Pages

Thursday, August 20, 2009

ராஜா அடியெடுத்துக் கொடுக்க....

விதவிதமான நிறத்தைக் கொண்ட கோல மாவினை எடுத்துத் தன் எண்ணம் போல அழகு மிகு கோலம் போட்டு நிறைத்திருக்கும் நிலம் போல ஒரு பாடலை மெட்டமைத்துப் பாடல் வரிகளுக்குள் கட்டமைத்து பொருத்தமான பாடகர்களைக் கொண்டு பாடவைத்து ரசிகனின் காதுகளுக்குள் பாய்ச்சும் வித்தைக்கார இசையமைப்பாளன் ரசிகன் மனதில் நீக்கமற நிறைந்து விடுகின்றான். ஒரு பாடல் எப்படி உருவாக்கப்படுகின்றது என்பதை இப்போதெல்லாம் திடீர் இசையமைப்பாளர்கள் பலர் ஒரு புதுப்படம் ஓடுவதற்கு விளம்பர உத்தியாக சின்னத்திரை விருந்தாகத் தருவதெல்லாம் எனக்குச் செயற்கையாகத் தான் படுகின்றது. முதல் மரியாதை போன்ற படங்களின் ஒலி நாடாக்களில் வைரமுத்து முகவுரை கொடுத்து வழங்கிய பாடல்களின் தொகுப்பு ஒரு விதம் என்றால், குணா படத்தின் ஒலிநாடாவிலே ஒவ்வொரு மெட்டும் எப்படிப் பிரசவிக்கப்படுகின்றது என்பதை கமல்-ராஜா-வாலி உரையாடல்களினூடே காட்டியதும் வெகு இயல்பு. யோசித்துப் பாருங்கள் ஒவ்வொரு பாடல் பிறக்கும் போது எத்தனை விதவிதமான மெட்டுக்கள், வித்தியாசமான வாத்தியக் கலவைகள், சொற் சேர்க்கைகள் என்று.

இங்கே நான் தரும் தொகுப்பு ஒரு இசையமைப்பாளனாய் இளையராஜா மெட்டமைத்துப் பாடிக் காட்டி தொடர்ந்து பாடுக என்பது போல அமைந்த பாடல்கள், ராஜாவின் குரலை ஒரு சில வரிகளுக்குள் மட்டும் கெளரவக் குரலாக அடக்கி வந்த பாடல்கள் என்று ஆறு முத்தான பாடல்கள்.

முதலில் வருவது நாடோடித் தென்றல் படத்தில் இருந்து வருகின்றது.
"மணியே மணிக்குயிலே மாலை இளங்கதிரழகே" என்று சொல்லி விட்டு சிரிப்போடு ராஜா நிறுத்த விட்ட இடத்தில் இருந்து தொடங்குகின்றது மனோ, ஜானகியின் கூட்டு. பாடல் வரிகளை எடுத்துக் கொண்டால் படத்தின் கதைக்களன் நடக்கும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின் மொழி நடையில் செந்தமிழ் கலக்கின்றது. கூடவே மணியொலி காதல் ஜோடிக்கு சம்மதித்துத் தலையாட்டும் சத்தமாகப் பரவ,
பூமாரப் பாவை நீயடி இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி



000000000000000000000000000000000000000000000000000000000000

வி.எம்.சி.ஹனீபா மலையாளத்திலிருந்து கரையொதுங்கிய இயக்குனர். பாசப்பறவைகள், பாடாத தேனீக்கள் என்று "பா" வரிசைப் படங்கள் எடுத்து இன்னொரு பீம்சிங் செண்டிமெண்ட்டில் சில வெற்றிப் படங்கள் குவித்தாலும் அவரின் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்த படங்களில் ஒன்று "பகலில் பெளர்ணமி". இந்தப் படம் வெளி வர இருந்த காலத்தில் நான் தாயகத்தில் மேல் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். என்னோடு கூடப் படித்த நண்பனின் சொந்தக்காரர் (ஈழத்தவர் தான்) தயாரித்த படம், கட்டாயம் பார்க்க வேண்டும் என்று அப்போது சொல்வான் அவன். இந்தப் படம் வெளி வந்த ஆண்டு 1990. அதற்குப் பின் உள்நாட்டுப் பிரச்சனைகளால் அவனை நான் தொலைத்து விட்டேன். இப்போது அவன் எங்கே இருக்கிறான் என்று இன்றுவரை தெரியாது, ஆனால் பகலில் பெளர்ணமி மட்டும் பசுமரத்தாணி போல.இன்னொரு காரணம் சென்னை வானொலியை நான் நேசித்த காலங்களில் கேட்ட பாடல்களில் இதுவுமொன்று அது,

"கரையோரக் காற்று கல்யாண வாழ்த்து காதோடுதான் கூறுதோ லலலாலலால லாலா லலலாலலால லாலா" என்று ராஜா ஆரம்பிக்க ஹோரஸ் பரவ விட்ட இடத்தில் இருந்து தொடங்கிப் பாடி முடிப்பார் எஸ்.பி.பாலசுப்ரமணியம், கூடவே சித்ரா. பாட்டின் இசை ஒரு பக்கம் நகர பாடகர்களின் குரல் இன்னொரு நகரும் வகையில் வித்யாசமான மெட்டும் இசையும் உள்ள பாடல்களில் இதுவும் ஒன்று.



00000000000000000000000000000000000000000000000000000000000000000

"காதலுக்கு பாட்டெதற்கு பாட்டெதற்கு" என்று ஒரு எள்ளல் குரல் கொடுத்து விட்டு ஆர்மோனியத்தில் சில அடிகளை வாசித்துக் காட்டுவார் ராஜா. மனோவும் ஜானகியும் தொடர்ந்து காதல் ராகம் இசைப்பார்கள். அந்தப் பாடல் ஒலிக்கும் படம் இளையராஜாவின் உழைப்பு வீணாய் போன மொக்கைப் படங்களில் ஒன்றான "சிறையில் சில ராகங்கள்". அறிமுக இயக்குனர்களின் தெய்வமாக இருக்கும் நடிகர் முரளியே கருணை காட்டாத படம் இது. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் புதுவிதமான இசைக்கலவையை வாத்தியங்களினூடு காட்ட முனைந்த ராஜாவின் படைப்புக்களில் இந்தப் பாடலும் தவிர்க்க முடியாத ஒரு பொக்கிஷம். குறிப்பாக பாடலின் இடையிசையைக் கேட்டுப்பாருங்கள், ஒலிப்பதிவுக் கூடத்தில் கண்ணை மூடிக்கொண்டே வாத்தியங்களின் ஆலாபனையைக் கேட்பது போன்ற சுகத்தைத் தரும். என்னிடம் ஒலிநாடாவில் ராஜா ஆரம்பிக்கும் வரிகளோடு இருந்தப் பாடல் கைவசம் இல்லை. ராஜா இல்லாத எடிட் பண்ணப்பட்ட மனோ, ஜானகி பாட்டுத் தான் கை வசம் இருக்கிறது. கையில் அந்த முழுப்பாடலும் வரும் போது நிச்சயம் சேர்த்து விடுகின்றேன்.



0000000000000000000000000000000000000000000000000000000

"ராஜா கைய வச்சா" , சுரேஷ் கிருஷ்ணாவின் சத்யா, அண்ணாமலைக்கு பிறகு எனக்குப் பிடித்த படங்களில் ஒன்று. கலக்கலான நகைச்சுவையுடன் வந்த இந்தப் படத்தினை இப்போது பார்த்தாலும் ஒளிப்பதிவு உட்பட தொழில்நுட்பத்திலும் சிறப்பாக இருக்கும். இந்தப் படத்தில் கூட ஒரு பாடலை ராஜா ஆரம்பித்து வைத்து இடையிடையே அதே அடிகளைப் பாடுவார். மூலப்பாடலை மனோவும், ஜானகியும் பாடுவார்கள். ஆனால் ராஜா பாடும் வரிகளை இருவருமே பாடாமல் புதுமை படைத்திருப்பார்கள். அந்தப் பாடல்,
"மருதாணி அரைச்சேனே உனக்காக பதமா"



00000000000000000000000000000000000000000000000000000000

ராஜா ஆரம்பித்து வைக்கும் பாடலில் விட்டுப் போன பாடல் ஒன்றை இங்கே சேர்க்கிறேன். இந்தப் பாடல் அறுவடை நாள் படத்தில் வரும் பாடல்.
ப்ரேம ப்ரேமாதி ப்ரேமப் ப்ரியம் ப்ரேம வஸ்யப் ப்ரேமம் , ப்ரேமம் ப்ரேமம் ப்ரேமம் ப்ரியம் ப்ரியமாதி ப்ரீதிதம் என்று ராஜா கீர்த்தனை ஒன்றை எடுத்து ஆன்மீக இசையாய் ஆரம்பிக்க "தேவனின் கோயில் மூடிய நேரம் நான் என்ன கேட்பேன் தெய்வமே " என்று ஆரம்பிப்பாள் உலகத்தை விலக்கி இறைபணியில் அது நாள் வரை இருந்த அந்தப் பெண்ணில் காதல் என்னும் பூ பூக்கும் போது. தொடர்ந்து அந்தப் பாடல் முழுவதுமே முடிவெடுக்க முடியாத குழப்பத்தோடு பாடும் பெண்ணின் பரிதவிப்பாய் சித்ராவின் குரல் ஒலிக்கும். அந்தக் குரலிலேயே ஒரு சோகம் மெல்ல இழையோடும். பாடலைப் படமாக்கிய விதம் கூட சபாஷ் போட வைக்கும்.
சப்தஸ்வரங்கள், ராக மாலிகா போன்ற பல இசைமேடைகளில் இளம்பாடகர்கள் இன்றும் தமக்கான அறிமுகத்தைத் தேடப் பயன்படுத்தும் அடையாள அட்டையாய் இன்றும் இருக்கிறது இந்தத் தேனான பாடல்.



00000000000000000000000000000000000000000000000000000000

நிறைவாக முன் சொன்ன பாடல்களில் இருந்து முழுதும் மாறுபட்ட பாடல். அதாவது இந்தப் பாடலில் ராஜா ஆரம்ப வரிகளைப் பாடாமல் சுரேந்தர் அடியெடுத்துக் கொடுக்க, ராஜாவின் குரல் ஆக்கிரமிப்பில் பாடல் முழுதும் இருக்கும். சுரேந்தர் பாடும் ஆரம்ப அடிகள் ஒருவிதமாகவும்
"கை வீசிப் போகின்ற வைகாசி மேகம்
தை சேர்த்துப் பாடாதோ தன்யாசி ராகம்" என்றும்
"பொட்டோடு பூவைத்த பொன்மானைப் போற்றி
பல்லாண்டு சொன்னேனே பாமாலை சூட்டி" என்றும்

ராஜா பாடுவது ஒரு இந்துஸ்தானி பாணி போல இன்னொரு விதமாகவும் காட்டியிருப்பார். அதிகம் ஆர்ப்பரிக்காத இசைக்கு இந்த இரண்டு குரல்களுமே போதுமெனக் காட்டும் பாடல் இது. பாடகராக இளையராஜா நிரூபித்த பாடல்களில் ஒன்று அதிகம் பேசப்படாதது பெருங்குறை. "மங்கை நீ மாங்கனி" பாடல் இசைஞானி இளையராஜாவின் "இன்னிசை மழை" ஆக என்றும் ஓயாது இருக்கும்.



38 comments:

  1. //நிறைவாக முன் சொன்ன பாடல்களில் இருந்து முழுதும் மாறுபட்ட பாடல். அதாவது இந்தப் பாடலில் ராஜா ஆரம்ப வரிகளைப் பாடாமல் சுரேந்தர் அடியெடுத்துக் கொடுக்க, ராஜாவின் குரல் ஆக்கிரமிப்பில் பாடல் முழுதும் இருக்கும். சுரேந்தர் பாடும் விதம் ஒருவிதமாகவும் ராஜா பாடுவது ஒரு இந்துஸ்தானி பாணி போலக் காட்டியிருப்பார். அதிகம் ஆர்ப்பரிக்காத இசைக்கு இந்த இரண்டு குரல்களுமே போதுமெனக் காட்டும் பாடல் இது.
    "கைவீசிப் போகின்ற வைகாசி மேகம்
    கை சேர்த்துப் பாடாதோ தன்யாசி ராகம்"//

    இன்னிசை மழை. படம் பார்த்தபோது, இவ்வளவு நல்ல பாடலை, கொஞ்சம் கூட பொருந்தாத ஒரு ஹீரோவுக்கு இளையராஜா பாடி கெடுத்துவிட்டாரே என்று புலம்பியது நினைவுக்கு வருகிறது. நல்ல பாடல்.

    ReplyDelete
  2. பாஸ்...கலக்கிட்டீங்க!

    ReplyDelete
  3. வாங்க ஹரன்பிரசன்னா

    இந்தப் பாடல் காட்சியை ஹீரோவுக்கும், விவேக்குக்கும் தானே கொடுத்திருப்பார்கள். அருமையான பாடலை வீணாக்கி விட்டார்கள். இன்னொரு அழகிய காதல் படத்துக்கு ஏற்ற பாடல் இதுவல்லவா.

    ReplyDelete
  4. அன்பு கானா, நல்லதொரு பகிர்வு.

    விரிவான விளக்கங்களும் அருமை.

    மணியே,மணிக்குயிலே.. பாடலை இலக்கியமாகவும், மருதாணி அரைப்போமா... பாடலை வேறொரு தளத்திலும் இளையராஜா அழகாக படைத்திருப்பார்.

    ReplyDelete
  5. நிஜமா நல்லவன் said...

    பாஸ்...கலக்கிட்டீங்க!//

    வருகைக்கு நன்றி நிஜம்ஸ்

    ReplyDelete
  6. துபாய் ராஜா said...

    அன்பு கானா, நல்லதொரு பகிர்வு//

    வாங்க ராஜா

    நீங்க சொன்னது போல மருதாணி பாடல் வரிகள் பாமரத்தனமாகவும் மணியே மணிக்குயிலேயில் வித்தியாசமான நடையிலும் கலக்கியிருக்கிறார்.

    ReplyDelete
  7. i am back

    thala nalama :)

    read the full post ..ungalai pathi vikatanil vandhapove wish pannaumnu ninachane ana muidyla

    thodanrdhu kalkungaa

    ReplyDelete
  8. கார்த்திக் பிரபு said...

    i am back

    thala nalama :)//

    வாங்க நண்பா, பில்லா மாதிரி வந்திருக்கீங்க ;) மிக்க நன்றி நண்பா.

    ReplyDelete
  9. ///மணியே மணிக்குயிலே மாலை இளங்கதிரழகே" என்று சொல்லி விட்டு சிரிப்போடு ராஜா நிறுத்த விட்ட இடத்தில் இருந்து தொடங்குகின்றது //

    தொகுப்பில் இந்த ஒரு பாடலை மட்டும் பலமுறை கேட்ட அனுபவம் மற்ற பாடல்கள் முதன் முறையாக கேட்டு அனுபவிக்கிறேன் நன்றி கானா !

    ReplyDelete
  10. //விதவிதமான நிறத்தைக் கொண்ட கோல மாவினை எடுத்துத் தன் எண்ணம் போல அழகு மிகு கோலம் போட்டு நிறைத்திருக்கும் நிலம் போல ஒரு பாடலை மெட்டமைத்துப் பாடல் வரிகளுக்குள் கட்டமைத்து பொருத்தமான பாடகர்களைக் கொண்டு பாடவைத்து ரசிகனின் காதுகளுக்குள் பாய்ச்சும் வித்தைக்கார இசையமைப்பாளன் ரசிகன் மனதில் நீக்கமற நிறைந்து விடுகின்றான்//

    கவிதை மாதிரியான நடை
    ஆரம்பமே அசத்தல்
    பின்னிட்டீங்.

    Surprising Collection

    ReplyDelete
  11. ஆகா போட்டுட்டிங்களா சாமீ....நன்றி நன்றி நன்றியோ நன்றி தல ;)))

    \\ஒரு புதுப்படம் ஓடுவதற்கு விளம்பர உத்தியாக சின்னத்திரை விருந்தாகத் தருவதெல்லாம் எனக்குச் செயற்கையாகத் தான் படுகின்றது\\\\

    அதுவும் ஒரே ஒரு கீபோர்டு..;))

    குணா படத்தின் பாடல்களை கேட்டுயிருக்கிறேன். ஆனால் முதல் மரியாதை வைரமுத்து குரலில் முகவுரை கேட்டது இல்லை தல. இருந்தால் வலையேற்றினால் மிகவும் மகிழ்ச்சி அடைவோம் தல ;))

    ReplyDelete
  12. \\"மணியே மணிக்குயிலே மாலை இளங்கதிரழகே"\\

    இசைஞானியின் குரலை கண்மூடி கேட்கும் போதே அவர் முகம் மனக்கண்ணில் வந்து அந்த சிரிப்புடன் கலைக்கிறது. என்ன மாதிரி ஒரு ஆரம்ப இசை அது..அப்படியே என்மேல் மழை பெய்வது போல இருக்கு கைகள் தானாக மேசைகளில் தாளம் போடுகிறது. குரலும் வரிகளும் என்ன தெளிவு...மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று.

    இந்த படத்தின் பாடல்களில் அனைத்தும் மிக அருமையாக இருக்கும்.

    லகான் இந்தி படம் பார்க்கும் இந்த படம் ஞாபகம் வரும். ;)

    \\கரையோரக் காற்று கல்யாண வாழ்த்து காதோடுதான்\\

    இப்பதான் கேட்டுகிறேன்..நல்ல பாடல் தல ;)

    \\இந்தப் பாடலையும் விட்ட இடத்தில் இருந்து தொடங்கிப் பாடி முடிப்பார் மனோ, கூடவே சித்ரா. \\\

    மனோவா!! டவுட்டு தல..எனக்கு என்னாமே பாலு சார் குரல் மாதிரி இருக்கு.

    \\"காதலுக்கு பாட்டெதற்கு பாட்டெதற்கு\\

    அருமையான பாடல்...இசைஞானி (நடுவில் வரும் இசையில்)வயலினில் விளையாடுவதை கேட்டகவே கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

    \\மருதாணி அரைச்சேனே உனக்காக பதமா"\\

    இந்த பாடலை சிலமுறை கேட்டுயிருக்கிறேன். மீண்டும் உங்களின் அறிமுகத்தின் மூலம் கேட்கும் போது கூடுதல் பிரியம் வருகிறது தல ;)

    தல ஜானகி அம்மா பாடுவதற்க்கு முதலில் வரும் இசையும் மனோ அவர்கள் பாடுவதற்க்கு முதலில் வரும் இசைக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. இரண்டு இசைக்கும் உபயோகித்த வாத்தியங்கள் வேறு வேறு...சும்மா நம்ம இசைஞானி...கலக்கியிருக்காரு ;)


    \\மங்கை நீ மாங்கனி" \\

    மிக அமைதியான பாட்டு தல...உங்க புண்ணியத்துல கேட்டுக்கிறேன்;))
    சும்மா தபேலாவில் புகுந்து விளையாடியிருக்காரு தெய்வம் ;))

    மிக மிக அருமையான தொகுப்பு தல மிக்க நன்றி ;)

    ReplyDelete
  13. ஆயில்யன் said...


    தொகுப்பில் இந்த ஒரு பாடலை மட்டும் பலமுறை கேட்ட அனுபவம் மற்ற பாடல்கள் முதன் முறையாக கேட்டு அனுபவிக்கிறேன் நன்றி கானா !//


    வருகைக்கு நன்றி பாஸ்

    ReplyDelete
  14. நெஞ்சுல கைய வச்சு சொல்லுங்க பாஸ்...மருதாணி அரைச்சேனே பாட்டுக்கும் அதுக்கு வந்த ப்ரிலூட் மியூசிக்குக்கும் எதாவது சம்பந்தம் இருக்கா? :))

    டைனோ

    ReplyDelete
  15. வருகைக்கு நன்றி கலைக்கோவரே

    டைனோ பாஸ்

    ‍ நோ காமெண்ட்ஸ் ;‍)

    ReplyDelete
  16. அருமை. ”மணியே மணிக்குயிலே” எனக்கு ரொம்பப் பிடித்த பாடல்.

    ReplyDelete
  17. நல்லதொரு தொகுப்பு

    ReplyDelete
  18. உங்களுடைய பதிவுகள் அருமை. ராஜாவின் தீவிர ரசிகன் நான்.

    "காற்றோடு குழலின் கீதமோ...கண்ணன் வரும் வேலை..."
    -என்று தொடங்கும் இளைய ராஜாவின் பாடல் சித்ரா பாடியது. இந்தப் பாடல் யாரிடமாவது இருந்தால் எனக்கு அனுப்ப முடியுமா? அல்லது இணையத்தில் தரவிறக்கம் செய்ய சுட்டியைத் தர முடியுமா? தொடர்ந்து தேடிக்கொண்டு இருக்கிறேன். கிடைத்த வழி இல்லை. ரொம்ப பழைய பாடல்.

    என்ன படம் என்று தெரிந்தால் சுலபமாக கிடைத்துவிடும். ஆகவே படத்தின் பெயரையாவது கொடுத்தால் நன்றாக இருக்கும். நன்றி...

    உங்களுடைய நண்பர்களுக்கு தெரிந்தால் தெரியப்படுத்துங்களேன்.

    அன்புடன்,
    கிருஷ்ண பிரபு.
    www.online-tamil-books.blogspot.com


    இது நண்பர் ஒருவரின் வெண்டுகோள்
    உரியவரிடம் சேர்ப்பிக்கப்பட்டது.
    இதை நீங்கள் கண்டிப்பாக தேடி எடுத்துவிடுவீர்கள் என தெரியும்.

    ReplyDelete
  19. கானாஜி
    ரொம்ப அற்புத பாடல்கள் கொண்ட தொகுப்பு.
    அப்போது
    ராஜா சார் மிகவும் பிஸியாக இருந்த நேரம் .

    பெரிய தயாரிப்பாளர் ,சிறிய தயாரிப்பாளர் என பேதமே இல்லாமல் இரவு பகலாக
    தன கடமையை செவ்வன செய்திருப்பார்.
    நீங்கள் சொன்னது போல நல்ல இசையும் பெட்டிக்குள் சுருண்டதில் எனக்கு மிகவும் வருத்தமே.
    உம்.
    சிறையில் சில ராகங்கள்.
    பகலில் பவுர்ணமி.
    மங்கை நீ மாங்கனியும் நன்றாக இருந்தது.
    இது என்ன படம் ?இன்னிசை மழையா?

    கை வீசி என்னும் வரிகளில் ராஜாவின் ஆளுகை நிதர்சனம்.
    கொண்டாட்டம்.

    மணியே மணிக்குயிலே பாடல் கேட்காமல் வாரம் ஓடாது.
    கண்டிப்பாக கேட்டு விடுவேன்.
    இது ஒரு மந்திர குரல்.
    அனைத்தையும் ரசித்தேன்.
    கேபிள் ஷங்கர் ஒரு பதிவு போட்டிருந்தார்.
    பார்த்தீர்களா?

    ReplyDelete
  20. குணா படத்தி கேசட்டில் இருந்த சிறப்பு தகவல்களை நானும் கேட்ட ஞாபகம் உள்ளது.
    நல்ல மலரும் நினைவுகள்

    ReplyDelete
  21. oru naal andha orunaal from devadhai. movie'il mattume Raja adi eduthu koduppar. cassetteil illai.

    http://www.youtube.com/watch?v=1dTw3Vo-G94&feature=fvsr

    ReplyDelete
  22. அந்த புதிய பாடலுக்கும் நன்றி தல...ஏய்ன்னு இசைஞானியின் குரல் மயக்குது ;))

    நன்றி தல ;)

    ReplyDelete
  23. கோபிநாத் said...

    ஆகா போட்டுட்டிங்களா சாமீ....நன்றி நன்றி நன்றியோ நன்றி தல ;)))//

    வணக்கம் தல, உங்களுக்கும் பிடிக்கும் என்று தான் பதிவிலேயே கொடுத்தேன், ஆனா இந்தளவுக்கு என்று நினைக்கவில்லை ;)


    வருகைக்கு நன்று சங்கா மற்றும் இளா

    ReplyDelete
  24. தல! நம்ம ராசாவப் பத்தி பதிவு போட்டீங்களா!

    ரெண்டு நாளா “சந்தன மார்பிலே குங்குமம் சேர்ந்ததே.....ஓர் மதி மதி..”ன்னு ஒரே சுலோ மோஷன் ஹெக்கோ..கேட்டீச்சு.வந்துட்ம்ல.

    (ஸ்டில் ஒரு கவிதையா இருக்கு தல)

    பதிவு நல்லா இருக்கு.புதுசு புதுசா கண்டுபிடிச்சு ராஜாவுக்கு மாலை சாத்துராங்க நம்ம பசங்க.

    சூப்பர்ங்க.

    ReplyDelete
  25. தல கோபி

    எஸ்.பி.பி தான் கரையோரக்காற்று பாடியது, திருத்தி விட்டேன், நன்றி

    வணக்கம் கார்த்திகேயன்

    நீங்கள் கேட்ட பாட்டு கோடை மழையில் வந்தது. மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு, நீங்கள் சொன்னது போல படத்தின் உள்ளடக்கத்தைப் பார்க்காமல் ராஜா உழைத்ததால் பல பாடல்கள் படத்தோடு சுருண்டு போய் விட்டன.

    incissor said...

    oru naal andha orunaal from devadhai. movie'il mattume Raja adi eduthu koduppar. cassetteil illai.//

    ஒரு நாள் அந்த ஒரு நாள் அருமையான பாடல் அல்லவா அது, மிக்க நன்றி நண்பரே அதையும் பின்னர் இணைத்து விடுகின்றேன்.

    வணக்கம் ரவிஷங்கர்

    ராஜாவின் பாடல்களை வித்தியாசமாக கொடுக்கணும்னு இதைத் தந்தேன். அந்த ஸ்டில்ஸ் ஐ நாடோடித்தென்றல் டிவிடியை இயக்கி விட்டு நானே எடுத்துக் கொண்டேன்.

    ReplyDelete
  26. ”மங்கை நீ மாங்கனி” பாடல் இப்போது ரொம்பப் பிடித்து விட்டது. அறிமுகத்துக்கு நன்றி.

    ReplyDelete
  27. தல "உறங்காத நினைவுகள்" படத்துல " மௌனமே நெஞ்சில்" என்று தொடங்கும் பாடல் ஒன்று ராஜா அடியெடுத்து குடுப்பாரு.. யேசுதாஸ் தொடர்ந்து பாடுவாரு.. படத்துல சிவகுமார் ராஜீவுக்கு பாட்டு சொல்லி தருவது போல சீன்.. அத விட்டுடீங்களே :-)

    ~ ரவிசங்கர் ஆனந்த்

    ReplyDelete
  28. அதே போல "ராஜாவின் ரமண மாலைல" .. "அண்ணாமலை உன்னை தன்னால் அழைத்து.." என்று பவதாரினிக்கி அடி எடுத்து குடுப்பார்.. ஆனா முழு பாட்டையும் அவரே தான் பாடி இருப்பாரு

    ~ரவிசங்கர் ஆனந்த்

    ReplyDelete
  29. //நாங்களும் எங்களால் முடிந்தளவு ஏதாவது கிறுக்குகிறோம் வலைப்பதிவுகளில்....நீங்க அடிக்கடி வந்து கருத்துக்களை சொன்னால் தானே மேற்கொண்டு என்ன பண்ணலாம் என்று ஜோசிக்கலாம்,வருகைக்கு அனுமதி இலவசம், எப்பொழுதுமே கதவுகள் மூடப்படுவதில்லை.//

    ReplyDelete
  30. தல, அப்டியே "கரையெல்லாம் செண்பக பூ " படத்துலேந்து " ஏரியிலே எலந்த மரம்" பாட்டையும் சேத்துகோங்க

    ~ ரவிசங்கர் ஆனந்த்

    ReplyDelete
  31. சிவகுமார் ராஜீவுக்கு பாட்டு சொல்லி தருவது போல சீன்.. அத விட்டுடீங்களே :-)

    ~ ரவிசங்கர் ஆனந்த்//

    தல

    உங்களின் மேலதிக பரிந்துரைக்கு மிக்க நன்றி கண்டிப்பாக இவற்றி இன்னொரு தொகுப்பில் சேர்க்கிறேன், கூடவே தேவதை , கரையெல்லாம் செண்பகப்பூ பாடல்களையும்.

    பிரபா said...

    //நாங்களும் எங்களால் முடிந்தளவு ஏதாவது கிறுக்குகிறோம் வலைப்பதிவுகளில்//

    ஆகா வாங்கோ வாங்கோ ;)
    உங்கள் பதிவுகளைப் படிக்காமல் இல்லை, இனிமேல் பின்னூட்டமும் வைக்கிறேனே.

    ReplyDelete
  32. ஆஹா புது புது அர்த்தங்கள் படத்திலிருந்து இரண்டு பாடல்களையும் சேர்த்துகோங்க " கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே" beautiful raaja " எடுத்து நான் விடவா" ஆ ஜும்க்கு ஜுஜும்க்கு

    ~ ரவிசங்கர் ஆனந்த்

    ReplyDelete
  33. http://www.youtube.com/watch?v=zNQnOtn3vDg&feature=related

    ReplyDelete
  34. வணக்கம் மணி

    உங்கள் மூலம் தான் அந்த அரிய வீடியோ இணைப்புக்கள் கிடைத்தது மிக்க நன்றி.

    ReplyDelete
  35. வணக்கம், எல்லோர்க்கும் எப்படியும் ஏதாவ்தோரு நல்ல விஷயத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானமாக செய்து வரும் மனமாஎந்த பாரட்டுதல்களுக்குரிய உங்களிடம் ஒரு வேண்டுகோள்! தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்!! இது ஒரு மொத்த இனத்தின் வாழ்வாதார போராட்டத்துக்கு நம்மால் முடிந்த உதவி!

    ReplyDelete
  36. \\காதலுக்கு பாட்டெதற்கு பாட்டெதற்கு\\ idhu ennidam illaadha paadal. enakku email moolam anuppinaal migavum magizhchiyadaivaen.
    Nandri.

    ReplyDelete
  37. நண்பரே,

    முதல்மரியாதையில் வைரமுத்து பேசிய பகுதி உங்களிடம் உள்ளதா?

    அதே போல்

    மாவீர‌ன் ப‌ட‌த்தின் ஆடியோ கேச‌ட்டின் ஆர‌ம்ப‌த்தில் ர‌ஜினிகாந்த் பேசியிருப்பார், அது உங்க‌ளிட‌ம் இருக்கா?

    ReplyDelete
  38. வணக்கம் நண்பரே

    வைரமுத்து, ரஜினி குரல் அறிமுகங்களை நானும் தேடுகின்றேன். என்னிடம் கைவசம் அவை இல்லை.

    ReplyDelete