்க்கால இலக்கியமாகக் கொண்டாடப்பட்ட அதே சமயம் ஆலயங்கள் தோறும் கொடியேறிக் கொண்டாட்டம் நடக்கும் போதும் இன்னும் முக்கிய திருவிழாக்களிலும் "உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே" என்றும் "புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே" என்றும் "தில்லையம்பல நடராஜா" என்றும் அந்தந்த ஆலய மூல மூர்த்தியின் பெருமைதனைக் கூறும் பக்திப்பாடல்களிலும் இடம்பிடித்தவர் இன்னும் தொடர்கின்றார்.
"கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தே" என்ற பாடலை எங்களூர் வீரமணி ஐயர் அவர்கள்  கபாலீஸ்வரர் கோயில் உறையும் அன்னை மீது எழுத  அதை டி.எம்.செளந்தரராஜன் குரல் வடிவம் கொடுத்து ஈழத்தமிழகத்துக்கும், இந்தியத்தமிழகத்துக்கும் உறவுப்பாலம் அமைத்ததை இன்றும் பெருமையாகச் சொல்லிக்கொள்வோம்.

அன்றைய காலகட்டத்தில் நாங்கள் சிறுசுகளாக இருந்த போது,  மாமன், மச்சான் உறவுகளும் சரி ஊரில் தோட்டவேலை செய்து களைத்து விழுந்து வீடு திரும்பும்  உழைப்பாள சமூகமும் சரி இடம், பொருள் ஏவல் பாராமல், டி.எம்.எஸ் இன் குரலைத் தம்முள் ஆவாகித்துக் கொண்டு பாடியபோதெல்லாம் வேடிக்கை பார்த்ததை இப்போது நினைத்துப் பார்க்கும் போது அந்தக் கலைஞன் எவ்வளவு தூரம் எல்லாத்தளங்களிலும் நின்று தன்னை நிறுவியிருக்கிறான் என்ற ஆச்சரியமே மேலோங்குகின்றது,

எண்பதுகளின் திரையிசைப்பாடல்களிலே டி.எம்.செளந்தரராஜனுக்கான கெளரவத்தை மீளவும் நிலை நிறுத்தியவர் டி.ராஜேந்தர். அவரின் ஒரு தலை ராகம் படத்தில் வரும் "நானொரு ராசியில்லா ராஜா" அன்றைய அண்ணன்மாரின் காதலுக்கான தேசிய கீதமாகவும், "என் கதை முடியும் நேரமிது" காதலின் விரக்தியில் நின்றோரின் உள்ளத்து ஓசையாகவும் அமைத்துக் கொடுத்தார் டி.ராஜேந்தர். இளையராஜா காலத்தில் புதுமையைத் தேடி எஸ்.பி.பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவன், ஜேசுதாஸ் என்று மும்முனைப் போட்டியிருக்க, அங்கும் தன்னை நிலை நாட்ட வைத்தது ஒரு தலை ராகம் திரைப்படப் பாடல்கள். டி.ராஜேந்தரின் அடுத்த படைப்புக்களிலும் குறிப்பாக "ரயில் பயணங்களில்" படத்தில் "அமைதிக்குப் பெயர் தான் சாந்தி" என்றும் "நெஞ்சில் ஒரு ராகம்" திரைப்படத்தில் "குருடான கவிஞனுக்கு ஊதாப்பூ என்ன ரோசாப்பூ என்ன" என்றும் டி.எம்.செளந்தரராஜனின் குரலை அடுத்த தலைமுறையும் ஆராதிக்கும் வண்ணம் செய்தார். இதில் முக்கியமாக டி.ராஜேந்தரின் கவியாழமும் சிறந்ததால் இன்னும் ரசிக நெஞ்சங்களில் இடம்பிடிக்க முக்கிய ஏதுவாக அமைந்திருந்தன.

"இளமைக்காலம் எங்கே என்று திரும்பும் இங்கே" என்று மீண்டும் டி.எம்.செளந்தரராஜன், பி.சுசீலா கூட்டணியை வைத்து "உன்னை ஒன்று கேட்பேன் சேதி சொல்ல வேண்டும்" பாடலை மீள் இசை கொண்டு 1986 இல் வெளிவந்த "தாய்க்கு ஒரு தாலாட்டு" என்ற படத்திற்காகக் கொடுத்திருந்தார் இளையராஜா.

நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு மலேசியா வாசுதேவனைப் பொருத்திய எண்பதுகளிலே கங்கை அமரன் இசையமைத்த "நீதிபதி படத்துக்காக அமைந்த "பாசமலரே அன்பில் விளைந்த வாசமலரே" பாடலைக் கேட்கும் போது திருமணக்கோலத்தில் நிற்கும் மகளை கொண்டாடி அனுப்பும் தந்தையாக மாறி உருகும் போது மீண்டும் டி.எம்.செளந்தரராஜன் கட்சியிலேயே ஒட்டிக்கொள்ளத்தோன்றும்.


எண்பதுகளிலே திரைப்படக்கல்லூரி வழியாக வந்து பிரமாண்டத்தைத் திரையில் புகுத்தும் பரம்பரையில் மூத்தவர் ஆபாவாணன் வருகையும் டி.எம்.செளந்தரராஜனை மீள நிறுவுவதற்கு உசாத்துணையாக அமைகின்றது.  மனோஜ் கியான் இசையில் "உழவன் மகன்" திரைப்படத்தில் "உன்னைத் தினம் தேடும் தலைவன்" என்று அன்றைய முன்னணி நாயகன் விஜய்காந்துக்கான குரலாகப் பயன்படுத்திக் கொண்டார். இதற்கெல்லாம் மணிமகுடமாக அமைந்தது மனோஜ் கியான் மீண்டும் இசையமைக்க ஆபாவாணன் உதவி இசையை வழங்கிய 1989 இல் வெளிவந்த "தாய் நாடு" திரைப்படம். இந்தப் படத்தின் ஐந்து பாடல்களிலும் டி.எம்.செளந்தரராஜனைப் பாடவைத்துக் கெளரவம் சேர்த்தார் ஆபாவாணன். அந்தக் காலகட்டத்து சென்னை வானொலியின் நேயர் விருப்பம் நிகழ்ச்சியில் "தாய் நாடு" படத்தில் வந்த "ஒரு முல்லைப்பூவிடம் கொஞ்சும் பூமணம் தஞ்சம் ஆனது கண்ணா" பாடல் நிரந்தர சிம்மாசனம் போட்டிருந்தது.  அந்தப் பாடல் வந்த போது தன் வயதில் அறுபதுகளின் விளிம்பில் இருந்தவர் குரலில் 1960 ஆம் ஆண்டுகளின் இளமையைக் காட்டியிருந்தார்.  மின்சாரம் இல்லாத தொண்ணூறுகளில் பற்றறியை நிரப்பியும், சைக்கிள் தைனமோவைச் சுழற்றியும் பாட்டுக் கேட்டஅந்தக் காலகட்டத்து என் போன்ற ஈழத்து இளையோருக்கு "ஒரு முல்லைப்பூவிடம்" பாடலை இன்று போட்டுக் காட்டினாலும் ஒரு முறுவல் தொனிக்கும் முகத்தில். 

தமிழ்த்திரையுலகின் கம்பீரங்களில் ஒன்று டி.எம்.செளந்தராஜன் குரல், அன்றைய றேடியோ சிலோனில் இருந்து இன்று உலகை ஆளும் தமிழ் வானொலிகளிலும் சூப்பர் ஸ்டார் டி.எம்.செளந்தரராஜன் தான் அவருக்குப் பின் தான் மற்றெல்லோரும், நாளையும் நம் சந்ததிக்குச் சென்று சேரும் "தமிழ்"பாடல்களில் அவர் இருப்பார்.

பதிவை எழுதத்தூண்டியதோடு தலைப்பையும் பகிர்ந்த நண்பர்  இற்கும் நண்பர்   இற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.