Pages

Tuesday, December 28, 2010

இயக்குனர் ஆர்.பாண்டியராஜனுடன் என் வானொலிப்பேட்டி

சினிமா ரசிகனாகப் பலமுறை பார்த்துச் சலிக்காத விருந்து ஆண்பாவம் திரைப்படம் அத்தோடு அந்தப் படத்தின் பின்னணி இசைப்பிரிப்பைச் செய்த போது இசைஞானி இளையராஜாவின் சாகித்யத்தை வியந்து ரசித்த வாய்ப்பையும் என் றேடியோஸ்பதி வலைப்பதிவு மூலம் கிட்டியது. அந்த வகையில் ஆண்பாவம் திரைப்படம் வெளிவந்து 25 ஆண்டுகள் நிறைவாகும் இந்த ஆண்டு அது குறித்த ஒரு விழா ஏற்பாடுகள் நடைபெறுவதாகச் செய்தி அறிந்த போது ஆண்பாவம் திரைப்படத்தின் பின்னணி இசைக்கோர்ப்பை மீண்டும் சில மெருகேற்றல்களோடு கடந்த ஒக்டோபரில் கொடுத்திருந்தேன். "ஆண்பாவம்" - 25 ஆவது ஆண்டு சிறப்புப் பதிவு



பின்னர் ஆண்பாவம் திரைப்படத்தின் திரைக்கதை நூல் வெளியீட்டு விழாவும் 25 ஆண்டு விழாவும் சிறப்பாக நடந்ததை அறிந்து நான் இயங்கும் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காச் சிறப்பானதொரு வானொலிப்பேட்டியை ஆண்பாவம் இயக்குனர் திரு.ஆர்.பாண்டியராஜன் அவர்களை வைத்துச் செய்ய வேண்டும் என்ற முனைப்பு ஏற்பட்ட போது அவரின் தொலைபேசி இலக்கத்தை ட்விட்டர் வாயிலாக வழங்கியிருந்தார் நண்பர் கே.ராகவன் அவருக்கும் இந்தவேளை என் நன்றிகள்.

ஒரு இலேசான தயக்கத்தோடு இயக்குனர் பாண்டியராஜனுக்கு அழைத்தேன் என் பேட்டி பற்றி அவரிடம் சொன்னேன். "அரை மணி நேரத்தில் செய்வோமா" என்றார், "இல்ல சார் சாவகாசமா நாளைக்கே பண்ணுவோம்" என்று நான் கேட்டபோது சம்மதித்து அடுத்த நாள் குறித்த நேரத்தில் காத்திருந்து ஒரு அழகான பேட்டியைத் தந்தார் அவர். ஆண்பாவம் 25 ஆண்டு நிகழ்வுப்படங்களையும் அனுப்பி வைத்தார். தமிழ்த்திரையுலக வரலாற்றில் ஒரு திரைப்படத்தின் 25 ஆண்டு விழாவைக் கொண்டாடி அதன் திரைக்கதையை வெளியிடுவது இதுவே முதன்முறை.

பேட்டி முடிவில் என்னுடைய 12 வருட வானொலி வாழ்வில், ஈகோ இல்லாது வெளிப்படையாகப் பேசக்கூடிய இன்னொரு நபராக பாண்டியராஜன் தன் பேட்டியில் பேசிய பாங்கைக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தேன்.அதற்கு அவர் நாகரீகமான பண்பான பேட்டியை அமைத்தமைக்கும் நன்றி சொல்லி நன்றி என்ற வார்த்தைக்கு மேல் இன்னொரு வார்த்தை தமிழில் கண்டுபிடித்தால் அதை நான் மீண்டும் சொல்வேன் என்று சொல்லி நிறைவாக்கினார் இந்தப் பேட்டியை.

வானொலியில் இரண்டு முறை ஒலிபரப்பானபோது பல நேயர்கள் சிலாகித்துப் பேசினார்கள் அது தான் இந்தப் பேட்டியின் வெற்றி. இதோ அந்தப் பேட்டியின் ஒலி வடிவமும் எழுத்து வடிவம் சில சுருக்கங்களோடும்

பேட்டியைக் கேட்க




To Download


வணக்கம் திரு பாண்டியராஜன் அவர்களே!

அவுஸ்திரேலியாவில் இருந்து அழைக்கும் பெரிய உள்ளங்களுக்கு இந்த சின்னவனின் வணக்கங்கள்

முதலில் 25 ஆண்டுகளுக்கு மேலாகக் கலைத்துறையில் இருக்கும் உங்களுக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ரொம்ப நன்றி, 25 வருஷங்கிறது எண்ணிக்கையே தவிர நான் எப்பவுமே பின்னோக்கிப் பார்ப்பதில்லை, போகும் வழி தூரம், இன்னும் நிறைய இருக்கு. ஆனால் அப்பப்போ ஒரு பிறந்த நாள் விழா மாதிரி இந்த "ஆண்பாவம்" படத்துக்கு ஒரு பிறந்த நாள் விழாக் கொண்டாடிய உணர்வு தான்.


பாண்டியராஜன் என்றதொரு கலைஞன் திரைப்பட இயக்குனராக, நடிகராக எப்படி வந்தார், அவருடைய அறிமுகம் எப்படி இருந்தது?

பள்ளிப்படிப்புக் காலத்திலேயே இசை மீது எனக்கு ஆர்வம் இருந்தது. குலதெய்வம் ராஜகோபால் அவர்களுடைய மகன்கள் சம்பத், செல்வம். குலதெய்வம் ராஜகோபால் வில்லுப்பாட்டு பண்ணுவாரு அந்த நிகழ்ச்சி இடைவேளையின் போது மகன்கள் இருவரும் ஒருவர் கிட்டாரிலும் இன்னொருவர் ஆர்மோனியத்திலும் என்னடி ராக்கம்மா பாட்டை வாசிப்பாங்க. அதுக்கு பிரமாதமான கைதட்டல் இருந்தது. அதைப்பார்க்கும் போது ஏன் நாமளும் கைதட்டல் வாங்கக் கூடாது என்று ஒரு உத்வேகம். அதுக்கப்பறம் அப்பாவிடம் சென்று "அப்பா! நான் ஆர்மோனியம் கத்துக்கணும்"னு சொன்னேன். பல்லவன் போக்குவரத்துக்கழக ஓட்டுனரா இருந்த என்னோட அப்பா, நமக்கெதுக்குடா இதெல்லாம் என்று கேட்காம என்னை மியூசிக் ஸ்கூ ல்லல்ல சேர்த்து விட்டார். அங்கே ஆர்மோனியம் கத்துக்கிற வாய்ப்பு இல்லை. வயலின் தான் கத்துக்க முடிஞ்சது. தமிழிசைக் கல்லூரியில் வயலின் கத்துக்கிட்டேன். வயலின் கற்றுக்கொள்ளும் போது நிறைய நாடக நண்பர்கள் நட்புக் கிடைத்தது. குறிப்பா சைதாப்பேட்டை ஶ்ரீராம் அவர்களின் நட்புக் கிடைத்தபோது கொஞ்சம் கொஞ்சமா நாடகங்களில் நடிக்கும் வாய்ப்புக் கிடைச்சது. என்.சி.சியில் நான் இருந்த போது காம்ப்ல ஒரு நாடகம் போட்டேன். அந்த காம்ப்ல இருந்த 64 பள்ளிக்கூடங்களிலேயே இது தான் சிறந்த நாடகமா தேர்ந்தெடுக்கப்பட்டு என்னோட உயர் நிலைப்பள்ளிக்கு ரோலிங் கப் கிடைச்சது. அதுதான் முதன் முறை நான் ஜனங்களால் கைதட்டப்படுவேன் என்ற நம்பிக்கையை ஊட்டியது.

அதற்குப் பின்

அதுக்கப்புறம் சினிமா வாய்ப்புக் கேட்டு போட்டோஸ் எல்லாம் எடுத்திட்டுப் போவேன். எங்கூட இன்னும் பல நடிகர்கள் வாய்ப்புக் கேட்டு வந்திருப்பாங்க. அவங்க உருவத்தை எல்லாம் பார்ப்பேன். அவங்க உயரம், கலரு அவங்களோட ஆஜானுபாகுவான தோற்றத்தை எல்லாம் பார்த்து இவங்களும் வாய்ப்புக் கேட்டு நாமளும் வாய்ப்புக் கேட்ட மரியாதை இருக்காதுன்னுட்டு அதுக்கப்புறம் உதவி இயக்குனரா போயிடலாம் என்று அதுக்கான முயற்சியில் இறங்கினேன். அப்போது வசனகர்த்தா தூயவனிடம் ஆபீஸ் பாய் ஆக வேலைக்குச் சேர்ந்தேன். அங்கே வந்து திரு.பாக்யராஜ் அவர்கள் வந்தாங்க. விடியும் வரை காத்திரு படத்தின் கதை விவாதம் அப்போது அங்கே நடக்கும். அப்போ டிபன், பஜ்ஜி, போண்டா இதெல்லாம் வாங்கி வச்சுட்டு நாம வெளியே போயிடணும். அதுக்கப்புறமாத் தான் அவங்க கதை பேசுவாங்க. கதை விவாதம் எப்படி நடக்கிறது என்பதை அறிய அந்த அறைக்கதவிடுக்கில் ஒரு சின்னக் கல்லை வச்சிடுவேன். அந்தக் கதவிடுக்கு வழியா கேட்டா கதை விவாதங்களை கத்துக்க ஆரம்பிச்சேன். அதுக்கப்புற்அம் என் குருநாதர் பாக்யராஜிடம் மூன்று நான்கு படங்களுக்கு வாய்ப்புக் கேட்டு கடைசியில் மெளன கீதங்கள் ஷீட்டிங் நடக்கும் போது அவரின் உதவி இயக்குனர்கள் என் நண்பர்களாயிட்ட காரணத்தால் கூடப்போனேன்.
"உன்னை யாருய்யா கிளாப் அடிக்கச் சொன்னது" என்று அவர் கேட்க
நான் அழுது "சார் எனக்கு அப்பா இல்லை சார், எனக்கு சம்பளம் கூடத் தராட்டா பரவாயில்லை வேலை கத்துக்கொடுங்கன்னு கேட்டேன். அவர் உதவி இயக்குனரா ஏற்றுக் கொண்ட பின் டார்லிங் டார்லிங் டார்லிங், தூறல் நின்னு போச்சு இப்படிப் பல படங்களில் அவரோடு பணியாற்றினேன்.

ஒரு உதவி இயக்குனராக, நீங்கள் உங்கள் குருநாதர் பாக்யராஜிடம் கற்றுக் கொண்டது என்ன?

எல்லாமே, இன்னிக்கு நான் உங்ககிட்ட பேட்டி கொடுக்கிறதா இருந்தாக் கூட அதுகூட அவர் மூலம் தான் கற்றேன்.அதுக்கு முன்னாடி நான் சினிமாவின் ரசிகன் அவ்வளவு தான். சினிமாவை எப்படி எடுப்பது, சினிமா உலகில் எப்படி நடப்பது எல்லாமே அவர்கிட்ட கற்றுக்கிட்டேன். அதுக்கப்புறமா கொஞ்சம் கொஞ்சமா நான் அதை மெருகேற்றிக்கிட்டேன். நான் கற்றுக் கொண்டதைத் தவிர நான் பார்த்த படங்கள், பார்த்த மனிதர்கள், பார்த்த சம்பவங்கள் இதையெல்லாம் என் மனசில் கோர்த்துக் கோர்த்து என்னை நான் வளர்த்துக் கொண்டேன்.

உங்களது இயக்கத்தில் முதலில் வெளியான திரைப்படம் "கன்னிராசி" அந்தப் படம் முழுவதுமே கலகலப்பாக இருக்கும் ஆனால் அந்தப் படத்தின் இறுதி முடிவு சோகமாக அமைந்தது படத்தின் வெற்றியைப் பாதித்ததா?

அந்தப் படம் வெற்றிப்படம் தான், ஆனால் நீங்க கேட்டது அருமையான கேள்வி. அந்த க்ளைமாக்ஸ் அதுவல்ல. செவ்வாய் தோஷமே இல்லை என்று பிரபும் ரேவதியும் கல்யாணம் பண்ணிப்பாங்க. கல்யாணம் பண்ண பிறகு அவங்களுடய வயோதிப தோற்றம் காண்பித்து அவங்களுடைய பிள்ளைகள் சின்ன வயசு பிரபு, சின்ன வயசு ரேவதி ஸ்கூலுக்குப் போவங்க இப்படித் தான் முடிக்க இருந்தேன். ஆனால் முதன்முதலில் ப்ரொடியூசரிடம் சொல்லும் போது அந்த சோக க்ளைமாக்ஸையே சொல்லிட்டேன். ரேவதி செத்துப்போன மாதிரித் தான் இந்தக் கதையை விநியோகஸ்தர்களிடம் சொல்லிட்டேன் நீ போய் திடீர்னு மாத்துறியே அப்படின்னார். வியாபாரத்தில் பிரச்சனை வரக்கூடாதுங்கிறதுக்காகத் தான் இந்த க்ளைமாக்ஸை எடுத்து ஆனால் கடைசி ஷாட்டில் போட்டிருப்பேன் "இந்த முடிவு நிழலுக்கான முடிவே தவிர நிஜத்தில் இதைப் பின்பற்றாதீர்கள்" என்று முடிச்சிருப்பேன்.

கன்னிராசி படத்தைத் தொடர்ந்து உங்களுக்கு மிகப்பெரிய திருப்புமுனையைக் கொடுத்த படம் ஆண்பாவம். அந்தத் திரைப்படம் 25 வருஷங்கள் கழித்தும் இன்றும் பலராலும் ரசிக்கப்படுகின்ற ஒரு கலைப்படைப்பு. அந்த வகையில் இந்தத் திரைப்படத்தின் 25 ஆண்டு சிறப்பு விழாவையும் அண்மையில் நடத்தியிருக்கின்றீர்கள். இந்த விழாவைப் பற்றிச் சொல்லுங்களேன்?

இந்தப் படத்துக்கு 25 ஆண்டு விழா எடுக்கலாம்னு திடீர்னு தோணிச்சு, அப்புறமா இது தேவையான்னு எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். அதுக்கப்புறம் இந்தப் பட விழா முயற்சிகள் எடுக்கும் போது சிலர் முகம் சுருங்கிச்சு, சிலர் முக ஆச்சரியத்தில் விரிஞ்சுச்சு. எப்பவுமே முன் வச்ச காலைப் பின் வைக்கக்கூடாதுன்னு ஆரம்பிச்சேன். அந்த விழாவில் "ஆண்பாவம்" படத்தின் திரைக்கதை நூலை வெளியிட்டேன். அதில் என்னுரையில் "ஆண்பாவம் 25 - இது கொஞ்சம் ஓவரா இல்லை?" இப்படி நானே என்னைக் கேள்விகேட்கிற மாதிரிப் போட்டு, எப்படி நாம வாக்கிங் போறது, ஹெல்த் செக்கப், யோகான்னு உடல் மேல் உள்ள அக்கறையோ அப்படித்தான் கலைமேல் உள்ள அக்கறையாக இந்த ஆண்பாவம் 25.


இந்த விழாவுக்காக இசைஞானி இளையராஜாவைச் சந்தித்த அந்த நெகிழ்வான தருணங்களைப் பற்றியும் செய்திகளூடாக அறிந்தோம்?

அவருக்கு கண்டிப்பா அழைப்புக் கொடுக்கணுங்கிறது என்னுடைய தீர்மானமான எண்ணம். அவர் வீட்டுக்குப் போனேன், அவரில்லை. பத்திரிகையைக் கொடுத்தேன். அது அவருக்குப் போய்ச் சேரும் என்றாலும் நேரடியா அவரைப் பார்த்துக் கொடுக்கணும்னு நினைச்சேன். பிரசாத் ஸ்டூடியோவில் இருக்கிறதா சொன்னாங்க. நேரா அங்கே போனேன், ராஜா அங்கே தனியா தன் அறையில் இருந்தார். அங்கே போனதுமே
"சார்! ஆண்பாவம் 25 ஆண்டு விழா எடுக்கிறேன், அந்தப் படத்தை மக்களிடம் பெரிய அளவில கொண்டு போனதுல உங்க பங்கு பெருசு, எப்படி சார் நன்றி சொல்றது என்று சொல்லி சாஷ்டாங்கமா விழுந்து அவர் பாதத்தைத் தொட்டு வணங்கி எழுந்தேன். என்னையறியாமல் மடமடன்னு என் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.அந்தக் கண்ணீருக்குக் காரணமே இல்லாம அது பாட்டுக்கு கொட்டிடுச்சு. நான் அப்படி அழுததே இல்லை.
அப்போ ராஜா "யோவ் உன்னை எப்பவோ நான் தண்ணி தெளிச்சு விட்டுட்டேன்" அப்படின்னார்.
எனக்கு அதன் அர்த்தம் புரியல. என்ன சார்னு கேட்டேன்
"இல்லைய்யா, நான் ஊர்ல இருந்து அண்ணன் தம்பி கூட வரும் போது "டேய் உன்னை நான் தண்ணி தெளிச்சு விட்டுட்டேன்"னாங்க அந்த வகையில உன்னை நான் தண்ணி தெளிச்சு விட்டுட்டேன்னார். அப்ப தான் எனக்கு நிம்மதி வந்தது. உனக்காச்சும் உதவி இயக்குனரா வச்சு சொல்லிக் கொடுத்தாங்க, எனக்கு யாருய்யா சொல்லிக் கொடுத்தாங்க என்று சொல்லி அவருடைய தாயார் ஒரு ரேடியோவை நானூறு ரூபாய்க்கு விற்று அந்த நானூறு ரூபாயை கொடுத்து எங்களைச் சென்னை அனுப்பி வச்சாங்க. அந்த நானூறு ரூபாயில் ஒரு ஐம்பது ரூபாயாவது கொடுன்னு எங்க அம்மா எங்கிட்டக் கேட்கல அப்படிப்பட்ட தாய்னு அவருடைய நிகழ்வை என்கிட்ட பகிர்ந்துகிட்டார். அந்த நிகழ்வை அவர் என்னிடம் பகிர்ந்து கொள்ளவேண்டிய அவசியமே இல்லை, அதைச் சொல்லும் போது நெகிழ்ந்திட்டேன். அவரோட மனமார்ந்த ஆசிர்வாதம் எனக்கு உண்டு என்று சொன்னார். அது போதும் எனக்கு.

ஆண்பாவம் படத்துக்குப் பெரும் பலமாக இருந்தவை அப்படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் இல்லையா?

நிச்சயமாக, பின்னணி இசை இணையத்தளத்தில் எல்லாம் போட்டிருப்பாங்க (ஆகா ;-) )
இளையராஜாவின் படங்களில் ஆண்பாவம் குறிப்பிடத்தக்க முக்கியமானதொன்று. அந்தப் படத்தின் பூஜைக்கு ஒரு சாங் ரெக்கார்ட் பண்ணணும்னு சொல்லிட்டு அவரிடம் போய்க் கதை சொன்னேன். அப்போது அவருடைய தேதி இல்லாத காரணத்தால், "ஷீட்டிங் ஆரம்பிச்சுடேன்யா முதல்ல"ன்னாரு.
ஷூட்டின் மட்டுமல்ல டப்பிங்கும் முடிச்சுட்டு அவரைப் போய்ப் பார்க்கிறேன். தியேட்டர் சாங் ஒன்று இருக்கும் "இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும்" அப்படி, இதை நானாக ஊகித்த்து அப்படி வரவேணும்னு நினைச்சு ஷூட் பண்ணிட்டேன்.
மீண்டும் அவரைப் போய்ப் பார்க்கும் போது
"என்னய்யா இங்கேயே நிக்கிறாய் ஷுட்டிங் போகலையான்னு"
"ஷீட்டிங் மட்டுமில்ல சார் டப்பிங்கும் முடிச்சிட்டேன்"னு சொன்னேன்
அப்படியான்னு ஆச்சரியப்பட்டு சரி இன்னிக்கே படத்தைப் போடுன்னாரு. சரின்னு அந்த நாள் ஈவினிங்கே படத்தைப் போட்டுக் காமிச்சேன். மறுநாள் காலை ஏழு மணியில இருந்து ஒன்பது மணிக்குள்ள அந்தப் படத்தில் வரும் அத்தனை ட்யூனையும் போட்டுட்டாரு.
ஒன்பது மணிக்கு ரீரிக்கார்டிங் அதுக்கப்புறமா பாடல் பதிவும் பாடல் ஷூட்டிங்கும் இருந்துச்சு.
அந்தப் படத்தின் மீது அவருக்குள்ள ஈடுபாட்டால் உடனேயே ரீரிக்கார்டிங்கை ஆரம்பிச்சிட்டார். அந்தப் படத்தின் ரீரிக்கார்டிங்கைப் பத்தி சொல்லணும்னா எல்லாமே பிரமாதம். நடிகை சீதா அதில் புதுமுகம். அவங்க அறிமுக ஷாட்டில் சாமி கும்பிட்டுட்டு வீடு திரும்பி வர்ரது மாதிரி சீன். நான் ஒரு பத்து ஷாட் எடுத்து வச்சிருந்தேன். ஆனாலும் புதுமுகமாச்சே ரொம்ப நேரம் காமிச்சா நல்லாயிருக்காதுன்னுட்டு ஒரு மூணு ஷாட்டைத் தான் எடுத்தேன்.அதுக்கு அவர் வாசிச்ச பின்னணி இசையைப் பார்த்துட்டு, "சார் சார் நான் இன்னும் சில ஷாட்ஸ் எடுத்திருக்கேன்" என்று சொல்லி மேலும் சில ஷாட்டை இணைத்தேன். அற்புதமான பின்னணி இசை அதுக்கு. ஒரு வசனகர்த்தாவோட வேலையை பின்னணி இசையில் அவர் பண்ணியிருப்பார்.

குறிப்பாக இந்த ஆண்பாவம் படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கு உயிரோட்டமாக ராஜாவின் பின்னணி இசை இருந்தது இல்லையா?

ஆமா, ஆண்பாவம் 25 விழாவில் அந்தப் படத்தில் பணியாற்றிய ஒவ்வொருத்தரைக் கூப்பிடும் போதும் அந்தப் பின்னணி இசையைப் போட்டுத் தான் கூப்பிட்டேன். எங்களை 25 வருஷம் பின்னோக்கிக் கூட்டிப் போனதுன்னு எல்லோரும் நெகிழ்ந்தாங்க. ஆண்பாவம் திரைக்கதை புத்தக வெளியீடே
திடீர்னு "பெட்டி வந்தாச்சு பெட்டி வந்தாச்சு" அப்படின்னு சொல்லி ஒரு படப்பெட்டிக்குள்ளே அந்தத் திரைக்கதை நூலை வச்சு வெளியிடப்பட்டது.

எண்பதுகளின் ஆரம்பத்திலே இந்தப் பின்னணி இசை குறித்த கவனம் அதிகம் இல்லாத வேளையில் ராஜா ஒரு ராஜாங்கமே படைத்திருப்பார், இந்த விஷயத்தில் ஒரு இயக்குனராக உங்களின் பங்களிப்பும் இந்தப் பின்னணி இசை எப்படி வரவேண்டும் என்ற ரீதியில் இருந்ததா?

முழுக்க முழுக்க ராஜா அவர்களுடைய சிந்தனை, செயல், அவருடைய உழைப்புத் தான். ஏன்னா ராஜா அவர்களிடம் அபிப்பிராயம் சொல்லுமளவுக்கு பாண்டியராஜன் இல்லை. காட்சிகளை நான் சில நேரங்களில் அவரிடம் "இப்படி ஒரு காட்சி இருக்கு" என்று சொல்வேனே தவிர இதற்கு இப்படி இசை வேண்டும் என்று நான் கேட்டதேயில்லை. நான் எடுத்த காட்சியை "ஆகா இது இவ்வளவு நல்லாயிருக்கே"ன்னு பிரமித்தது அவருடைய பின்னணி இசைக் கோர்ப்புக்கு அப்புறம் தான். நாம அவரிடம் 60 சதவிகத்தைக் கொடுத்தா அதை 100 சதவிகிதம் ஆக்கிக்கொடுத்திடுவார்.

ஆண்பாவம் படத்தில் நடித்த கொல்லங்குடி கருப்பாயி, தமிழ் சினிமாவுக்கு அந்நியமான ஒரு நபர், அதில் நடித்ததோடு நாட்டுப்புறப்பாடல்களையும் பாடியிருப்பார்

ஆமாமா, அற்புதமான இதயம் அது. அன்பு, வெகுளித்தனம், அப்புறம் என்ன சொல்வது உலகம் அறியாத ஆனா உலகப்புகழ் பெற்றவங்க. என்னைப் பேரன்னு தான் கூப்பிடுவாங்க. நான் ஒரு நிகழ்ச்சியைச் சொல்லணும் ஒருமுறை ஒரு கார் விபத்தில் சிக்கிட்டேன். நான் மருத்துவமனையில் இருந்தப்போ நான் யார் வருவார்கள் என்று எதிர்பார்த்தேனோ அவர்கள் எல்லாம் வரவில்லை. ஆனா கொல்லங்குடி கருப்பாயி நான் இருந்த மருத்துவமனைக்கு வந்து என் ரூம் வாசல் வரைக்கும் வந்தாங்களே தவிர என்னை வந்து பார்க்கல. என் பேரனை பெட்டில் படுத்திருக்கிறமாதிரிப் பார்க்க மாட்டேன் அப்படின்னு நான் டிஸ்சார்ச் ஆகுற வரைக்கும் அந்த வாசலில் இருந்து அழுது என்னைப் பார்த்துக் கட்டியணைச்சு "அப்பா உனக்கு ஒண்ணும் இல்லையே"ன்னு சொல்லிட்டுப் போன அற்புதமான ஜீவன் அது.

என்னுடைய கோபாலா கோபாலா படத்தில் குஷ்புவுக்கு பாட்டியா போட்டிருப்பேன், கபடி கபடி படத்தில் எனக்கு அம்மாவா நடிச்சிருப்பாங்க. எல்லாப்படத்திலும் அவங்களைக் கூப்பிட்டு வந்து நடிக்க வச்சு கெளரவிக்கணும்ங்கிற எண்ணம் எனக்கிருந்தது.

அப்படியான ஒரு புதுமுகத்தை நடிக்க வைக்கும் போது ஏதாவது சுவாரஸ்யமான அனுபவம் ஆண்பாவம் படப்பிடிப்பில் இடம்பெற்றிருக்குமே?

ஆமாம், வி.கே.ராமசாமி அவர்கள் பல தலைமுறை நடிகர்களைக் கண்ட சீனியர். அவரும் கொல்லங்குடி கருப்பாயியும் நடிக்கும் ஒரு காட்சியில் அந்தம்மா ஒரு டயலாக்கை மாத்திச் சொன்னாங்க. நான் சொல்லிக்குடுத்திட்டிருக்கேன்.திடீர்னு வி.கே.ராமசாமி அவர்கள் வந்து "இந்த இடத்துல நீங்க இந்த வசனத்தை விட்டுட்டீங்கம்மா இதை இப்படிப் பேசுங்க" அப்படிச் சொல்லிக் கொடுத்தார். உடனே அந்தம்மா "நீ ஒண்ணும் எங்கிட்ட சொல்லாதே, நீ தான் தப்பு தப்பா பேசுறே" அப்படின்னாங்க. என்னடா இது வி.கே.ஆரை இப்படி சொல்லிட்டாங்களேன்னு நான் அதிர்ச்சியாயிட்டேன். அதுக்கு வி.கே.ஆர் ஐயா ஒரு சிரிப்பு சிரிச்சங்க பாருங்க, அதாவது சந்தோஷத்தின் உச்சத்தில் சிரிச்சாரு. என்னை வந்து இப்படிச் சொன்னாங்களேனு கோபம் வராம அந்த எதார்த்தத்தை ரசிச்சாங்க. இப்படிப் பல சம்பவங்கள்.


இந்தப் படத்தில் கொல்லங்குடி கருப்பாயி அவர்களின் பாடற்திறனைக் கண்டறிந்து அவரைப் பாடவைத்தவர் யார்?

அவங்க பாடகியா இருந்த பிற்பாடு தான் நான் கூப்பிட்டேன். அவங்க அப்போது தொலைக்காட்சியில் எல்லாம் பாடுவாங்க. ஒரு பெரிய ரகசியம் சொல்றேன். ஒருமுறை அவங்க பாடல் நிகழ்ச்சியில் ஒரு புதுமை பண்ணலாம்னுட்டு அவங்க நாட்டுப்புறப் பாடல் பாடுவாங்க அதை இன்றைய நவீன இசையோடு இன்னொருத்தர் பாடுவார் அப்படின்னு ஒரு நிகழ்ச்சி பண்ணினாங்க. அதை அன்றைய முதல்வர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் பார்த்து உடனே தொலைக்காட்சி நிலையத்துக்குத் தொலைபேசியில் அழைத்து "அவங்க இயல்பு அந்த ஒரிஜினாலிட்டி அதை மாத்துறதுக்கு இதையெல்லாம் பண்ணாதீங்க அவங்களைத் தனியாப் பாட விடுங்க" என்று சொல்லி வைத்தார்.


"ஆண்பாவம்" என்ற முழு நீள பொழுதுபோக்குச் சித்திரம் உருவாவதற்கு உங்களுக்கு ஏதாவது இன்ஸ்பிரேஷன் இருந்ததா?


இன்ஸ்பிரேஷன் எதுவும் கிடையாது. சிந்தனை தான். ஒருத்தர் பொண்ணு பார்க்கப்போற இடத்துல அதே ஊரில இன்னொரு பொண்ணைப் பார்த்துட்டான். அதை யோசிச்சவுடனேயே இவன் பார்க்க வேண்டிய பெண் இன்னொன்று இருக்கு. இவன் போய்ப் பார்த்த பொண்ணைப் பார்க்க வேண்டிய மாப்பிளை இன்னொருத்தன் இருக்கான். ஆக இதுல கதை கிடைக்குது. அப்படித் தான் இந்தக் கதையில் பயணப்பட்டேன். வழக்கமா இப்படியான கதையில் மாற்றிப் பார்த்த பொண்ணு கூட கல்யாணம் நடப்பதா இருக்கும். ஆனா அந்தப் படத்துல பாண்டியனின் தம்பியா நான் நடிச்சதால பார்க்கவேண்டிய அந்தப் பொண்ணை தம்பி கல்யாணம் பண்ணிப்பதாக கதை உருவாக்கியிருப்பேன்.


அந்தப் படத்தில் "காதல் கசக்குதைய்யா" என்ற புதுமையான பாடல் அந்தப் பாடல் பிறந்ததன் பின்னணி ஏதாவது உண்டா?


அந்த ரகசியத்தையும் இவ்வளவு நாட்களுக்கப்புறம் உடைக்கிறேன். அந்தப் பாடலை எனக்கு வைக்கும் போது புதுமுகமான என்னை வச்சு மக்கள் அந்தப் பாடலை ரசிப்பாங்களாங்கிற அச்சம் எனக்கிருந்தது.
ராஜா சாரிடம் கதை சொல்லும் போது குறித்த சிச்சுவேனுக்கு பாடலை வைக்குமாறு சொல்லிருந்தேன். அதை ஞாபகம் வச்சு ராஜா கேட்க , அந்தப் பாடலை "மனைவி ரெடி"ங்கிற அடுத்த படத்துக்கு வச்சுக்குவோம்னு சொன்னேன். அந்தப் பாடலில் கூட சில வரிகள் இருக்கும்.
"பொண்டாட்டியை லவ் பண்ணுங்க, நம்ம தகப்பன் பேச்ச தாய் பேச்சக் கேட்கணும்"னுட்டு மனைவி ரெடி படத்தின் சாரத்தை அந்தப் பாடலில் வச்சிருப்பேன். ஆனா அந்தப் பாட்டு நல்லா வந்ததும் ஆண்பாவம் தயாரிப்பாளர் சுப்ரமணியத்திடம் "சார் இந்தப் பாடலை அடுத்த படத்துக்கு வச்சுக்கப் போறேன்" என்றதும் "ஒ பாட்டு நல்லா இருக்குன்னதும் உங்க சொந்தப்படத்துக்கு வச்சுப்பீங்களோ"ன்னு கேட்டதும் "அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லைங்க இந்தப் படத்துக்கே வச்சுக்கலாம்"னு சொல்லிப் பாடலைப் படம் பிடித்தேன். அப்ப்போ நடனப்பெண்கள் வெளியூர் போயிட்டாங்க யாருமே இல்லை. உடனே அவ்வளவு நடனப்பெண்களை எடுக்க முடியாதுன்னதும் பெண்கள் இல்லைன்னா என்ன ஆண்களை வச்சுப்போம் என்றேன். புதுசா செட்டுப் போடணும் ஆனா நேரம், பணம் அதிகம் ஆகும்னதும் சரி ப்ளெயின் செட்டு தான் என்றேன். இப்படி ஒரே நாளில் டக்கு டக்குன்னு முடிவெடுத்து அந்தப் பாடலை எடுத்தேன். அதுக்குக் காரணம் அப்போதிருந்த துணிச்சல், இளங்கன்று பயமறியாதுங்கிறது மாதிரி.

இந்தப் படத்தின் வசூல் ரீதியான வெற்றியைத் தவிர விருதுகள் ஏதாவது கிட்டியதா?

சினிமா எக்ஸ்பிரஸ் எனக்கு சிறந்த புதுமுக நடிகர்ங்கிற விருதைக் கொடுத்திருந்தாங்க. தின இதழ் பத்திரிகை கூட சிறந்த புதுமுகமாக கொடுத்தார்கள். அதைத் தவிர எந்தவொரு அரசு விருதுகளையும் நான் இதுவரை பெறவில்லை.

நெத்தியடி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் உருவெடுத்தீர்கள், இந்த முயற்சிக்குப் பின்னால் இருந்தது உங்கள் ஆரம்பகால இசையறிவு அப்படியா?


ஆமாம் ஆனால் வேற தயாரிப்பாளர் என்றால் இது தேவையான்னு கேட்பார். ஆனா நெத்தியடி தயாரிப்பாளர் அவிநாசிமணி அவர்கள் என் மாமனார். நான் மியூசிக் பண்றேன்னதும் அவரால மறுக்க முடியல ஏன்னா மாப்பிளையா போயிட்டேன். அந்தத் துணிச்சலின் நெத்தியடி படத்துக்கு இசையமைச்சேன். அதுக்கப்புறம் யாருமே என்கிட்ட வந்து நீங்க ஏங்க படங்களுக்கு இசையமைப்பதில்லை என்று கேட்கவேயில்லை.

ஆனால் அந்தப் படத்தில் கேட்கும் வகையில் பாடல்களும் இருந்தன இல்லையா?

இருந்தது ஆனா எனக்குக் கேட்கல, அதாவது ஏதோ பண்ணோம்கிறது ஓகே, அடடா ஆஹா பிரமாதம் அதுதான் வேணும் சினிமாவுக்கு. ஏதோ பண்ணோங்கிறமாதிரித் தான் இருந்துச்சுன்னு நான் நினைச்சு அன்னிக்கு ஆர்மோனியப்பெட்டியைத் தூக்கி வச்சுட்டேன்.

ஆனால் என்னால் ஒரு இசையமைப்பாளரை அறிமுகப்படுத்தக் கூடிய துணிச்சல் இருந்தது. டபுள்ஸ் படத்துக்காக தேவாவின் புதல்வர் ஶ்ரீகாந்த் தேவாவை அறிமுகப்படுத்தினேன்.

உங்கள் கலைப்பயணத்தில் இன்னொரு முக்கியமானதொரு அம்சம், இயக்குனர் பாலுமகேந்திரா அவர்களது இயக்கத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா ஆகியோர் இணைந்து இசையமைக்க "என் இனிய பொன் நிலாவே" படம். ஆனால் அது நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் அங்கீகாரத்தைப் பெறமுடியாமல் போய்விட்டது?

நீண்ட இடைவெளி இல்லைங்க ஒரு நூற்றாண்டு தொடங்கி அடுத்த நூற்றாண்டுல வெளியானது. சினிமா ஒரு ஐஸ்கிரீம், ஐஸ்கிரீமை ஐஸ்கிரீமா இருக்கும் போது கொடுத்தா சாப்பிட்டுடுவாங்க. அது கரைஞ்சு போச்சுன்னா ப்ரீயா கொடுத்தாக் கூடச் சாப்பிடமாட்டாங்க. அதுதான்.
அந்தப் படத்தின் முதல் டைட்டில் அப்பா அம்மா விளையாட்டு அப்புறம் நிறைய இடைவெளிகள் அதுக்கு வந்தது.

நாம எப்பவுமே நடந்த சோக சம்பவங்களை, விபத்துக்களைப் பதிவு பண்ணக்கூடாது. பாலுமகேந்திரா அவர்களின் இயக்கத்திலும் பாண்டியராஜன் நடித்திருக்கிறான் என்ற பெருமையே போதும்.

எண்பதுகளிலே எல்லாத்தரப்பு ரசிகர்களையும் கவரும் நாயகனாக வலம்வந்தீர்கள், இடையில் ஒரு சிறு இடைவெளி மீண்டும் கோபாலா கோபாலா படத்தின் மூலம் மீள் வெற்றி கிட்டினாலும் அதைத் தக்க வைக்கமுடியாமல் இருந்ததற்கு ஏதாவது காரணங்கள் இருக்குமா?

நிறைய இருக்கலாம்.

ஒரே மாதிரி வெற்றிகள் அமைந்தால் அது வாழ்க்கையும் அல்ல சுவாரஸ்யமும் அல்ல அது வந்து உப்புச் சப்பில்லாதது. ஒரு நாளிலேயே ராகுகாலம் எமகண்டம் அப்படின்னு ஏகப்பட்ட கால நேரம் வரும் போது ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் வருவது என்ன வியப்பு.
25 ஆண்டுகளுக்குப் பின்னரும் ஆஸ்திரேலியாக் கண்டத்தில் இருந்து ஒரு அருமையான மனிதர் என்னைப் பேட்டி காண்கிறார் என்ற தருணத்தை ரசிக்கணும் ருசிக்கணும்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனோடு தாய்க்கு ஒரு தாலாட்டு மற்றும் முத்துக்கள் மூன்று ஆகிய திரைப்படங்களிலும் நடித்த பெருமை உங்களுக்கு உண்டு இல்லையா?

நடிகர் திலகத்தோடு ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டால் போதும் என்பது தான் என் அதிகபட்ச ஆசை. ஆனால் தாய்க்கு ஒரு தாலாட்டு படத்தில் அவர் எனக்குத் தந்தையாகவும் தாயாக நாட்டிப்ப்பேரொளி பத்மினி அம்மா இந்த வாய்ப்பு கிடைக்குமா என்று என்னை நானே கிள்ளிப்பார்க்கும் அளவுக்கு அதிர்ச்சியா இருக்கு. அற்புதமான உலகம் போற்றும் நடிகர், அவரின் மகனாக நடித்தது பெரும் பாக்கியம். ஊட்டியில் ஷீட்டிங் நடக்கும் போது ஒதுக்குப் புறமா சிறுநீர் கழிக்கப் போகும் போது துணைக்கு வாடா பாண்டியா என்று என்னை அழைத்துப் போகும் அளவுக்கு உரிமை எடுத்திருந்தார்.

உங்கள் ஆரம்பகால வெற்றிப்படங்களிலே கதாநாயகன் படத்தின் மூலக்கதை மலையாளத்தில் நாடோடிக் காற்று திரைப்படத்தில் இருந்து எடுக்கப்பட்டது. பின்னர் உங்களின் கோபாலா கோபாலா படத்தை மலையாளத்தில் ரீமேக் ஆக்கியிருந்தார்கள்.அது பெருமை அல்லவா?

வழக்கமா பெரும்பாலும் மலையாளத்தில் இருந்து தான் தமிழுக்குக் கொடுப்பார்கள். என்னுடைய கோபாலா கோபாலா கதையை மலையாளத்தில் எடுத்த போது மிஸ்டர் பட்லர் என்ற அந்தப் படத்தின் டைட்டில் கார்டுக்குப் பின் கதை ஆர்.பாண்டியராஜன் அப்படின்னு வரும். கதாநாயகன் பெயருக்கு முன்னாலேயே என் பெயரைப் போட்டார்கள். எனக்குக் கண்ணெல்லாம் கலங்கிடுச்சு. அதுதான் கதாசிரியர்களுக்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவம். அந்தப் படம் ஒரு வெற்றிப்படமும் கூட.
அந்தப் படத்தின் நாயகன் திலீப் அந்த வெற்றிக்காக எனக்கு ஒரு பரிசு கொடுத்தார். அவர் தயாரித்த கதாவிஷேசன் படத்தில் எனக்கு ஒரு பாத்திரம் கொடுத்தார்.

நீங்கள் உதவி இயக்குனராக இருந்த காலத்தில் நடந்த நிகழ்வு, "தூறல் நின்னு போச்சு" படத்தின் பாடல் கம்போசிங்கின் போது இளையராஜா இசைமைத்த குறித்த ஒரு ட்யூனை நீங்கள் படத்தில் பயன்படுத்த வேண்டும் என்று உரிமை எடுத்துக் கொண்டு கேட்டுக் கொண்டதாகவும் ஆனல் உங்கள் குருநாதர் தயக்கம் காட்டியதாகவும் ஒரு செய்தி அதைப்பற்றிச் சொல்லுங்களேன்?


எனக்கு மறந்து போன ஜாதகங்களை எல்லாம் சொல்றீங்க (சிரிக்கிறார்) ராஜா சார் அற்புதமான ஒரு ட்யூன் போட்டார். ஆனால் என்னுடைய குருநாதர் "ரொம்ப உச்சஸ்தாயில் பாடவேண்டியிருக்கு" என்று சொல்லி வேணாம் என்றார். அந்த ட்யூனைப் பயன்படுத்தல. பின்னர் அதையே ஓளங்கள் மலையாளப்படத்தில் ஜானகி அம்மா பாடிய "தும்பி வா தும்பக்குளத்தே" என்று அமைந்து பெரும் புகழைப் பெற்றுக்கொடுத்தது. அதைக் கேட்டதும் குருநாதர் பாக்யராஜ் ஆகா ரொம்ப அற்புதமான பாட்டா இருக்கே என்றதும் , "சார் இதைத் தான் ராஜா சார் நமக்கு முன்னாடி போட்டுக் காமிச்சார்"னு அப்போது சொன்னேன்.

"தூக்கம் வராத போது சிந்தித்தவை" என்ற தனது நூல் குறித்து பாண்டியராஜன் சொல்லும் கருத்துக்கள், ஆண்பாவம் படத்தை ஏன் ரீமேக்கக் கூடாது என்ற போது அவரின் சிந்தனை மற்றும் பணவசதி இல்லாத காரணத்தால் இளமையில் படிக்காத இவர் பின்னர் எம்.ஏ பட்டதாரியாகி பின்னர் தமிழ் சினிமா குறித்து எம்.பில் ஆய்வு மற்றும் தற்போது "தமிழ்த் திரைப்படக்கலைஞர்களின் சமுதாயப் பங்களிப்பு" என்ற பெயரில் பி.எச்.டி படிப்பும் படித்து வருவதாகவும் தன் பேட்டியில் தொடர்ந்தார்.


Thursday, December 2, 2010

கேட்டதில் இனித்தது "என்ன குறையோ என்ன நிறையோ"


சாஸ்திரிய சங்கீத உலகில் கொடிகட்டிப் பறந்த ஜாம்பவான்கள் பலர் திரையிசை உலகுக்கு வந்து தம் தனித்துவமான இடத்தைத் தக்கவைத்துக்கொள்வது காலாகாலமாக நடந்து வரும் சமாச்சாரம். ஆனால் அதற்கும் கூட நல்லதொரு தருணம் வாய்க்கவேண்டும் என்பதற்கு நல்ல உதாரணம் பாடகி சுதா ரகுநாதன். இன்றைய நிலையில் சாஸ்திரிய சங்கீதப் பரப்பில் சுதா ரகுநாதன் ஒரு சூப்பர் ஸ்டார் என்று சொன்னால் அது மிகையில்லை. உள்ளூரில் மட்டுமன்றி தமிழர்கள் பரந்து வாழும் வெளிநாடுகளிலும் இவருக்கான பரந்துபட்ட ரசிகர் வட்டம் இருப்பதே அதற்குச் சான்று.
சுதா ரகுநாதனையும் திரையிசை உலகம் விட்டுவைக்கவில்லை. இசைஞானி இளையராஜா (இவன்), தேனிசைத் தென்றல் தேவா (கல்கி), வாரணம் ஆயிரம் (ஹாரிஸ் ஜெயராஜ்) என்று சுதா ரகுநாதனின் குரலைத் திரையிசைப்பாடல்களில் முன்னணி இசையமைப்பாளர்கள் இவர்கள் பொருத்திப்பார்த்தார்கள். உண்மையில் அவர்களுக்கெல்லாம் கட்டுப்படாத இந்தக் குரல் இலாவகமாக, கச்சிதமாகப் பொருந்திப் போனது என்னவோ அண்மையில் வந்த ஒரு பாடலில் தான் என்பேன். அந்தப் பாடல் தான் "மந்திரப் புன்னகை" படத்தில் வரும் "என்ன குறையோ என்ன நிறையோ எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்"

இன்றைய முன்னணி இசையமைப்பாளர்களில் இன்னும் ரசிகர்களால் முன்னோ தூக்கி நிறுத்திப் பாராட்டப்பட வேண்டிய இசையமைப்பாளர் வித்யாசாகர் என்பேன். இருபது ஆண்டுகளுக்கு மேலாக வித்யாசாகர் இசையமைப்பாளராக இருந்தாலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று சீசனுக்கு சீசன் வந்து போகும் நிலை இவருடையது. இவரைக் கச்சிதமாகப் பயன்படுத்தக் கூடிய இயக்குனர்களில் கரு.பழனியப்பனும் ஒருவர். பார்த்திபன் கனவு, சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், (இன்னும் வெளிவராத)சதுரங்கம், தற்போது வெளியாகியுள்ள மந்திரப்புன்னகை போன்ற படங்களில் இந்தக் கூட்டு எவ்வளவு தூரம் சிறப்பாக அமைந்திருக்கின்றது என்பதற்கு அந்தப் படங்களின் பாடல்களே சான்றாக விளங்கி நிற்கின்றன. இவர்களோடு இன்னொரு முக்கியமானவர், அவர் தான் பாடலாசிரியர் அறிவுமதி. ஒரு நீண்ட அஞ்ஞாதவாசம் இருந்து மீண்டவருக்கு ஒரு அறிமுகமாக இப்படம் கிட்டியிருக்கின்றது. அறிவுமதியைப் பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்தியிருக்கின்றார் வித்யாசாகர். மெட்டுக்குப் பாட்டெழுதும் பெரும்பான்மைச் சூழலில் பாடல்வரிகளுக்கு மெட்டமைக்கும் சவாலை வித்யாசாகர் ஏற்கும் போது அறிவுமதி போன்ற கவிஞர்களின் பாடல்வரிகள் தான் அந்தச் சவாலுக்கு உறுதுணையாக வளைந்து கொடுத்து இசை வளையத்துக்குள் கட்டுப்பட்டுவிடுகின்றன.

சரி, இனி இந்தப் பாடலுக்கு வருவோம். ஆண்டவனிடம் தன்னை முழுமையாகக் கொடுத்து விட்ட சரணாகதி நிலையில் உள்ள ஒரு சூழ்நிலைக்கு ஒப்ப இந்தப் பாடல் பின்னப்பட்டிருக்கின்றது. இங்கே ஆண்டவன் என்ற நிலைக்குக் கண்ணன் கருவியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றார்.
கண்ணனுக்கே பிடித்தமான புல்லாங்குழல் மெல்ல அடியெடுத்துக் கொடுக்க சுதா ரகுநாதன் முதல் அடியை ஆரம்பிக்கிறார்.

கண்ணா....கண்ணா....கண்ணா
என்ன குறையோ எந்த நிறையோ
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்

என்ன தவறோ என்ன சரியோ
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
என்ன வினையோ என்ன விடையோ
அதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
அதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்

என்ன குறையோ எந்த நிறையோ
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்


புல்லாங்குழல் விட்ட இடத்தில் இருந்து ஆரம்பிக்கின்றது இடையில் உறுத்தாத மேற்கத்தேய இசைக்குப் போய் மீண்டும் மிருதங்கம் ஒரு சிறு ஆவர்த்தனம் பிடித்து சுதா ரகுநாதனிடம் ஒப்படைக்க
அவர்

நன்றும் வரலாம் தீதும் வரலாம்
நண்பன் போலே கண்ணன் வருவான்
வலியும் வரலாம் வாட்டம் வரலாம்
வருடும் விரலாய் கண்ணன் வருவான்

நேர்கோடு வட்டம் ஆகலாம்
நிழல் கூட விட்டுப் போகலாம்
தாளாத துன்பம் நேர்கையில்
தாயாக கண்ணன் மாறுவான்

அவன் வருவான் கண்ணில் மழை துடைப்பான்
இருள் வழிகளிலே புது ஒளி விதைப்பான்
அந்தக் கண்ணனை அழகு மன்னனை
தினம் பாடி வா மனமே

என்ன குறையோ எந்த நிறையோ
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
கண்ணன்....கண்ணன்....கண்ணன்...கண்ணன்


மீண்டும் புல்லாங்குழலோடு இம்முறை இன்னொரு கோஷ்டி மேற்கத்தேய வாத்தியங்களின் மெல்லிசை பரவ மிருதங்கம் அதைக் கைப்பற்றி சுதாவிடம் கொடுக்க

உண்டு எனலாம் இல்லை எனலாம்
இரண்டும் கேட்டுக் கண்ணன் சிரிப்பான்
இணைந்து வரலாம் பிரிந்தும் தரலாம்
உறவைப்போலே கண்ணன் இருப்பான்

பனிமூட்டம் மலையை மூடலாம்
வழி கேட்டுப் பறவை வாடலாம்
புதிராகக் கேள்வி யாவிலும்
விடையாகக் கண்ணன் மாறுவான்

ஒளிந்திருப்பான்..எங்கும் நிறைந்திருப்பான்
அவன் இசைமழையாய் உலகினை அணைப்பான்
அந்தக் கண்ணனை..கனிவு மன்னனை
தினம் பாடிவா மனமே.......


அப்படியே மீண்டும் முதல் அடிகளுக்குத் தாவாமல் நின்று விடுகிறது பாடல் அப்படியே எமது நெஞ்சிலும் நின்று நிலைத்துவிடும் அளவுக்கு. ஒரு சாஸ்திரிய இசைப்பாடகிக்குத் தோதான மெட்டும், இட்டுக்கட்டத் தேர்ந்த ஒரு பாடலாசிரியரும், ரசனை மிகுந்து பொறுக்கி எடுக்கும் வல்லமை வாய்ந்த இயக்குனரும் அமைந்தால் என்ன குறை?
சுதா ரகுநாதனின் இந்தப் பாடல் காலங்கள் கடந்தும் நிற்கும் கண்ணனைப் போலே.