Pages

Monday, August 22, 2011

"ஏழுஸ்வரங்களுக்குள் இத்தனை பாடல் சிட்னியிலே"

இசை உலகில் நாற்பது ஆண்டுகளாக இயங்கிக்கொண்டிருக்கும் வாணி ஜெயராம் என்றதொரு பெரும் பாடகியை அவுஸ்திரேலிய மண்ணில் முதன் முதலில் கொண்டு வந்து அவருக்கான ஒரு சிறப்பானதொரு களத்தைக் கொடுப்பது என்பது வெறுமனே "வெறுங்கையால் முழம் போட முடியாது". இப்படியானதொரு இன்னிசை நிகழ்ச்சிக்கு ஏற்றதொரு கூட்டணியும் அதை அரவணித்துக் கொண்டு நடத்தக்கூடிய சிறப்பானதொரு ஒருங்கமைப்பாளர்களும் அமைய வேண்டும். இவையெல்லாம் சரியாக இயங்கினால் மற்றைய எல்லாவற்றையும் ரசிகர்கள் கவனித்துக்கொள்வார்கள். அதுதான் நேற்று சிட்னியில் நிகழ்ந்த இன்னிசை இரவு மூலம் வெளிப்பட்டது.

சிட்னியில் இயங்கும் Symphony Entertainers என்ற அமைப்பு முன்னர் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களை அழைத்து வந்து ஒபரா ஹவுஸில் அவருக்கான உச்சபட்ச கெளரவத்தையும் நேர்த்தியானதொரு இசை நிகழ்ச்சியையும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தியிருந்ததை இங்கே சொல்லியிருக்கின்றேன். அந்த நிகழ்வு கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களுக்கு எப்படியொரு மணிமகுடமாக அமைந்ததோ அதேஅளவு கெளரவத்தை இசையுலகில் இத்தனை வருடங்களை ஊதித்தள்ளிய வாணி ஜெயராமுக்கும் நேற்றைய நிகழ்வு ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. தமிழ் சினிமாவின் இன்றைய தவிர்க்கமுடியாத பாடகர்களில் ஹரிச்சரண், சின்மயி, விஜய் ஜேசுதாஸ் கூட்டணியோடு வாணி ஜெயராமும் வருகின்றார் என்றபோது ஓடும் புளியம்பழமும் போட எட்ட நிற்குமே இந்தக் கூட்டணி என்று நினைத்திருந்தேன். ஆனால் அந்த நினைப்பைப் பொய்க்க வைத்தது இந்த நிகழ்ச்சியை அமைக்கவேண்டும் என்று தயாரிப்புப் பணியில் முதன்மையாகச் செயற்பட்ட விஜய் ஜேசுதாஸின் சிறப்பான கூட்டணி.

ஞாயிற்றுக்கிழமை மாலை நிகழ்ச்சி என்றாலே கஷ்டப்பட்டுத் தான் காருக்குள் ஏறிப்போவேன். ஆனால் இது இஷ்டப்பட்ட நிகழ்ச்சி எனவே மனதைச் சமாதானப்படுத்திக்கொண்டே இசை நிகழ்வு நடந்த ஹில்ஸ் செண்டருக்குச் சென்றேன். நிகழ்ச்சி சம்பிரதாயப்படி 20 நிமிடம் தாமதமாக ஆரம்பித்தது. "கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்" என்ற ரெட்டைவால் குருவி படப்பாடலை கீபோர்ட்டும், சாக்ஸபோன், கிட்டார் சகிதம் சென்னை, கேரளா இசைக்குழுக் கூட்டணி இசைக்க ஆரம்பித்ததும் அந்த மூலப்பாடலில் மோகன் மனதில் நுழைந்த ராதிகா போல மனசு அப்படியே இசைக்கூட்டுக்குள் தாவித் தன்னைத் தயார்படுத்தியது. விஜயாள் என்ற குட்டிப்பிள்ளை வந்திருந்த பாடகர்களை தன் அளவில் குட்டியாக அழகு தமிழில் அறிமுகப்படுத்திவிட்டுப் போக சின்மயி அரங்கத்தில் நுழைந்தார். "ஈழத்தமிழர்களோட இசையுணர்வை நான் எப்பவுமே மெச்சுவேன்" என்ற தோரணையில் அவர் ஆரம்பிக்க "ஆஹா வழக்கமான பஞ்ச் டயலாக்கா" என்று நான் நினைக்க, "நான் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவள், எங்களுக்கும் இலங்கைக்கும் நிலத்தால் நெருக்கம் அதிகம், இலங்கையில் எங்க தமிழர்கள் கொல்லப்பட்டதையும், கஷ்டப்பட்டதையும் அறிந்து நாங்க வேதனைப்பட்டோம், பட்டுக்கிட்டிருக்கோம், என்னோட முதற்பாடலே இலங்கைத் தமிழர்களோட கதைக்கருவோடு வந்த "கன்னத்தில் முத்தமிட்டால்" படத்தின் பாடல் என்று சொல்லியவாறே ஒரு நிமிட மெளன அஞ்சலியைப் பகிர்ந்தவாறே சின்மயி பாடியது நெகிழ வைத்தது. சின்மயி சிட்னிக்கு வருவது இது இரண்டாவது முறை, கடந்த நிகழ்ச்சியில் அவர் ஒரு தெய்வம் தந்த பூவே என்ற தன்னுடைய முதற்பாடலைப் பாடாத ஆதங்கத்தில் இருந்தேன். அதை ஈடுகட்டவோ என்னமோ அவரை இரண்டாவது தடவை சிட்னி முருகன் இறக்கியிருக்கின்றான். வைரமுத்து நேசித்து இழைத்த வரிகளை சின்மயி வெறும் குரலைக் கொடுத்தா பாடினார் உணர்வைக் குழைத்தும் அல்லவோ.

இரவல் வெளிச்சம் நீ! இரவின் கண்ணீர் நீ!
எனது வானம் நீ! இழந்த சிறகும் நீ!
நான் தூக்கி வளர்த்த துயரம் நீ!

இந்த வரிகளைப் பாடும் போது சின்மயி கண்டிப்பாக உள்ளுக்குள் பொருளுணர்ந்து அழுதிருப்பார், பார்த்துக்கொண்டிருந்த நம்மைப் போல.


"என்னைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்" என்று ஒரு குரல், அரங்கத்தின் இண்டு இடுக்கெங்கும் வந்திருந்த கூட்டம் அவரைத் தேட அரங்கத்தின் பின் வாயிலில் இருந்து "தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு" என்று பாடிக்கொண்டே வந்தார் விஜய் ஜேசுதாஸ். ஒபரா ஹவுசில் நடந்த இசை நிகழ்ச்சிக்குத் தந்தையோடு வந்து கொஞ்சம் அடக்கமாகவே இருந்த பையன் இந்த முறை தன்னோடு இரண்டு இளசுகளையும் கூட்டி வந்ததால் குஷி மூடில் இருந்ததை நிகழ்ச்சி தொடங்கி முடியும் வரை காண முடிந்தது. எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இளமைக்குரலின் எச்சம் எஸ்.பி.பி.சரணிடம் இருந்தாலும் அது மட்டுமே போதும் என்று அவர் இருந்து விட்டார். இதுக்கு இது போதும் என்றோ என்னமோ திரையிசையும் அவருக்கு மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்பையே கொடுத்திருந்தது. ஆனால் கே.ஜே.ஜேசுதாஸ் என்ற மேதையின் மகன் என்பதை விட, கடுமையான விமர்சகரின் மகனாகப் பிறந்து விட்டுக் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓடமுடியாது என்பதை விஜய் ஜேசுதாஸ் உணர்ந்திருப்பார் என்பதை அவருக்கான பாடல்கள் மட்டுமல்ல, தந்தையின் பாடல்களைத் தேர்ந்தெடுத்து அவர் பாடிச் சிறப்பிப்பதிலும் உணரலாம். விஜய் ஜேசுதாஸுக்கு, சென்னை 28 இல் வந்த "உன் பார்வை மேலே பட்டால்" பாடலுடன் தனக்குக் கிடைத்த பாடல்கள் சிலவற்றைப் படித்தாலும் பெரும்பொறுப்புத் தன் தந்தை வராத வெற்றிடத்தை நிரப்புவது. அதை அவர் சிறப்பாகவே செய்தார்.


"ஹாய் சிட்னி" என்று ஆர்ப்பாட்டமாகக் களமிறங்கிய ஹரிச்சரண், சிட்னி என்றால் யுத்துக்கள் கொட்டிக் கிடக்கும் சீமை என்றோ என்னமோ முதலில் இளசுகளைக் குறிவைத்துத் தான் சிக்ஸர் அடித்தார், பின்னர் போகப் போக நிலமையை உணர்ந்திருப்பார். சிட்னிக்கு முதன்முதலில் வரும் பாடகர்கள் போடும் தப்புக்கணக்கு இதுதான், வெளிநாடு என்றால் ராப், பாப், பப்பரபப்ப வகையறாக ரசிகர்கள் தான் அதிகம் என்று (அல்லது எனக்குத்தான் வயசு போட்டுதோ ;-))
ஹரிச்சரணின் ஸ்பெஷாலிட்டி, கொடுத்த பாட்டை அப்படியே மனப்பாடம் செய்து ஒப்புவிக்காமல், அந்தப் பாடலின் ஆரம்பத்தில் மெல்ல மெல்லத் தானே ஆலாபனைகளை இட்டுக்கட்டிப் பின்னர் மூலப்பாடலுக்குத் தாவி அங்கேயும் ஜாலம் செய்து பின்னர் செஞ்சரி அடித்து விட்டுக் களம் திரும்பும் ஆட்டக்காரன் போல நிதானமாகப் பாடலை இறக்கி முடிக்கும் வல்லமை கைவரப்பெற்றிருக்கின்றார்.

"கலைவாணியே உனைத்தானே அழைத்தேன்" என்று விஜய் ஜேசுதாஸ் பாட, அரங்கத்துக்கு வந்த வாணி ஜெயராம் கூப்பிய கரங்களுடன். வாணி ஜெயராமோடு ஜோடிகட்டிப் பாடியவர்களில் கே.ஜே.ஜேசுதாஸ் தான் கச்சிதமாகப் பொருந்தக் கூடியவர் என்பது என் கருத்துக்கணிப்பு. இன்னொரு அல்ல மேலும் இரண்டு ஒற்றுமையைக் கண்டேன். ஒன்று மனிதர்களை நேசியுங்கள் என்று மனித நேயக்கருத்தை அழகாக வெளிப்படுத்திவிட்டே தன் கச்சேரியை ஆரம்பித்தது, இன்னொன்று இப்படியானதொரு இசை நிகழ்ச்சி தன் நீண்ட நெடிய இசைவாழ்வில் பத்தோடு பதினொன்று என்று ஒப்புக்குப் பாட்டு நிகழ்ச்சி வைக்காமல், ஒரு அர்ப்பணிப்போடு பள்ளியில் கற்றதை வீடு வந்து ஆசையாகத் தன் பெற்றோரிடம் அழகாகப் ஒப்புவித்து முறுவலிக்குமே சின்னக்குழந்தை? அந்தப் பெரிய மனசு வாணி ஜெயராமிடம் இருந்ததை நிகழ்ச்சி முடியும் வரைக் காணமுடிந்தது. "இன்னும் வருவேன்" என்று சொல்லிக்கொண்டே ஐந்து மணி நேர இசை நிகழ்வில் இதைத் தொடர்ந்தார்.

"ஒரு காலத்தில் இலங்கை வானொலியைக் கேட்டுச் சங்கீதம் கற்றுக்கொண்டவள், Binaca Geet Maala என்ற ஹிந்தித் திரைப்பாடல் வரிசை நிகழ்ச்சியைப் பாடகியாக வருவதற்கு முன்னர் நேசித்துக் கேட்டவள், 1971 ஆம் ஆண்டு வஸந்த் தேசாயின் இசையில் Guddi என்ற ஹிந்தித் திரைப்படத்துக்காக முதலில் பாடி அந்தப் படத்தின் "Bole Re Papihara" என்ற பாடலை இதே Binaca Geet Maala திரைப்பாடல் நிகழ்ச்சியில் கேட்ட போது வாய்விட்டு அழுதேன்" என்று வாணி ஜெயராம் சொன்னபோது நெகிழ்வோடு உணர முடிந்தது. இந்தப் படத்தில் குல்ஸார் எழுதிய மொத்தம் மூன்று பாடல்கள் ஆனால் "Bole Re Papihara"மற்றும் Hum Ko Manki Shakti Dena ஆகிய பாடல்கள் தான் படத்தில் வந்தது என்று சொன்னதோடு நிகழ்ச்சியில் "Bole Re Papihara"பாடலையும் சேர்த்துக் கொண்டார். தென்னிந்தியாவில் இருந்து ஹிந்தித் திரையுலகம் போய்ப் பாடிய முதற்பாடகி வாணி ஜெயராம் என்று சின்மயி சொன்ன புகழாரத்தை ஏற்கிறோம், ஆனால் எனக்கென்னமோ முன்னரேயே தென்னகக் குயில்கள் சென்ற ஞாபகம்.

வாலி எழுதிய "மல்லிகை என் மன்னன் மயங்கும்" பாடலோடு ஆரம்பித்தவர், "மேகமே மேகமே", "யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது" "நானே நானா" (வாலி எழுதியது) என்று அவரின் தனித்துவமான தனிப்பாடல்களை எல்லாம் அள்ளிச் சேர்த்த மகிழ்ச்சியை விட எதிர்பாராத பரிசு தானே எப்போதும் உச்சபச்ச சந்தோஷத்தைக் கொடுக்கும்? அப்படி அமைந்தது தான் ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தில் அவர் பாடி "என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம் ஏன் கேட்கிறது" பாடலைப் பாடிய போது கிட்டியது. இப்படியான மேடைக்கு அந்நியமான பாடல்களைத் தேர்ந்தெடுத்துப் பாடிய வகையில் கேளடி கண்மணி படத்தில் வந்த "தென்றல் தான் திங்கள் தான்" பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் அவர்கள் முன்னர் ஒபரா ஹவுஸ் நிகழ்ச்சியில் பாடி இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார்.

ஒவ்வொரு பாடல்களையும் எழுதியவர், இசையமைப்பாளர் என்று சொல்லி வாணி ஜெயராம் பாடியது இதுவரை நான் மேடை எதிலும் காணாதது. வாணி ஜெயராமே ஒரு நல்ல கவிஞர், அப்படி இருக்கையில் எப்படிப் பாடலாசிரியரைத் தவிர்ப்பார்? வாணி ஜெயராம் தான் கவிதை எழுதுவேன் என்றதோடு பகிர்ந்த கவிதைகளில் "கவிதை" இருந்தது. ஒவ்வொரு பாடலுக்கும் இப்படிக் கவிஞர் பெயர் சொல்லிப்பாடியவர் "என்னுள்ளில் எங்கோ" என்ற பாடலைக் கங்கை அமரன் எழுதினார் என்ற போது எனக்குப் பின் வரிசையில் இருந்தவர் உணர்ச்சிவசப்பட்டுப் பக்கத்தில் இருந்தவரிடம் "கங்கை அமரன் இளையராஜாவின்ர son" என்றபோது கங்கையைத் தேடினேன் குதிக்க.


ஒரு பாடகிக்கு ஏராளம் நல்ல நல்ல பாடல்கள் வாய்க்கலாம் ஆனால் பாடகி என்ற கதாபாத்திரத்துக்கு உயிர்கொடுக்கும் நல்வாய்ப்பு எத்தனை பாடகிகளுக்கு வரும்? அப்படி அமைந்த வாணி ஜெயராமின் முத்திரை "ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்" என்ற பாடலைப் பாடும் போது

"காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்"

என்ற வரிகளை அவர் அழுத்திப் பாடியபோது இத்தனை நாளும் இவ்வளவு தூரம் அனுபவிக்காமல் கற்பனை சந்தோஷத்தில் இருந்த உணர்வில் கண்ணதாசனை நினைக்க, வாணியோ கண்ணதாசனைப் பற்றிப் பேசினார்.
"நாளைக்கு உங்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன் நாளை பத்திரிகையில் வரும் "என்று குழந்தை உள்ளத்தோடு என்னிடம் சொன்ன கண்ணதாசன் பாடகிகள் என்றளவில் என்னைப் பற்றி மட்டுமே தனது "சந்தித்தேன் சிந்தித்தேன்" தொடர் கட்டுரையில் எழுதியிருக்கின்றார். "ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்" இதை எங்கே கேட்டாலும் அங்கே நின்று முழுப்பாடலையும் கேட்டுத்தான் அங்கிருந்து விலகுவாராம் கண்ணதாசன். எனக்கு வாசிக்கப் பிடிக்கும் என்பதால் தான் எழுதிய 43 நூல்களைக் கொடுத்திருக்கின்றார் என்று கண்ணதாசனைப் புகழந்தார்.
"அபூர்வ ராகங்கள்" படத்தின் பாடல் ஒலிப்பதிவு நடக்கும் நாட்களில் காலையில் சீக்கிரமாகவே பாடற்பதிவு ஸ்டூடியோவுக்குப் போய் விட்டோம் என்று நினைத்தால் எங்களுக்கு முன்னார் வெகு சீக்கிரமாவே எம்.எஸ்.விஸ்வநாதன் வந்திருப்பார். அவ்வளவுக்கு பங்சுவாலிட்டி நிறைந்தவர்களோடு பணியாற்றியதெல்லாம் மறக்கமுடியாத காலங்கள், என்னோட முதல் இசையமைப்பாளர் வஸந்த் தேசாய் முதற்கொண்டு பணியாற்றிய இசையமைப்பாளர்கள் வெறும் இசையை மட்டுமே எனக்குப் போதிக்கல" என்று அந்தப் பொற்காலத்தை நினைவுபடுத்தினார் வாணி ஜெயராம்.

"அந்தமானைப் பாருங்கள் அழகு" என்று விஜய் ஜேசுதாஸோடு வாணி ஜெயராம், கொடுத்த ஜேசுதாஸ் - வாணி ஜெயராம் பாடல்கள் எல்லாமே முத்துக்கள். குறிப்பாக "சிவாஜி கணேசன் நினைவு நிகழ்வுக்காக வை.ஜி.மகேந்திரன் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் முதன்முதலில் பாடிவிட்டு இப்போது படிக்கிறேன்" என்றவாறே விஜய் ஜேசுதாஸ் வாணியோடு பாடிய "கங்கை யமுனை இங்குதான் சங்கமம்" என்ற இமயம் படப்பாடல் சொர்க்கம். ஒருப்பக்கம் ஜேசுதாஸ் பாடல்களை தனயன் பாட, இன்னொரு பக்கம் "மழைக்கால மேகம் ஒன்று" (வாழ்வே மாயம்)," ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்" (நீயா) போன்ற பாடல்களை ஹரிச்சரணோடு பாடியதும் இணையாக ரசிக்க வைத்தது.
"உனக்கு கல்யாணம் ஆச்சா"என்று வாணி கேட்க
"இன்னும் இல்லை" என்று ஹரிச்சரண் சொல்ல
"இளமை ஊஞ்சலாடுகிறது" என்று சொல்லி நிறுத்தி விட்டு "அடுத்துப் பாடப்போற படம் பேர் சொன்னேன்" என்று குறும்பாகச் சொல்லி
"ஒரே நாள் உனை நான்" என்ற பாடலை வாணி ஜெயராம், ஹரிச்சரணோடு பாடியபோது அந்தச்
"சங்கமங்களில் இதம் இதம்" ஆக மனது இருந்தது.
"கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்" என்ற பாடலுக்கு ஹரிச்சரண் ஜதி சேர்க்க, வாணியின் வயதை மறைத்தது குரல்.
"மேகமே மேகமே பாடல் சிவாஜி கணேசன் சாருக்குப் பிடிச்ச பாட்டு, அந்தப் பாட்டு வந்த நாட்களில் இரவில் இந்தப் பாட்டைக் கண்டிப்பாகக் கேட்டுவிட்டுத் தான் தூங்குவார்" என்றார் வாணி.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, சங்கர்-கணேஷ், கங்கை அமரன் என்று தேடித் தேடி ஏறக்குறையத் தன்னுடைய எல்லாப்பாடல்களையும் பாடி அழகு சேர்த்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்காகப் பாடிய "சுகம் சுகம்" (வண்டிச்சோலை சின்ராசு) பாடலையும் இணைத்திருக்கலாமோ?

விஜய் ஜேசுதாஸ், சின்மயி, ஹரிச்சரண் கூட்டணி சேர்ந்தால் அடிப்பொளி தான், கலகலப்பாகப் பேசும் கலையும் சபையோரோடு அந்நியப்படாத நிகழ்ச்சி வர்ணனையும் சின்மயி இன் சொத்து. ஹரிச்சரணுக்கு வரமாக அமைந்த யுவனின் பாடல்கள் சமீபத்திய "ராசாத்தி போல" பாடல்களில் இளசுகளோடு பழசுகளும் இணைந்து தாளம் தட்டி ரசித்தது.

"ஏ ஹே ஓ ஹோ லாலலா" என்று விஜய் ஜேசுதாஸ் பாட திடீரென்று சைக்கிளில் மேடையில் ஓடி வந்து "ஏ அது நான் பாடப்போகும் பாட்டு என்னோட பேஃவரிட்" என்று ஹரிச்சரண் விடாப்பிடியாக நிற்க விஜய் ஒதுங்க "பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்" பாடல் ஹரிச்சரணின் புது ப்ளேவரில். ஆனால் இந்தப் பாட்டை மட்டும் விஜய் ஜேசுதாசுக்கு இட ஒதுக்கீடு செய்திருந்தால் "பழமுதிர்ச்சோலை எங்களுக்கும் சேர்த்துத் தான்" என்று நானும் பாடியிருப்பேன் மனசுக்குள்.


"லேசாப்பறக்குது" என்ற வெண்ணிலா கபடிக்குழு பாடலின் ஹிட் ஐத் தொடர்ந்து கார்த்திக், சின்மயி காம்பினேஷன் இருக்கணும் என்று குள்ளநரிக்கூட்டம் படத்திலும்"விழிகளிலே விழிகளிலே" பாடலை கடம் புகழ்விக்கு விநாயக்ராம் மகன் செல்வகணேஷ் "விழிகளிலே விழிகளிலே" பாட்டுக்கொடுத்ததாகச் சொல்லி ஹரிச்சரணோடு பாடினார். "லேசாப்பறக்குது" பாடல் மேடையில் லேசாகப் பாடமுடியாத சங்கதி, சின்மயி அதை மூலப்பாடலில் மிகவும் சன்னமாகப் பாடிச் சிறப்பித்திருப்பார். அதை ஈராயிரம் பேர் கொண்ட சபையில் பாடுவது சவால், அதைச் சமாளித்துப் பாடினார்.

"சத்யம் தியேட்டரில் வைத்து எனக்கு ஒரு பாட்டு சான்ஸ் கொடுங்களேன்" என்று ஹாரிஸ் ஜெயராஜிடம் கேட்க அவர் கொடுத்த "வாராயோ வாராயோ காதல் கொள்ள" ஆதவன் படப்பாடல் எனக்கு முதற்பாடல் கொடுத்த புகழுக்கு மேலாக விருதுகளைக் கொடுத்துப் புகழ் கொடுத்தது என்றவாறே ஹரிச்சரணோடு பாடினார், மேடையில் வைத்து இன்னொரு விருது கொடுத்திருக்க வேண்டும். அவ்வளவு அழகு, பாட்டைச் சொன்னேன் சார்.
விஜய் ஜேசுதாஸ் உடன் "சஹானா சாரல் தூவுதோ" பாடலைப் பாடுமுன் "நீங்க தலைவா என்று போடும் சத்தம் சென்னை வரை கேட்கணும்" என்று சின்மயி தன் தலைவர் பற்றை வெளிப்படுத்தினார். தொடர்ந்து கிளிமாஞ்சாரோ பாடலும் இதே கூட்டணியில். பெரியம்மா பையன் உதித் நாராயணணை விட விஜய் ஜேசுதாஸை வைத்தே அந்த சஹானா சாரல் தூவுதோ டூயட் பாடலையும் ரஹ்மான் கொடுத்திருக்கலாம் என்ற அளவுக்கு இருந்தது விஜய் ஜேசுதாஸின் குரலினிமை.

ஹரிச்சரண்-விஜய் ஜேசுதாஸ்- சின்மயி மூன்றுபேரும் சேர்ந்து அன்றிருந்து இன்றுவரை பாடல்களைக் கோர்த்துக் கொடுத்த unplugged என்ற தொகுப்பில் ஏதாவது ஒரு தீம் ஐ முன்னிலைப்படுத்தியிருக்கலாம். " தாய்க்கு நீ மகனில்லை"(உள்ளத்தில் நல்ல உள்ளம்) என்ற தியாகம் ததும்பும் பாடலோடு திடீரென முளைத்த "கனவில் வடித்து வைத்த சிலைகள்" (விழியே
கதையெழுது) பாடலும் "வாய்மொழிந்த வார்த்தை யாவும்" (சுந்தரி கண்ணால் ஒரு சேதி" என்ற கோர்வையும் பொருந்தாமல் தனித்துத் தெரிந்தன. அதிலும் "போறாளே பொன்னுத்தாயி" பாடல் ஸ்வர்ணலதாவுக்கு மட்டுமே எழுதி வைத்த ஆஸ்தி, சின்மயி இந்த unplugged தொகுப்பை அடுத்த மேடைக்குக் கொண்டு செல்லும் போது பாடல்களில் பரிசீலனை ப்ளீஸ்.

வழக்கமாக இந்தியாவில் இருந்து வரும் இசைக்குழு கையோடு நாலைந்து சீடிக்களையும் கொண்டு வரும். கீ போர்ட் வாசிப்பவரின் கையசைப்பு மட்டும் இருக்கும் ஆனால் என்ன அதிசயம் பின்னணியில் இசை இருக்கும். இப்படியான அற்புதங்கள் எதுவுமில்லாமல் தேர்ந்ததொரு இசைக்குழு கூடவே பயணித்தது சிறப்பு. குறிப்பாகப் புல்லாங்குழலையும் சாக்ஸபோனையும், இன்ன பிற குழல் வாத்தியங்களையும் நொடிக்கொரு தடவை மாற்றி மாற்றி வாசித்த அந்த சகலகலா இளைஞனுக்குப் பாராட்டுக்கள். இவ்வளவு இருக்கும் போது நாமும் நல்லா இயங்கணும் என்ற எண்ணத்தில் அரங்கத்தின் ஒலியமைப்பும் பங்கு போட்டுக்கொண்டது.


நிகழ்ச்சி இப்படிக் கலகலப்பாகப் போய்க்கொண்டிருக்கும் போது மேடையில் ஒரு சிறுமி மைக்குடன் தோன்றினாள். சின்மயி பாடும் போது பக்கத்தில் நின்று அவரைப் போலப் பாடுவது போலப் பாவனை, சின்மயி தன் குரலை மேலே உயர்த்தித் தலையை மேலே வானத்தை நோக்குமாற்போலப் பாட அதே மாதிரிப் பாவனையில் அவளும். குரு படத்தில் வந்த "மையா மையா"பாட்டை நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்பே சின்மயியிடம் கேட்டு வைத்து விட்டாள் அவள். சின்மயி "மையா மையா" பாடலைப் பாட,
மைக்கை ஒருகையில் வைத்துக் கொண்டு மற்றக்கை அசைத்து தன் தந்தையை அழைக்கிறாள். அவரும் வருகிறார். தந்தை விஜய் ஜேசுதாஸ், அந்தக் குட்டி அவரின் மூன்று வயது மகள் அமயா. அந்தச் சுட்டிக் குழந்தைதான் இடைவேளைக்குப் பின்னான நிகழ்ச்சியின் ஹீரோயின். தன் தந்தையோடு "அன்னாரக்கண்ணா வா" பாடலைப்பாடுவதும் அவர் நிறுத்த தானும் நிறுத்துவதும், தந்தை பாட மகள் ஆடுவதுமாக ஒரே கொட்டம் தான். சும்மாவா புலிக்குப் பிறந்த பேத்தி ஆயிற்றே.

சிட்னியில் நடந்த இந்த நிகழ்ச்சி ஐந்து மணி நேரங்களைக் கடந்தது, வாணி ஜெயராம், விஜய் ஜேசுதாஸ், சின்மயி, ஹரிச்சரண் என்று வந்த பாடகர்கள் தம் முழுமைக்குமான வெளிப்பாட்டைக் காட்டிச் சிறப்பித்தது. அந்த வகையில் இது மறக்கவொண்ணா இசை விருந்து அவர்களுக்கும் எங்களுக்கும்.

Tuesday, August 9, 2011

வெள்ளி விழா ஆண்டில் "மெளன ராகம்" இசைத்தொகுப்பு

ஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் கடந்து இன்றளவும் ரசிகர் மனதில் நீங்கா இடம் கொண்டு நிலைத்திருக்கின்றது.
வெளியே கலகலப்பான திவ்யாவாகத் திரியும் அவளின் உள்ளே கனன்று கொண்டிருக்கும் கடந்து போன காதலின் இழப்பைச் சொல்லமுடியாத வேளை, சூழ்நிலைக்கைதியாகத் திருமண பந்தத்தில் இணைகின்றாள். காதலை மனதில் பூட்டி வைத்து மெளனராகம் பாடும் அவளும், கரம் பிடித்தவனும் "தாமரை மேலே நீர்த்துளி போல் தலைவனும் தலைவியும் தம் திருமண பந்தத்தைத் தொடர்ந்தார்களா என்பதே இந்தக் காவியத்தின் மையம்.


ஒரு எளிமையான கதையை எடுத்துக் கொண்டு, பொருத்தமான பாத்திரங்களையும், துறை தேர்ந்த தொழில் நுட்பக் கலைஞர்களையும் இணைத்துப் படைக்கும் எந்த ஒரு படைப்பும் காலத்தைத் தாண்டிப் பேச வைக்கும் என்பதை இன்று திசைமாறிப் பயணித்துக் கொண்டிருக்கும் மணிரத்னம் போன்ற படைப்பாளிகளுக்கும் பாடமெடுக்கும் படங்களில் கண்டிப்பாக மெளன ராகத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.


வெளியே ஆர்ப்பாட்டம் காட்டி உள்ளே மெளன ராகம் பாடும் திவ்யா என்ற பாத்திரத்தில் ரேவதி, மனைவியின் மனம் கோணாது அவள் வழியே விட்டுத் துணையாகப் பயணிக்கும் கணவனாக என்ற சந்த்ரு மோகன், திவ்யாவின் கல்லூரிக்காலக் காதலனாக மனோ என்ற குணச்சித்திர பாத்திரத்தில் கார்த்திக் என்று இவர்களின் திரையுலக வாழ்க்கையில் மறக்கமுடியாத வகையில் இவர்களுக்கென்றே வார்த்தெடுக்கப்பட்ட பாத்திரப்படைப்புக்கள். அதிலும் குறைவாகவே வந்தாலும் நிறைவாகவே நிற்கும் கார்த்திக் இன் குணச்சித்திர வேடம் இன்றளவும் பேசப்படும் அளவுக்கு இன்னொரு தமிழ் சினிமா இப்படியானதொரு பாத்திரத்தைக் கொடுத்திருக்கின்றதா என்பதை யோசித்துத் தான் கண்டுபிடிக்க வேண்டும். மோகனின் பாத்திரத்தோடு இணைந்து கச்சிதமாகப் பொருந்திப்போகும் சுரேந்தரின் பின்னணிக்குரலையும் சொல்லி வைக்க வேண்டும்.


கதை,திரைக்கதை, வசனம், இயக்கம் என்று பன்முகப் பொறுப்புக்களையும் அள்ளிப்போட்டுக் கொண்டு மணிரத்னம் இயக்கிய சொற்பமான படங்களில் இதுவுமொன்று. அந்த நாளில் சுஹாசினியைக் கைப்பிடிக்காத வேளை என்பதும் எமக்கு ஒரு பாக்கியம். பகல் நிலவு திரைப்படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவுக்கு வந்தாலும், நாயகன் கொடுத்த பெரும் அங்கீகாரத்துக்கு முன் "மெளன ராகம்" என்ற இந்தப் படைப்புக்குத் தயாரிப்புப் பொறுப்பை அவரின் சகோதரர் ஜி.வி என்ற வெங்கடேஷ்வரன் ஏற்க, ஒளிப்பதிவை பி.சி.ஶ்ரீராம் ஏற்றிருக்கின்றார். பாடல்கள் அனைத்தையும் வாலி எழுத, எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி என்ற இரட்டைக் குரல்கள் மாத்திரமே முழுப்பாடல்களுக்கும் பயன்பட்டிருக்கின்றார்கள்.


இசைஞானி இளையராஜாவின் எண்பதுகளின் முத்திரைகளில் "மெளன ராகம்" இசை ரசிகர்களுக்குப் பாடல்களிலும் சரி, கதையோடு பயணிக்கும் பின்னணி இசை என்று இரட்டைப் பெருவிருந்து கிடைத்த படங்களில் ஒன்று. எண்பதுகளிலே உச்சத்தில் இருந்த இசைஞானியின் திறனுக்குத் தீனி கொடுத்த விதத்தில் சொற்பமே அமைந்து போன கதைக்களங்களில் இதுவுமொன்று. ராஜா ஐந்து பாட்டுக் கொடுத்தால் போதும் என்ற சினிமா வர்த்தகனிடம் இருந்து விலகி, ராஜாவின் இன்னொரு பரிமாணத்தையும் உள்வாங்கி அதைக் கொடுத்த வகையில் மணிரத்னத்துக்கும் அந்தப் பெருமை சென்று சேர்கின்றது.

இந்தப் படத்தின் பின்னணி இசைப் பிரிப்பு வேலைகளைச் செய்யும் போது கவனமாக ஒவ்வொரு துளியாகச் சேமிக்க வேண்டும் என்றும் எண்ணிக் கொண்டேன். எனவே இந்தப் பணியைக் கொஞ்சம் கவனமாகவும் நிதானமாகவும் செய்யத் தொடங்கினேன். கூடவே இப்படியான படைப்புக்களுக்கு ரசனை உள்ள சகபதிவரைத் துணைக்கழைத்து அவரின் பார்வையில் காட்சிப்படுத்தல்களில் இழையோடும் இசை குறித்த வர்ணனையை எதிர்பார்த்த போது கை கொடுத்துச் சிறப்பித்தவர் "மாதவிப்பந்தல்" புகழ் என் அருமைச் சகோதரன் கே.ஆர்.எஸ் என்ற கண்ணபிரான் ரவிசங்கர். இன்று ஆகஸ்ட் 9 பிறந்த நாள் காணும் கே.ஆர்.எஸ் இற்கு என்னாலான பிறந்த நாட் பரிசாக இந்த இசைத் தொகுப்பை அவரின் பங்களிப்பையும் இணைத்துக் கொடுக்கும் அதே வேளை றேடியோஸ்பதியின் பின்னணி இசைத் தொகுப்புப் பணியில் இது புதுமையான முதல் முயற்சி என்ற மகிழ்வான தருணத்தையும் பதிவாக்குகின்றேன். எங்களோடு இணைந்து, இந்தப் பணியில் கே.ஆர்.எஸ் இற்கு அவ்வப்போது காட்சித் துண்டங்களை வழங்கிப் பதிவை எழுத உதவிய நண்பர் கூமுட்டையின் பணியும் இணைந்து எம் மூன்று பேரின் உழைப்பு இந்தப் பதிவில் இணைந்து சிறப்பிக்கின்றது.


பாடல் வரிகள் தான் முக்கியம்!
பின்னணி இசை = 'பின்'-அணி தான்!

ஆனால் அதையும் மீறி, பாடல் சாராத அழகிய BGM-களை MSV குடுத்திருக்காரு! காசே தான் கடவுளடா படத்தில், தேங்காய் சீனிவாசன் பணம் திருடப் போகும் அந்த திக்திக் காட்சிகளை மனத்தில் ஓட்டிப் பாருங்கள்! துள்ளலான அழகிய BGM!

* 'பின்னால்' இருந்த BGM-ஐ, 'முன்னால்' கொண்டு வந்து...
* தாளம் மட்டும் அல்லாமல், ராகத்தையும் கொண்டாந்து வைத்து...
* பியானோ முதல் புல்லாங்குழல் வரை...பல இசைக்கருவிகளையும் BGM-இல் நடை பயில விட்டு...
* 'பின்'-அணியை 'முன்'-அணி ஆக்கி...பல வர்ண ஜாலங்கள் காட்டத் துவங்கியது... = இ-ளை-ய-ரா-ஜா!

பாடல் காட்சிகளிலே வரிகளும் முன் வந்து நிற்பதால், இசை சற்று முன்னும் பின்னும் வாங்கும்!
ஆனால் படத்தின் சீன்களில்? = அது இசை-அமைப்பாளனின் ஆடுகளம்! BGM-இன் முழு வீச்சு இங்கே தான்!

அன்னக்கிளி படத்தில் தொடாத BGM-களை எல்லாம்...முள்ளும் மலரும் படத்தில் தரத் தொடங்கினார்...
அது அப்படியே சிகப்பு ரோஜாக்கள், உதிரிப் பூக்கள், ஜானி, ராஜ பார்வை, மூன்றாம் பிறை என விரிந்து...மெளன ராகம் என்னும் படத்தில் தலை விரித்து ஆடியது!



தொடர்ந்து இசைஞானி அள்ளி வழங்கிய "மெளன ராகம்" என்ற காவிய ரசத்தைப் பருகுவோம்.

மெளனராகம் முகப்பு இசை

படித்தில் வரப் போகும் சிலிர்ப்புகளை, டைட்டிலிலேயே சொல்லி விடும் இசை!
தமிழ்ப் பட டைட்டில் இசையில்...
இதை மட்டும் மறக்க முடியாத ஒன்றாக ஆக்கி விட்டார் ராஜா!


ஆரம்பத்தில் பியானோவில் மட்டுமே வலம் வரும் இசை...
உடனே சந்தோஷத் துள்ளலுக்கு மாறி...
சிறிது நேரத்தில் மீண்டும் மாறிச் சோகம் இசைக்க...
அத்தனை வயலின்களும் சேர்ந்து கொள்ள....டைட்டில் முடிந்து...வீட்டில் விடியற்காலை அலாரம் ஒலிக்கிறது! :)

படம் முழுதும் தூவித் தூவி வரும் இந்த மாய இசையைக் கேளாத காதுகளே இல்லை! ஒலிக்காத செல்பேசிகளே இல்லை!



ரேவதி தன் தங்கையோடு, அண்ணன் அண்ணியின் கொஞ்சலைச் சீண்டிப்பார்க்கும் குறும்புக் காட்சி





தன்னைப் பெண் பார்க்க வரும் மாலைவேளை அதைத் தவிர்க்க ரேவதி தன் நண்பிகளோடு மழையில் லூட்டி அடிக்கும் "ஓஹோ மேகம் வந்ததோ பாடலோடு"



காலம் கடந்து வீடு திரும்பும் ரேவதி மாப்பிள்ளை வீட்டார் காத்திருந்து போய் இருப்பார்கள் என்ற எண்ணத்தில் குஷியாக உள் நுழைய அங்கே அவர்களைக் காணும் அதிர்ச்சித் துளி இசையாக

ஓகோ மேகம் வந்ததோ...பாட்டு முடிஞ்சி...ஹைய்யா அம்மா-அப்பாவை ஏமாத்தியாச்சே-ன்னு வீட்டுக்கு வந்தா....மாப்பிள்ளை காத்துக் கிடக்காரு!

கையில் செருப்போடு, அவளும் நோக்கினாள்! அண்ணலும் நோக்கினான்! :)
அதிர்ச்சியில் சித்ரவீணை பேசுகிறது, மூன்றே நொடிகளுக்கு!




பெண் பார்க்க வரும் மோகன் - ரேவதி தனிமையில் சந்திக்கும் வேளை,2 நிமிடம் 10 செக்கன் ஓடும் காட்சியில் இடையில் வரும் உரையாடலையும் இணைத்திருக்கின்றேன் காட்சி, உரையாடலோடு வரும் இசை எவ்வளவு தூரம் இழைந்திருக்கின்றது என்று உணரக்கூடிய வகையில்


"அவரு உன் கிட்ட ஏதோ தனியாப் பேசணுமாம்" என்று சொன்னவுடன், பிடிக்கலீன்னாலும்...இன்ப அதிர்ச்சியா ஒரு வயசுப் பொண்ணுக்கு?
= ஒரே ஒரு ஒத்தை மிருதங்க ஒலி.....டங்ங்ங் ! BGM-ஐக் கேளுங்க! 'மெளனம்' என்பதைக் கூட இசையாக்க வல்ல 'தெறமை' ராஜாவுக்கே உரித்தானது!

அங்கே துவங்கிய மிருதங்க ஒலி, "உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு"-ன்னு மோகன் சொல்லும் வரை, 1 beat, 2 beat, 3 beat-ன்னு வித்தை காட்டும்!




ரேவதியை மாப்பிளைக்கு பிடித்திருக்கு என்று குடும்பமே குதூகலத்தில் இருக்க, "எனக்குப் பிடிக்கல" என்றவாறே தன் எதிர்ப்பைக் காட்டும் காட்சியில்




தன் தந்தைக்கு Heart attack என்றறியும் போது வரும் காட்சியில் இழைந்தோடும் அதிர்ச்சியும், சோகமும் இசையில் தெறிக்க



ரேவதி, மோகனைக் கரம்பிடிக்கும் மணமேடை



முதல் இரவில் காதலோடு கணவன், தள்ளி நிற்கும் அவள்
கல்யாணம் முடிஞ்சி First Night Scene எனக்கு ரொம்பப் பிடிக்கும்! :)
முதலிரவுக்குப் பயப்படும் ரேவதி, கதவை மூடும் போது சோக வயலின்...
அதுவே மெல்லீசா இன்ப இசையா மாறி...
மோகன் லுக்கு விடும் போது, சக் சக் சக் சக்-ன்னு ஒரு கிக் இசையாகி.....தீண்டும் இன்பம்!!



டெல்லிக்கு வரும் தம்பதிகள், மோகன் ஆசையாகத் தன் வீட்டைச் சுற்றிக் காட்ட, ரேவதி காட்டும் அசட்டை



மோகன், ரேவதி மனம் விட்டுப் பேசும் காட்சி



தன் மனைவிக்கு ஆசையாக முதல் பரிசு வாங்கித் தரக் கணவன் கடைவீதியில், "இந்தக் கடையில் விவாகரத்து வாங்கிக்கொடுக்க முடியுமா" என்று கேட்கும் அவள், "நிலாவே வா செல்லாதே வா" பாடலோடு




"என் இதயத்தில உங்களைக் கணவரா ஏத்துக்க முடியல" படத்தின் மூல இசை அப்படியே அடித்துப் போட்டவன் மெல்ல எழுந்து நகர்ந்து வருவது போல மெதுவாகப் பயணிக்க

"நீங்க தொட்டா கம்பளிப்பூச்சியைத் தொட்டமாதிரி"தபேலாவின் அதிர்வோடு

இதற்கு என்ன எழுத முடியும்? நீங்களே கேளுங்கள்!
தபேலா மட்டும் துடிதுடிக்க...இறுதியில் சுரத்தே இல்லாத மணி, அடிச்சிக்கிட்டே இருக்கும்...மென் உணர்வுகள்!!!



கார்த்திக் அறிமுகமாகும் காட்சி ஆர்ப்பரிக்கும் இசைக்கூட்டணியோடு
ஒரு மனிதனின் குணத்துக்கு BGM போட முடியுமா? - Karthik Entry!
* கார்த்திக் = துள்ளல்
* ரேவதி = தில்லு
* மோகன் = மென்மை
படத்தில் இது வரை வராத Trumpet முதல் முறையா முழங்க...
சண்டைக் காட்சியிலும் டிஷ்யூம் டிஷ்யூம் சத்தம் மெல்லிதாகவே கேட்க...
கார்த்திக்கின் துள்ளல் இசையே, முழுசும் ஆக்ரமிப்பு!




எம்.பி மகனைத் தாக்கிய குற்றவாளி ஆள் அடையாள அணிவகுப்பில் கார்த்திக்கைக் காட்ட ரேவதி முன் வருகையில்



போலீஸ் அடி வாங்கி தள்ளாடி வரும் கார்த்திக், மூல இசை சோகராகமாகி பின்னர் குதூகலித்துப் பயணிக்கிறது

பெயிலில் எடுக்கும் போது....
நொண்டும் கார்த்திக்கின் சோக டைட்டில் இசையே,
கண்ணடிக்கும் கார்த்திக்கின் துள்ளல் டைட்டில் இசையாக மாறி...




ரேவதியை கல்லூரியில் சந்திக்கும் கார்த்திக் தன் காதலைப் பகிரும் காட்சி



பஸ்டாண்டில் மீண்டும் சந்திக்கும் ரேவதி கார்த்திக்




coffee shop இல் காதலால் சீண்டிப்பார்க்கும் கார்த்திக்






தன் தந்தையைக் குறும்பு செய்த கார்த்திக் இன் சேஷ்டையைப் பார்த்து மனம் விட்டுச் சிரிக்கும் ரேவதி, கூடவே கார்த்திக் உம் இணைந்து கொள்ள சந்தோஷ மழையில் இசையும் கூட



கல்லூரி லைப்ரரியில் கார்த்திக் ரேவதி சந்திக்கும் காட்சி, கூடவே ஒலிபெருக்கி மூலம் ஊரைக்கூட்டிச் சொல்லும் காதலோடு இணைகிறார்கள் மனதால் ஒருமித்து. இசைத்துண்டத்தின் இறுதித் துளிகளில் படத்தின் மூல இசை இன்னொரு பரிமாணத்தில்



தன் போராளிக்குணத்தைக் காதலுக்காகத் தியாகம் செய்து கொட்டும் மழையில் ரேவதியைச் சந்திக்கும் காட்சியில் கல்யாணத்துக்கு நேரம் குறிக்கையில்



கல்யாண நாளன்று போலீஸ் துரத்தலில் கார்த்திக், கார்த்திக் இன் இறுதி நிமிடங்கள்
கார்த்திக் ஜீப்பில் இருந்து குதிக்கும் போது, வயலினும் குதிக்கிறது! வயலினும் ரோட்டில் ஓடுகிறது!
அதுவே டைட்டில் BGM-ஆக மாறி...திவ்யா...ஆவி அடங்குகிறது! காதல் அடங்குகிறதா?



மோகன் ரேவதிக்கு ஆசையாகக் கொடுக்கும் பரிசு
விவாக ரத்துப் பத்திரமும், கொலுசும் = ஷெனாயில் துவங்கி, மாங்கல்யம் தந்துனானே!




பூஜா கா குங்கும் ஹை! சிந்தூர் லகாதோ - என்று அலுவலகப் பெண் வாழ்த்த, எல்லாரும் வாழ்த்த.....
மேடையைப் போலே வாழ்க்கை அல்ல! நாடகம் ஆனதும் விலகிச் செல்ல...




ரேவதி மோகனுக்காக ஆசையாகச் சமைத்துவிட்டுக் காத்திருக்க, வேலையில் இருந்து தாமதமாக வரும் மோகன் அதற்காக வருந்தும் காட்சியின் பின்னணி இசை



டெல்லி சுற்றிப்பார்க்க ரெடி



விவாகரத்து தம்பதிகள் தாஜ் மகாலைக் காணும் திடீர்க் காட்சி.....பனிவிழும் இரவு நனைந்தது நிலவு

ஒரு பெண்ணின் அலை பாயும் குரல்.....ராஜா இதை மட்டும் ஏன் இப்படிச் செய்தார் என்பது தான் எனக்கு இன்னமும் புரியவில்லை:(
முதன் முதலாகப் பார்க்கும் போது, தாஜ் மகாலின் கம்பீரம்......அது இசையில் வரவில்லையோ???



விபத்தில் சிக்கிய மோகனை, மருத்துவமனையில்..."என் புருசன்" என்று தாலி தூக்கிக் காட்டும் காட்சி...ஷெனாய் ரசிகர்கள் விரும்பி ரசிப்பார்கள்!
ஷெனாய் ஒலிக்க, தம்பூராவைச் சுண்டும் ஒரே ஒலி ஊடாடும் அழகு!





முப்பது நாள் கடந்து முதன்முதலில் காதலோடு தன் கணவனைப் பார்க்கையில் "சின்னச் சின்ன வண்ணக் குயில் கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதம்மா"




மோகன் வீட்டில் மேற்கத்திய இசை கேக்கறாரோ? = Violin Ensemble Orchestra!
Wow! ரேவதி கொலுசு சத்தம் போடாமல் குதிகாலில் காதல் சொல்லி வர...


ஆனால்.....மோகனோ எரிஞ்சு விழ...ரேவதியின் காதல் கண்ணீரில் துளிர்க்கிறது!



மோகன் பொட்டு வைத்து விட, காலிங் பெல் அடிக்க, சென்னைக்கு டிக்கெட் வர...அதே டைட்டில் இசை...ஆனால் வேறு சாயலில்!



தில்லியை விட்டுப் போகும் போது, தில்லிக்கு வந்த அதே இசை!
ரேவதியின் பேச்சே ஒரு இசை தானோ? = "உங்களுக்கு பிடிச்சிருக்கு! ஒத்துக்கத் தான் மனசில்ல! ஆனா நான் ஒத்துக்கறேன்! வெட்கத்தை விட்டு ஒத்துக்கறேன்!"



வயலின்கள் அரசாங்கம் - புகைவண்டியின் கூக்குரல் - தபேலாவின் தவிப்பு - மோகன் ஓட்டம் - ரேவதி ஓட்டம் - அதே டைட்டில் BGM!
= அது தான் மெளனத்தின் ராகம் = ராஜாவின் ராகம் = மெளன ராகம்!




BGM என்பது கத்தி மேல் நடக்கும் வித்தை!

தன் இசைப் புலமையைக் காட்ட வேணும்-ன்னு நினைச்சா, இசையே பெருசாகி, காட்சி கவிழ்ந்து விடும் அபாயம்...
அதே சமயம், தம்பதிகள் பேச வேண்டிய இடத்தில் எல்லாம், இசை மட்டுமே பேச, இந்தத் தம்பதிகள் பேசிக் கொள்ள மாட்டார்களா என்று ஏங்க வைக்கும் இசை!

Mute-ல்ல போட்டு, BGM இல்லாம, மெளன ராகம் கடைசிச் சீனை, சும்மா ஒருக்கா பாருங்க...
இளையராஜாவுக்கு இப்பதிவிலே முகஸ்துதி செய்யவில்லை என்பதைப் புரிந்து கொள்வீர்கள்!

மனித உணர்வுகளை இசையோடு கோர்த்துக் கட்டும் மாயம்!
அதுவும் ஒரே டைட்டில் இசையை, பல அவதாரங்களில் ஓட விடும் மாயம்!

ஏ, மாயக் காரனே, வித்தைக் காரனே,
ஒலிக்கு அடிமையாக்கும் மகா பாவியே....
இசை லோகத்தில் இருக்கும் இளைய-ராஜாவே......உனக்கு ஸ்தோத்திரம்! மெளன ராக ஸ்தோத்திரம்!!


Thursday, August 4, 2011

இன்னொருவர் இயக்க இசை கொடுத்த டி.ராஜேந்தர்


"விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம் பார்வை நாடகம் அரங்கில் ஏறுதாம்" இப்படியான அழகான கவித்துவம் மிகுந்த வரிகளைக் கட்டிப்போட வைக்கும் இசை கலந்து கொடுத்து அந்தக் காலத்து ராஜாவின் ராஜ்ஜியத்தில் திரும்பிப்பார்க்கவைத்தவர் இந்த டி.ராஜேந்தர். தமிழ் சினிமாவில் இசையமைபாளரே பாடலாசிரியராகவும் அமர்ந்து எழுதி, அவரே எழுதி, சமயத்தில் அவரே கூடப்பாடி வருவது என்பது என்னமோ புதுமையான விஷயம் அல்லவே. இசைஞானி இளையராஜாவில் இருநது, ஆரம்ப காலத்துப் படங்களில் எஸ்.ஏ.ராஜ்குமார் போன்றோரும் அவ்வப்போது செய்து காட்டிய விஷயம். இந்தப் பாடலாசிரியர் - இசையமைப்பாளர் என்ற இரட்டைக்குதிரையை ஒரே நேரத்தில் கொண்டு சென்று இவையிரண்டையும் வெகுசிறப்பாகச் செய்து காட்டியவர்களில் டி.ராஜேந்தருக்கு நிகர் அவரே தான் என்பேன். இனிமேலும் இவரின் இடத்தை நிரப்ப இன்னொருவர் வரும் காலம் இல்லை என்று நினைக்கிறேன் இப்போதெல்லாம் பாடல்களுக்கு வரிகளா முக்கியம், முக்கி முனகத் தெரிந்தால் போதுமே.


டி.ராஜேந்தர் என்ற இசையமைப்பாளர் சக பாடலாசிரியரை எடுத்துக் கொண்டு பதிவு ஒன்று தரவேண்டும் என்ற எண்ணம் றேடியோஸ்பதியின் ஆரம்ப காலத்தில் இருந்தே இருந்தாலும் அவரின் ஒவ்வொரு பாடல்களிலும் உள்ள கவியாழத்தைத் தொட்டு எழுதுவது ஒரு ஆய்வாளனுக்குரிய வேலை. எனவே அந்த விஷயத்தைத் தலைமேற்கொள்ளாமல் தவிர்த்து வந்தேன். ஆனால் டி.ராஜேந்தர் தன்னுடைய இயக்கத்தில் வெளிவந்த படங்களில் மட்டுமன்றிப் பிற இயக்குனர்களின் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் சிலவற்றுக்கும் இசையமைத்து, கூடவே பாடல்களையும் எழுதி முத்திரை பதித்திருக்கின்றார். அப்படியான படங்களில் சில முத்துக்களை எடுத்துக் கொடுக்கலாமே என்ற எண்ணத்தில் முக்குளித்திருக்கின்றேன்.




தமிழ் சினிமாவில் தங்க இசைத்தட்டு விருது பெற்றது "கிளிஞ்சல்கள்" படத்தின் இசை. பசி என்ற கலைப்படம் தந்த துரை இயக்கத்தில் வந்த மோகன் பூர்ணிமா ஜெயராம் இணையில் வந்த அருமையான காதற்படம். இந்தப் படத்தில் ஜெயச்சந்திரன் பாடிய "காதல் ஒரு வழிப்பாதை பயணம்" பாடலோடு எஸ்.பி.பி பாடிய அழகினில் நனைந்தது, பி.சுசீலா பாடிய "சின்னச் சின்னக் கண்ணா" போன்ற பாடல்களோடு எஸ்.பி.பி , ஜானகி ஜோடிப்பாடலாக அமைந்த "விழிகள் மேடையாம்" என்று எல்லாப்பாடல்களுமே தங்க இசைத்தட்டுக்கான அங்கீகாரத்தை நிரூபித்தவை.
விழிகள் மேடையாம் பாடல் இந்த வேளையில்



எண்பதுகளிலே கச்சிதமான காதல் ஜோடிகள் என்றால் சுரேஷ் - நதியா ஜோடி தான் கண் முன் நிற்பார்கள். அந்தக் காலத்துக் காதலர்களுக்கு இவர்கள் தான் தேவதூதர்கள் போலவாம் ;).
அப்படி இந்த இருவரும் ஜோடி கட்டிக் கோடி குவித்த ஒரு வெற்றிப்படம் "பூக்களைப் பறிக்காதே" வி.அழகப்பன் இயக்கத்தில் வந்த இந்தப் படத்தில் வரும் "பூக்களைத் தான் பறிக்காதீங்க காதலைத் தான் முறிக்காதீங்க" பாடல் அந்தக் காலத்துக் காதலர்களின் தேவாரம், திருவாசகம் எனலாம்.
எஸ்.பி.பி , ஜானகி குரல்களில் "மாலை எனை வாட்டுது மணநாளை மனம் தேடுது" இந்தப் பாடலைக் கேட்டுக் கிறங்காதவர் நிச்சயம் காதலுக்கு எதிரியாகத் தான் இருப்பார்கள். இடையிலே வரும் "விழி வாசல் தேடி" என்று வரும் அடிகளுக்கு ஒரு சங்கதி போட்டிருப்பார் டி.ஆர் அதை நான் சொல்லக்கூடாது நீங்கள் தான் கேட்டு அனுபவிக்கணும்.




"மூங்கில் காட்டோரம் குழலின் நாதம் நான் கேட்கிறேன்" ஒரு பாட்டைத் தேடி இணையம் வராத காலத்தில் கொழும்பில் உள்ள ரெக்கோடிங் பார் எல்லாம் அலையவைத்ததென்றால் அது இந்தப் பாட்டுக்குத் தான், கடைசியில் வெள்ளவத்தையில் ஸ்ரூடியோ சாயாவுக்குப் பக்கத்தில் இருந்த Finaz Music Corner தான் அருள்பாலித்தது. ஆகாசவாணி எனக்கு அறிமுகப்படுத்திய பாடல்களில் "பூக்கள் விடும் தூது" படப்பாடல்கள் மறக்கமுடியாது. இந்தப் படத்தின் பாடல்கள் எப்பவாது இருந்துவிட்டு ஏதோ ஒரு தருணத்தில் ஆசையாகக் கேட்கவென்று வைத்திருக்கும் பட்டியலில் இருப்பவை. ஒன்றல்ல இரண்டு பாடல்களை இப்போது உங்களுக்காகத் தருகின்றேன்.
மனோ, சித்ரா பாடும் "மூங்கில் காட்டோரம் குழலின் நாதம் நான் கேட்கிறேன்"



கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் "கதிரவனைப் பார்த்து காலை விடும் தூது வண்டுகளைப் பார்த்து பூக்கள் விடும் தூது"



சிவாஜி, சத்யராஜ், பாண்டியராஜன் என்று அந்தக்காலத்தின் பெரும் நட்சத்திரங்கள் ஒன்று சேரும் படம். இந்தப் படத்தின் இயக்குனர் ஜகந்நாதன் ஏற்கனவே இசைஞானியோடு வெள்ளை ரோஜாவில் இணைந்து அட்டகாசமான பாட்டுக்களை அள்ளியவர். இருந்த போதும் இந்தப் பெரும் கூட்டணியில் இசைக்கு அவர் மனம் இசைந்தது டி.ராஜேந்தருக்குத் தான். இந்தப் படத்தில் கே.ஜே.ஜேசுதாஸ், மலேசியா வாசுதேவன் பாடும் "தேவன் கோயில் தீபமே" பாடல் சோர்ந்து போயிருக்கும் போது ஒத்தடமாகப் பலதடவை எனக்குப் பயன்பட்டிருக்கிறது, உங்களுக்கு?



பூக்களைப் பறிக்காதீர்கள் வெற்றியில் அதே இயக்குனர் வி.அழகப்பன் பூ செண்டிமெண்டோடு தலைப்பு வைத்து எடுத்த படம் "பூப்பூவாப் பூத்திருக்கு" யாழ்ப்பாணத்தின் பெருமை மிகு சினிமா நினைவுகளைக் கொடுத்த குட்டி தியேட்டர் லிடோவில் ஓடிய கடைசிப்படம் இதுதான். அதற்குப் பின்னர் லிடோவின் நிலை கடந்த இருபது வருஷங்களில் அந்த நாளில் படம் பார்த்தவர்களில் மனங்களில் தான் வீற்றிருக்கின்றது. "வாசம் சிந்தும் வண்ணச்சோலை" என்று வாணி ஜெயராம் பாடி வரும் அழகான பாட்டு ஒருபுறம், "எங்கப்பா வாங்கித் தந்த குதிர அதில நானும் போகப்போறேன் மதுர" என்று குட்டீஸ் பாடும் பாட்டு என்று இன்னொரு புறம் இசைபரவ, "பூப்பூத்த செடியைக் காணோம் வித போட்ட நானோ பாவம்" என்று ஜெயச்சந்திரன் பாடும் பாடல் படத்தின் அச்சாணி எனலாம்.



பிரமாண்டமான படங்களைக் கொடுத்து வரும் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் பிரபல மசாலா இயக்குனர் ராஜசேகர் இயக்கி விஜயகாந்த் ரூபிணி ஜோடி நடித்த படம் "கூலிக்காரன்".
"குத்துவிளக்கக குலமகளாக நீ வந்த நேரம்" என்று எஸ்பிபி, ஜானகி பாடும் பாடல் எங்களூர்க் கல்யாண வீடுகளிலும், கல்யாண வீடியோ கசெட்டிலும் தவறாது இடம்பிடித்த பாட்டு. இப்போது அந்தக் கல்யாணத்தம்பதிகளின் பிள்ளைகளே கல்யாண வயதைத் தொட்டிருக்கும் வேளை பசுமையான நினைவுகளில் "குத்துவிளக்காகக் குலமகளாக நீ வந்த நேரம்"



டி.ராஜேந்தர் இசையமைப்பாளராகப் பணியாற்றிய படங்கள் பிரபு நடித்த "இவர்கள் வருங்காலத்தூண்கள்" மற்றும் பாண்டியராஜன் நடித்த ஆயுசு நூறு என்று நீளும், ஆனால் இந்தப் பதிவுக்கு இந்த முத்திரைகளே போதும் என்று நினைக்கிறேன், இன்னொரு பதிவில் கவிஞர் டி.ராஜேந்தரோடு.

நினைவென்னும் காற்றினிலே மனமென்னும் கதவாட
தென்றலென வருகை தரும் கனவுகளே
விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்
பார்வை நாடகம் அரங்கில் ஏறுதாம்