Pages

Saturday, May 28, 2011

மானேஜர் மாதவன் இல்லாத அஞ்சலி அப்பார்ட்மெண்ட்ஸ்


ரயிலில் என் அலுவலகத்துக்குப் போகும் போதும், திரும்பி வரும் போதும் இன்னபிற வேலைகளைச் செய்யும் போதும் உலகவானொலிகளைக் காதுக்குள் ஒலிக்கவிடுவது என் வழக்கம். ஒவ்வொரு வானொலியிலும் இருந்து தேர்ந்தெடுத்த நிகழ்ச்சிகளைக் கேட்க ஏதுவாக வைத்திருக்கின்றேன். அப்படிச் சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகமானது தான் சென்னை ஹலோ எஃப் எம் இல் இடம்பெறும் "அஞ்சலி அப்பார்ட்மெண்ட்ஸ்". அந்த நிகழ்ச்சியை நான் தேர்ந்தெடுத்துக் கேட்கக் காரணமே அதில் வரும் குறு நாடக வடிவில் ஓடும் நகைச்சுவைப் பகுதிகள். ஒவ்வொரு பத்து நிமிட இடைவெளியில் வரும் அந்த நாடக அங்கத்தில் இடம்பெறுவது இதுதான்.

ஓரங்க நாடகமாக அரங்கேறும் அஞ்சலி அப்பாட்மெண்ட்ஸ் இன் மேனேஜர் மாதவன் ஒவ்வொரு அங்கத்திலும், அந்த அப்பார்ட்மெண்ட் செக்கரட்ரி பெண்ணோடு வம்பளத்து வசமாக மாட்டிக் கொள்ளுவார்.
ஒருமுறை அஞ்சலி அப்பார்ட்மெண்டில் இருக்கும் ப்ளாட் ஒன்றில் இருக்கும் மலையாளப் பெண்ணிடம் மலையாளம் கற்றுக் கொண்டு பேசுகிறேன் பேர்வழி என்று சொதப்புவதும், இன்னொரு முறை பொய் சொல்லித் தன் கிராமத்துக்குப் போக லீவு கேட்டு மாட்டிக் கொள்வதும், இன்னொரு சந்தர்ப்பத்த்தில் பக்கத்து ப்ளாட்களில் ஓசிச் சமையலை ருசி பார்க்க ஐடியா போட்டுக் குட்டு வாங்குவதும், பிறிதொருமுறை அப்பாட்மெண்டின் கணக்குப் புத்தகங்களைப் பழைய பேப்பருக்குப் போட்டு தப்புக் கணக்குப் போடுவதும் என்று இப்படியான அப்பார்ட்மெண்ட் சூழலை மையப்படுத்திய நகைச்சுவை ஓரங்க நாடகங்களாக அவை இருக்கும். ஒவ்வொரு அங்கம் முடிவில் மேனேஜர் மாதவன் எடுத்துக் கொண்ட சமாச்சாரத்தை அடியொற்றிய திரையிசைப்பாடல் ஒன்று முத்தாய்ப்பாய் முடிக்கும். ஒவ்வ்வொரு நிகழ்ச்சியிலும் பல அங்கங்கள் இருக்கும் இடையிடையிடையே பாடல்களோடு.

தனக்கே உரிய கிராமியம் கலந்த குரலில் நைச்சியமாகப் பேசி மற்றவரை நம்ப வைக்க இவர் பண்ணும் அட்டகாசங்களைக் கேட்டுச் சிரிக்காதவர் இல்லை என்பேன். மானேஜர் மாதவன் யார் என்றே தெரியாத நிலையில் அவருக்கென்ற கற்பனை உருவை மனதில் பதித்து இது நாள் வரை அவரைக் காதுக்குள் ரசித்து வந்தேன். ஆனால் இப்போது உண்மைத் தமிழன் அண்ணாச்சியின் இந்தப் பதிவைப் பார்த்ததும் உண்மையில் கலங்கிப் போனேன். நான் வானொலி நிகழ்ச்சி செய்துகொண்டிருக்கும் போதே நான் ஆத்மார்த்தமாக நேசித்த வானொலிக் கலைஞரின் இழப்பைக் கேட்பது இன்னொரு துயரம். இனி எனக்கான வானொலி நிகழ்ச்சிகளில் ஒன்று இல்லாமல் போகின்றது மானேஜர் மாதவன் என்ற பாத்திரம் யார் என்று தெரிகின்ற போது இனி அவர் இல்லை என்ற உண்மை வலிக்கின்றது. மானேஜர் மாதவன் என்ற கோபால் அண்ணனுக்கு என் ஆழ்ந்த அஞ்சலியைப் பதிவாக்குகிறேன்.

புகைப்படம் நன்றி: உண்மைத்தமிழன் வலைப்பதிவு

4 comments:

  1. வருத்தமான செய்தி. என்னுடைய அஞ்சலிகள்.

    ReplyDelete
  2. உண்மைத் தமிழன் பதிவின் இணைப்பிலிருந்து இங்கே வந்தேன்.

    எனது அனுதாபங்களை பகிர்கிறேன்.

    ReplyDelete
  3. பலத்த ரசிகன் கோபாலின்..
    அருமையான நிகழ்ச்சி வழங்குனர்..
    நம்மளை எல்லாம் எத்தனையி தடவை சிரிக்க வைத்தவர்..
    ஆத்த்மாசாந்தி அடையட்டும் ..

    ReplyDelete