Pages

Monday, January 31, 2011

"பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்" - பாடல் பிறந்த கதை

கவிஞர் முத்துலிங்கத்துடனான என் வானொலிப் பேட்டியின் ஒரு பகுதியை முன்னர் தந்திருந்தேன். தொடரின் அடுத்த பகுதியில் "பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்" பாடல் பிறந்த கதையைச் சொல்கிறார் கவிஞர் முத்துலிங்கம்.




பொன்மனச் செம்மல் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களது வழிகாட்டலிலே நல்லதொரு அங்கீகாரம் உங்களுக்குக் கிடைத்திருக்கின்றது. அவருடைய ஆட்சிக்காலத்தில் அரசவைக் கவிஞராகவும் திகழ்ந்திருந்தீர்கள், எம்.ஜி.ஆர் அவர்களுடனான அறிமுகம் உங்களுக்கு எப்படி அமைந்திருந்தது?


நான் அப்போது அலையோசை பத்திரிகையில் இருந்தேன். நான் அடிப்படையிலேயே எம்.ஜி.ஆர் ரசிகன். அப்போது அவர் கட்சி ஆரம்பித்திருந்த நேரம் , பேச்சாளனாகவும் இருந்தேன். பத்திரிகைப் பேட்டிக்காக நான் அப்போது அவரைச் சந்திப்பேன். அதற்கு முன்னரேயே நான் சினிமாவில் பாட்டு எழுதிட்டேன். பின்னர் அலையோசை பத்திரிகை எம்.ஜி.ஆருக்கு எதிரான செய்திகளை வெளியிட்டதால் அந்தப் பத்திரிகையில் இருந்து விலகினேன். அந்த நேரம் அவரின் அலுவலத்துக்குச் சென்றபோது,
"நீங்க பத்திரிகையை விட்டு விலகிட்டிங்களாமே, கொஞ்சம் பணம் கொடுக்கிறேன் வாங்கிக்குங்க" என்று சொன்னார்.
"இல்லை பணம் வேண்டாம் தலைவரே அதுக்குப் பதிலா வேலை கொடுங்க" என்றேன்.
"வேலை கொடுக்கும் போது கொடுக்கிறேன், இப்போ வாங்கிக்க" என்றார்.
"இல்லை வேண்டாம்" என்று மறுத்திட்டேன். அதுக்கப்புறம் தான் அவர் தன்னோட படங்களுக்குத் தொடர்ந்து பாட்டு எழுத வாய்ப்புக் கொடுத்தார். அப்படி அவருக்காக எழுதிய முதற்படம் உழைக்கும் கரங்கள்.

உழைக்கும் கரங்கள் திரையில் எம்.ஜி.ஆருக்காக முத்துலிங்க எழுதிய முதற்பாட்டு
"கந்தனுக்கு மாலையிட்டாள்" - பாடியவர் வாணி ஜெயராம்


உழைக்கும் கரங்கள், ஊருக்கு உழைப்பவன் என்று எம்.ஜி.ஆரின் பல படங்களுக்கு எழுதியிருக்கீங்க, ஊருக்கு உழைப்பவன் படத்தில் வரும் "பிள்ளைத் தமிழ் பாடுகின்றேன்" அந்த அருமையான பாடல் பிறந்ததற்குப் பின்னால் சுவாரஸ்யமான தகவல் உண்டா?

அப்போல்லாம் எனக்கு ஒரே இடத்தில் உட்கார்ந்து எழுத வராது, மியூசிக் டைரக்டர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், டைரக்டர் எல்லாரும் ஒரே இடத்தில் இருந்து தான் பாட்டு எழுதுவோம். இப்பல்லாம் கேசட் கொடுத்து எழுதச் சொல்லிடுவாங்க.

முதலில் அந்தப் பாட்டின் சிச்சுவேஷனைச் சொல்லிடுறேன். எம்.ஜி.ஆர் பெண்களுக்குக் கணவராக நடிப்பார். அதாவது ஒரு பெண்ணின் உண்மையான கணவன், இன்னொரு பெண்ணுக்குக் கணவராக நடிக்க வேண்டிய சூழ்நிலை. அப்படிப்பட்ட நேரத்தில் சொந்த மனைவிக்குப் பிறந்த குழந்தை இறந்து போகும். அந்தப் பிள்ளையை அடக்கம் பன்ணி விட்டு இன்னொரு பெண்ணுக்குக் கணவராக நடிப்பாரே அந்த வீட்டுக்கு வருவார். அப்போது அந்தப் பெண்ணின் குழந்தைக்குப் பிறந்த நாள். அந்தக் குழந்தையை வாழ்த்திப் பாடச் சொல்லிக் கேட்பாங்க. தன்னுடைய சொந்தக் குழந்தை இறந்து போனதை நினைத்துப் பாடுவாரா, இல்லை இந்தக் குழந்தைக்குப் பிறந்த நாள் என்று சொல்லி வாழ்த்திப் பாடுவாரா அப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சூழ்நிலை, அதை மனதில் வைத்துக் கொண்டு இரண்டும் கலந்து வருவது போல் பாடல் வரவேண்டும்.
அதனால நான் முதலில் எழுதினேன்,

"நெஞ்சுக்குள்ளே அன்பு என்னும் கடல் இருக்குது
நினைக்கும் போது பாசம் என்னும் அலையடிக்குது
என் கண்ணுக்குள்ளே குழந்தை என்னும் மலர் சிரிக்குது
என் கவிதைக்குள்ளே மழலை ஒன்று குரல் கொடுக்குது
எது நடக்கும் எது நடக்காது இது எவருக்கும் தெரியாது
எது கிடைக்கும் எது கிடைக்காது இது இறைவனுக்கும் புரியாது"

அப்படி ஒரு பல்லவி எழுதினேன், மியூசிக் டைரக்டர் உட்பட எல்லாருக்கும் பிடிச்சுப் போச்சு. ஆனால் எம்.ஜி.ஆரிடம் கொண்டு போகும் போது மூணு நாலு பல்லவி எழுதி அதுக்குத் தொடர்பா வர்ர மாதிரி சரணம் எழுதியும் காட்டணும். அதனால இரண்டு மூன்று பல்லவி எழுதிட்டேன்.
"ஆட்டி வைத்த ஊஞ்சல் அது முன்னும் பின்னும் ஆடும்" அப்படின்னு இன்னொரு பல்லவி.
இன்னும் மூணு பல்லவி வேணும் என்று எழுதச் சொன்னாங்க. நான் அதே இடத்தில் இருந்தா கற்பனை வராது வெளியே கொஞ்சம் நடந்து போட்டு வரேன் என்று மியூசிக் டைரக்டர் எம்.எஸ்.விஸ்வநாதன் அண்ணரிடம் சொல்லிவிட்டு சிவாஜி கணேசன் வீடு இருக்கும் தெற்கு போக்கு ரோடு இருக்கும் பக்கமா நடந்து போயிட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்தேன். அப்பவும் எனக்குச் சரியா ஒண்ணும் வரல. அந்த நேரம் எனக்குப் பக்கத்தில் கார் ஒன்று வந்து நின்றது சடன் பிரேக் போட்டு. காரின் உள்ளே மறைந்த கவர்ச்சி வில்லன் கண்ணன், நடிகர் ஐசரி வேலன் உள்ளே இருந்தாங்க.

"உங்க பிள்ளைத் தமிழ் நன்றாக இருந்தது என்று தலைவர் கிட்ட (எம்.ஜி.ஆர்) பாவலர் முத்துசாமி சொல்லிக்கிட்டிருந்தாரு. முத்துசாமி தி.மு.க காலத்தில் அமைச்சரா இருந்தவரு பின்னர் அண்ணா தி.மு.க வைச் சேர்ந்திருந்தார். அவர் இப்படி உங்கள் பிள்ளைத் தமிழ் நன்றாக இருந்ததாக தலைவரிடம் சொன்னதாக அவர் சொல்லவும் எனக்கு உடனே பொறி தட்டியது. நான் எம்.ஜி.ஆரைப் பிள்ளையாக வைத்துத் தான் எம்.ஜி.ஆர் பிள்ளைத் தமிழ்ன்னு ஒரு குறுங்காப்பியம் எழுதியிருந்தேன். இங்கேயும் எம்.ஜி.ஆர் ஒரு பிள்ளைக்காகத் தான் பாடுவார். அப்படிப் பிள்ளைக்காகப் பாடுவதாக
"பிள்ளைத் தமிழ் பாடுகிறேன் - ஒரு
பிள்ளைக்காகப் பாடுகிறேன்
மல்லிகை போல் மனதில் வாழும்
மழலைக்காக பாடுகிறேன்
நான் பாடுகிறேன்

என்று பல்லவியை எழுதி விட்டு விஸ்வநாதன் அண்ணனுக்கு பாடிக்காண்பிக்க அதுக்கு ட்யூன் போட்டார்.அதுக்கு லிங்கா வரக்கூடியமாதிரி சரணமும் அமைத்துப் பாடலாக்கி அதை எம்.ஜி.ஆரிடம் காண்பித்தோம். அப்போ சத்யா ஸ்டூடியோவில் நவரத்தினம் பட ஷூட்டிங் நடந்துக்கிருந்துச்சு. அப்போது டைரக்டர் ஏ.பி.நாகராஜன், டைரக்டர் நீலகண்டன், டைரக்டர் கே.சங்கர் எல்லாரும் இருந்தாங்க. அப்போது போட்டுக் காமிச்சோம். அப்போது ஏ.பி. நாகராஜன் இந்த சிச்சுவேஷனுக்கு இந்தப் பாட்டு நல்லாயிருக்கேன்னு "நெஞ்சுக்குள்ளே அன்பு" என்று தொடங்குற பாட்டைச் சொன்னார். இன்னொருத்தர் "ஆட்டி வைத்த ஊஞ்சல்" அப்படித் தொடங்குற பாட்டு நல்லா இருக்குன்னு சொன்னார். எல்லாத்தையும் கேட்ட எம்.ஜி.ஆர் "நீங்க சொல்றதெல்லாம் நல்லாயிருக்கு ஆனா பிள்ளைத் தமிழ் என்று தொடங்கும் பாட்டுத் தான் பாப்புலராகும் ரொம்ப கேட்சிங்கா இருக்கு" என்று சொன்னார். அதாவது சினிமாத் துறையில் எல்லா நுணுக்கங்களையும் எம்ஜிஆர் புரிந்தவர் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு.

"பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்" - ஊருக்கு உழைப்பவன் திரைக்காக கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் பாடல்

3 comments:

கோபிநாத் said...

தல அருமையான தகவல்களுடன் கலக்கல் தொகுப்பு தல ;)

கவிஞர் முத்துலிங்கம் அவர்களுக்கு நன்றிகள் பல ;)

S Maharajan said...

அருமை தல

கானா பிரபா said...

வருகைக்கு நன்றி தல கோபி, மகராஜன்